தமிழர் திருநாளும் , தமிழர்களின் பெருமைகளும்..! 001

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர் திருநாளும் , தமிழர்களின் பெருமைகளும்..! 001

தமிழர் திருநாள் 

முன்னுரை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழர் திருநாளே பொங்கல் திருநாள். 

பொருளுரை :

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும். 

பொங்கல் பண்டிகை:

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ' பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும் தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை முதல் நாளான பொங்கல் பண்டிகைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
வியர்வையை நிலத்தில் சிந்தி உலகிற்கே உணவளிக்கும் தெய்வத்தொழிலாற்றும் உழவர்களின் திருநாளை அனைவரும் தமிழர் திருநாளாக கொண்டாடுவது மரபு.
விவசாயத்தின் மகிமையை இத்தினத்தில் நினைவு கூறுவதாக தை பதினான்காம் நாள் இப்பண்டிகை தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

‘உழ­வுக்­கும் தொழி­லுக்­கும் வந்­தனை செய்­வோம்’ என்று தன் பாட்­டி­லும் உழ­வுத்­தொ­ழி­லுக்கு முத­லி­டம் தந்­தார் மகா­கவி பாரதி.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.’
என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் எல்லோரும் உழவர்கள் பின்னே சென்று கொண்டிருப்பவர்கள் தான்.!
உழவு இல்லையேல் உணவு இல்லை, உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரீக வாழ்வு நோக்கி நகர்த்தியிருக்கிறது. காட்டுவாசிகளான நம் ஆதி மூதாதையர்கள் ஆற்றங்கரையோரமாய் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதினால் தான்.! 

எவ்வித மதத்தையும் சாராமல், இயற்கைக்கு நன்றி சொல்லும் மதசார்பற்ற விழாவாக பொங்கல்திருநாள் இருப்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. நம் முன்னோர்கள் இதனை மிகச் சிறப்பாக மூன்று நாட்களாகப்பிரித்து கொண்டாடி இருக்கிறார்கள். முதல் நாள் வேளாண்மைக்குத் தகுந்தாற்போல், வேண்டியபோது வெயிலையும், வேண்டிய போது மழையையும் தந்து உதவிய ஆதவனுக்கு நன்றி சொல்லுதல், இரண்டாம் நாள் வேளாண்மைக்கு உதவிய கால்நடையான நம் வீட்டு விலங்கான மாடுகளுக்கு நன்றி சொல்லுதல், மூன்றாம் நாள் இயற்கையை கண்டுகளித்து மகிழவும், பாரம்பரிய விளையாட்டுகள் என கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.!
காலங்காலமாக கிராமங்களில் மட்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நம் பண்பாடு விழாவான தைத்திருநாள் சமீபகாலமாக நகரங்களில் கூட விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. அதிலும், நம் பாரம்பரிய இனிப்புப்பொங்கல், கரும்புடன் சேர்த்து, நம் பாரம்பரிய உடை என, புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறார்கள் என்பது மிக்க மகிழ்வைத் தருகிறது.!
இந்த விழாவைப் பற்றிய செய்திகள், கொண்டாட்டங்கள் அனைத்தும் நம் அடுத்தடுத்தத் தலைமுறையினர்களுக்குக் கொண்டு செல்லுதல் மிக அவசியம். இன்னும் சொல்லப்போனால், அது நம்முடைய கடமை. நம் தமிழர் பண்பாட்டு விழாவான இவ்விழா சரியான முறையில் கொண்டாடப்படுவது அவசியம். எவ்வித மத சடங்கும் உள்நுழையாமல் பார்த்துக் கொள்ளுதல் நம் எல்லோரின் கவனத்தில் இருக்க வேண்டிய ஓன்று.!

