அண்ணல் அம்பேத்கர் 028

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அண்ணல் அம்பேத்கர் 028

அண்ணல் அம்பேத்கர்

தமிழ் புத்தாண்டு அன்று பூத்த புது மலரே!

தரணியில் உயர்ந்த தத்துவ ஞானியே!

கோணிப் பையில் அமர்ந்து படித்ததை கோபமாகக் கொள்ளாது, கொள்கையாக்கிய குணச் சித்திரமே!

ஆசிரியர் பெயரைத் தன்னுடன் சேர்த்து, ஆசிரியரை மதிக்காத சமூகத்தின் கலங்கரை விளக்கே!

வறுமையில் பிறந்து, சாதிக் கொடுமையில் வளர்ந்து, பரோடா சென்ற அயலகப் பெட்டகமே!

வறுமையை உடன் பிறந்ததாக, தீர்க்க முடியாததாக எண்ணாதே என்று சொன்ன தீர்க்க தரிசியே!

தலித்துகள் தலைநிமிர சட்டம் வகுத்த சட்ட மேதையே!

தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட தேசத்தின் ஒளி விளக்கே!

ரூபாய் பட்ட ஆய்வில் வென்ற ரிசர்வ் வங்கியே!

பொருளாதாரத்தின் காவலனே! சமூகநீதிப் புரட்சியாளனே!

பலிபீடங்களில் வெட்டப்படும் ஆடாக அல்லாது சிங்கமாகச் சீறிய தன்மானச் சிங்கமே!

சாதி, மத, பேதம் போற்றும் அரசியல் கட்சிகளுக்கு சமத்துவ, சமூக நல்லிணக்கம் கற்றுத்தந்த ஆசானே!

உன் பிறந்தநாள் புனித நாள்!

மனித சமூகம் புனிதமடையும் மகத்தான நாள்!


கவிஞர்.பா. தங்கேஸ்வரி