 உழ­வில்­லை­யேல் உண­வில்லை. இதை உணர்ந்தே, உழ­வர்­கள் மட்டு­மின்றி தமி­ழர்­கள் அனை­வ­ரும் உழ­வுத்­தொ­ழி­லைப் போற்­றும் வித­மாக பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் ‘’தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். உலகிலும், இலங்கையிலும் பரந்து வாழும் தமிழர்களின் முக்கிய திருநாள் தைப் பொங்கலாகும். தமிழர்களின் முக்கியமான திருநாளில் தைமாதம் முதல் இடத்தைப் பிடிப்பதோடு முழுக்க முழுக்க இது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே கருதப்பட்டு வருகின்றது. சோதிட ரீதியாக பார்க்கும் போது சூரிய பகவான் புதிய ராசியில் பிரவேசித்தல் என்று கூறப்படுகின்றது.
உலகத்திலுள்ள மக்களின் அன்றாட தேவைகளுள் உணவு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. உலகிலுள்ள ஜீவராசிகளின் தேவையும் உணவாக இருக்கின்றது. அனைத்து மக்களும் வாழ்வதற்கு நெல் அரிசிச்சோறு தேவைப்படுகின்றது. இதன் நிமித்தம் உழவன் என்பவன் தன் உடம்பை வருத்தி உலக மக்களுக்கு உணவை வழங்குகின்றான். எனவே தைத் திருநாளை உழவர் திருநாள் என்றும் கூறலாம். உழவன் என்பவன் இல்லை என்றால் உலகமே பட்டினியாகும். அந்த விவசாயம் செழிக்க இயற்கை ஒத்துழைக்க வேண்டும். இயற்கை என்னும் போது சூரிய பகவான் ஒளியூட்ட வேண்டும். வீடுகளில் ஆலயங்களில் 30 நாட்கள் மார்கழிக் கோலம் போடுவார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நீராடிய பெண்கள் வீட்டு வாசலில், ஆலயங்களில் இந்த மாக்கோலத்தைப் போடுவார்கள்.
அந்த கோலத்தின் நடுவில் பசுவின் சாணம் கொண்டு பிள்ளையார் செய்து அதன் மேல் மல் ஒன்றும் வைத்து பூஜை செய்யப்படும். அதாவது தூபதீபம் காட்டி சூரியனுக்கு காட்டப்படும். இது 30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும். முப்பதாவது நாளில் சாணம் மூலம் செய்யப்பட்ட முப்பது பிள்ளையார்கள் காணப்படும். தை பிறக்கும் நாளன்று எல்லா இந்து வீடுகளிலும் அதிகாலையிலேயே துயில் எழுந்து விடுவார்கள். அதிகாலையில் ஐந்து மணியளவில் பசுவின் சாணத்தைப் பெற்று வீட்டின் முன் வாயிலில் பரவலாக பூசப்பட்டு செப்பனிடப்படும். அதன்மீது புள்ளிக்கோலத்தைப் போடுவார்கள். கோலங்களில் ரங்கோலி, புள்ளிக்கோலம் என இருவகையான கோலங்கள் வழக்கத்தில் காணப்படுகின்றது. தைத் தினத்தன்று பொதுவாக புள்ளிக்கோலம் இடுவது வழக்கமாகி வருகின்றது. கோலம் இடுவது ஊர்வன எறும்பு போன்றவைகளும் உணவு பெற்றுக் கொள்வதற்கு வழியாகும். வீட்டில் கோலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் கரும்பு போன்றவற்றை நிறுத்தி அதில் மாவிலை, தோரணம் என்பனவற்றைத் தொங்க விடுவார்கள். பின்னர் நிறைகுடத்தின், இரு மருங்கிலும் மங்கள விளக்கு வைக்கப்படும். சூரியன் உதயமாகும் போதே பொங்கல் பானை அடுப்பில் வைக்கப்படும். இந்த பொங்கல் அரிசி, பயறு, சீனி, சர்க்கரை, நெய் போன்றவை சேர்க்கப்பட்டு பாற்சோறாக முழுமை பெறும்.
இந்த சர்க்கரை சாதம் தயார் செய்யப்பட்டு படையல் செய்யப்படும். அந்த படையலுடன் கொழுக்கட்டை, பழவகைகளும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அதிகாலையிள் சூரிய உதய வெளிச்சத்தைக் காணும் போது தீபாராதனை காட்டப்படும். அன்று எல்லோரும் சூரிய பகவானை , இயற்கைக் கடவுளை நன்றியோடு வணங்குவார்கள். இந்நிகழ்வை சூரிய பகவானுக்கான திருவிழா என்றே கூற வேண்டும். அதே நேரம் உலகிற்கு ஒளியூட்டுபவன் என்ற வகையில் உலகில் வாழும் இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம் என்றே சூரியனைக் கூறலாம். உழவர்களின் முக்கிய திருவிழாவாக இது கொண்டாடப்படுவதுடன், புதுப்பானை வாங்கப்பட்டு உழவர்களினால் சேர்த்து வைக்கப்பட்ட புத்தரிசி இட்டுபொங்கலிடப்படும். இதன் போது வயலிலும் பொங்கல் வைப்பார்கள். வயல்களில் நெல் அறுவடையின் போது நெல்லானது மனிதனுக்கும் வைக்கோலானது பசுவிற்கும் போய்ச் சேருகின்றது. நிலமும் ஏங்கக் கூடாது அதனாலேயே நெல்லின் அடிப்பாகம் நிலத்தோடு காணப்படுகின்றது.

தைத்திருநாளன்று படைக்கப்பட்ட பண்டங்கள் அயல் வீட்டுக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றது. மற்றையோரும் வந்து தங்களின் வீடுகளிலும் இந்த உணவை உண்பார்கள். சொந்தங்கள் வந்து உணவைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அன்றைய தினம் குடும்பத்தார் சகிதம் கோவிலுக்குச் செல்வது இந்துக்களின் முக்கிய கடமையாகும். புதிய ஆடை தரித்து அர்ச்சனைத் தட்டுக்களுடன் அனைவரும் குடும்பத்தார் சகிதம் செல்வதைக் காணக் கூடியதாக இருக்கும். அன்றைய தினம் நாட்டின் இந்துக் கோவில்களில் விஷேட பூஜைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கும்.
தை பிறந்து மறு நாள் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடுவார்கள். அதாவது இந்து மக்கள் தாய்க்கு அடுத்த படியாக பசுவை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனால் தான் ‘’கோமாதா என் குலமாதா’’ என்கின்றோம்.
எமது நாட்டைப் பொறுத்தவரை கிராமங்களுக்கு கிராமம் இந்தத் திருவிழா வித்தியாசப்படும். சில கிராமங்களில் ‘’போகிப்பண்டிகை’’ என்று கொண்டாடுவார்கள். தைப் பொங்கலுக்கு முதல் நாள் இது இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
அன்றைய தினத்தில் சில இடங்களில் பழைய புடவை, எரித்தலும் மற்றும் சில இடங்களில் மறைந்த தமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும் இது கொண்டாடப்படுகின்றது. இதை தென்புல வழிபாடு என்று குறிப்பிடுகிறனர் 

 இயற்கைக்கு, நன்றி செலுத்துவதே தைத்திருநாள். இயற்கையின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் பெருநாள்.

தமிழர் திருநாள் வரலாற்று நோக்கு

தமிழர் வரலாற்றில் சங்ககாலத்தில் இருந்தே மருதநிலமும் உழவர்களும் உழவு தொழிலின் பெருமைகளும் அதிகம் பேசப்படுகின்றன மாரி மழை முடிந்து வயல்களில் விளைந்த புதுநெல் கொண்டு புது வாழ்வை ஆரம்பிப்பதாக நம்புகிறார்கள்.
உலகின் எல்லா உயிர்களது வாழ்வியலில் விவசாயம் முக்கியத்துவத்தையும் அத்தொழிலின் மேன்மையையும் இந்நாளில் உலகமே நினைவில் கொள்ள வேண்டும் என்பது தார்ப்பரியமாகும்.
இவ்வுலகம் நிலை பெற சூரியன் சக்தி முதலாகும் சூரியனின்றி பயிர்கள் வளராது உயிர்கள் செழிக்காது மழையும் பொழியாது ஒளியும் கிடைக்காது.
இந்நாளில் சூரியனை வணங்கி புது பானையில் புது அரிசியில் பால், சர்க்கரை, பயறு, நெய் மற்றும் தேன் சேர்த்து பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிடுவர்.
அதற்கு அடுத்த நாள் ஏர் இழுக்கும் மாடுகளுக்கும் பால் தரும் மாடுகளுக்கும் பட்டி பொங்கல் இடுவதும் வழக்கமாகும். இச்சம்பிரதாயங்கள் தமிழர் வாழ்வியலின் அழகியலை எடுத்துக்காட்டுகின்றன.

சக உயிர்களையும் மதித்து உணவளித்து பேணும் தமிழர் பண்பாடு போற்றுதலுக்குரியதாகும்.

தமிழர் திரு நாள் பல அர்த்தமுடையதாகும் “விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பார்கள்.
இவ்வுலகின் எல்லா உயிர்க்கும் உணவளிக்கும் விவசாயிகளை உழவர் திருநாள் நினைவு கொள்வதாக அமையும். மேலும் தை மாதத்தில் வரும் தைப்பூசம் அன்றே இவ்வுலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது.
மேலும் வருடம் முழுவதும் நல்ல நீரும் உண்ண உணவும் கிடைக்க வேண்டும் மும்மாரி பொழிய வேண்டும் என நம் மூதாதையர் இயற்கையே இறைவன் என கொண்டு சூரியனை வழிபடவும் இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் நமது சமுதாயத்தில் பல பண்டிகைகள் காணப்பட்டாலும் தமிழர்களுக்கென உள்ள முக்கிய பண்டிகை தைத்திருநாளாகும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற திருமூலரின் வாக்குக்கிணங்கிய முழு அர்த்தம் தரும் பண்டிகை தமிழர் திருநாளாகும்.

தமிழர்களின் வாழ்வியல் மிக அழகானது இயற்கையை நேசிப்பது, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது, தன்னுயிர் போல மண்ணையும் பாதுகாப்பது என உலகத்திற்கே அறத்தை போதித்து வாழ்ந்து காட்டிய இனமாகும்.
வயலும் வாழ்வும் உழைப்பும் தழைப்பும் என்பது தமிழர்களின் ஆகச்சிறந்த வாழ்வியல் தானும் வாழ்ந்து தன் உழைப்பின் செழிப்பை தன் சுற்றத்திற்கும் கொடுத்து இயற்கையை அளவு கடந்து நேசித்து வாழ்வது தான் ஆக சிறந்த வாழ்க்கை என்பதை புலப்படுத்துவதே தமிழர் திருநாளாகும்.

பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று  அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால்  நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்  கிடைக்கும் என்பது ஐதீகம். பொங்கல் பண்டிகை தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோலர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகின்றார்கள்.

*போகி பண்டிகை* போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருகக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். 

*பொங்கல் பண்டிகை* 
இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்று பெயரும் உள்ளது  புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். 

*மாட்டு பொங்கல்* 
உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து, வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கப்படுகிறது.மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

*கானும் பொங்கல்* காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் நாளாகும் பெண்கள் தங்களுடைய சகோதரரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கள்ளி பொங்கல், கணு பொங்கல், கானும் பொங்கல் என்று அழைப்பார்கள். 

*பொங்கல் கோலம்*

வட இந்தியாவின் ரங்கோலி கோலம் போன்று தமிழ்நாட்டில் உள்ள பெண்களும் பல விதமான ரங்கோலி கோலத்தை பொங்கல் மூன்று நாட்களில் போட்டு அசத்துவார்கள். வித விதமான கோலங்களை நமது தமிழ் பெண்கள் போடுவதை தமிழ் கலாச்சாரம் இன்றும் வரவேற்கிறது. 

*பொங்கல் விளையாட்டு*

பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று காலம் காலமாக கபடி, சிலம்பம், உறியடி, மாட்டு வண்டி பந்தயம், ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும்.

முடிவுரை

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்துவது பொங்கல் திருநாள் ஆகும். நண்பர்களையும் உறவினர்களையும் உபசரித்தல், உழவுத்தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமே பொங்கல் பண்டிகையாகும். 

   - ஜஸூரா ஜலீல்
   மலேசியா