பெண்ணே நீயும் பெண்ணாய்...! 021

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்ணே நீயும் பெண்ணாய்...! 021

பெண்ணே! நீயும் பெண்ணாய்….


வானம் வசப்படும்
வா நம் வசப்படும்.
பெண்ணே! நீ நினைத்தால். சிங்கம் நிகர் பெண்ணே! உன்னை சிங்கம் என்று சொல்வது உன் வீரத்தை மெச்சி மட்டும் அல்ல. சிங்கம் தனியாகத்தான் வரும். ஆம்! நீ தனித்துவமானவள். தனியாகச் செல்ல துணை தேடி பதுங்கியது போதும். கணவன் என்ற பசுத்தோல் போர்த்திய புலியுடன் வாழ வேண்டிய நிர்பந்தம். மகன் என்ற கல்லாகிப் போன உறவுடன் பித்தாகி நீயும் பின் தொடர வேண்டிய கட்டாயம் என்று மட்டும் இருந்து விடாதே. நீ எப்போதும் யாரையாவது துணையாகாகக் கொண்டு, யாருக்காகவாவது வாழ்ந்து கொண்டிராதே. கூட்டினை விட்டு வெளியே வா. பந்த பாசக் கூட்டினை விட்டு வெளியே வா. உனக்கென்று தனி முத்திரை பதித்து விடு.
        காக்கைபாடினியாரும், நச்செள்ளையாரும், வெண்ணிக்குயத்தியாரும் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லை. அவர்களே புலவர்கள் ஆனார்கள். போரை நிறுத்தினார்கள். போரிட்டார்கள் எனில் உனக்கு ஏன் தயக்கம்?
       ஏட்டையும்   பெண்கள் தொடுவது பாவம் என்று எண்ணியிருந்தவர்கள் மாண்டு போனார்கள்.
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார்கள்.
     அடுப்பூதும்  பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றவர்கள் எங்கோ சென்றார்கள்.
எழுந்து வா பெண்ணே!
புது யுகம் படைப்போம்!
பாரதி கண்ட புதுமைப்பெண் நீயாக இரு.
பார் போற்ற நீயும் வாழ்ந்து காட்டு.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு.
உனக்கதை அறிவதில் தடையேது உண்டு?
       வானில் செல்லும் வானூர்தியைப் பார்த்து மகிழ்ந்து கொண்டாடிய, விடி வெள்ளி பார்த்து, விடிகாலை எழுந்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலமிட்ட பெண்ணாய் நீயிருக்க, வானில் சென்று, வானை அளந்து, வானிலே உயிர் நீத்த கல்பனா சாவ்லா உன் முன் மாதிரி. வீட்டை ஆள அதிகாலை முதல் இரவு வரை போராடிக் கொண்டு நீயிருக்க, இந்தியாவை ஆண்ட இந்திராகாந்தியும், இலங்கையை ஆண்ட பண்டார நாயகாவும், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவும் இரும்புப் பெண்மணிகளாய். இவர்கள் உன் முன் மாதிரி.
      பெண், உடல் வலிவில் ஆணை விட  இளைத்தவளாம். யார் கூறியது? பளுதூக்கி வென்ற மல்லேஸ்வரி உனக்கு முன் மாதிரி.
வேப்ப மர  உச்சியில் இருப்பது பேயுமல்ல.
நீ வீதியில் சென்றால் உன்னைப் பழிப்பவர்கள் மனிதர்களுமல்ல.
இதைக் கண்டு நீ வீட்டுக்குள்ளே பதுங்கி இருந்து வெம்பி விடாதே.
"ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் வாழ்வம் இந்த நாட்டிலே" என்ற கவிதை வரிகளைக் கவிதை வரிகளாய் மட்டும் பார்க்கப் பிறந்தவள் அல்ல. சம உரிமையைத் தருவதாய் சொன்னவர்கள் தந்தார்களா? வேலை வாய்ப்பில் கூட 33 சதவீதத்தைத் தான் பெற்றுள்ளோம். கணவனை இழந்தால் பெண் விதவையாகிறாள். மனைவியை இழந்தால் ஆண் புது வாழ்வைத் தொடங்குகிறான். கைம்பெண்ணாய் பொட்டழித்து, பூவழித்து, மாங்கல்ய மாண்பழித்து, வெளியே சென்றால் தரித்திரம் என்போரை தள்ளிச் செல். பொட்டும் பூவும் ஆண் பெண்ணுக்குக் கொடுத்த அடையாளம் அல்ல. இயற்கை அளித்த கொடை. கணவனை இழந்தால் பொட்டையும் பூவையும் கணவனுக்கு  அளிக்க வேண்டாம் நன்கொடை.
பெண்ணே! உன்னை நதியென்பார். நதிகளுக்கு உன் பெயர் வைப்பார். நதியாக நீயும் ஓடிக்கொண்டே இரு. குட்டையாகத் தேங்கி விடாதே.
மலைகளுக்கு உன் பெயர் வைப்பார்.
மலையாக நீயும் உயர்ந்து நில்.
தெய்வங்களில் பெண் உண்டு.
பெண்களிலும் தெய்வம் உண்டு.
வணக்கத்திற்குரிய வனஜாவாக நீயிருக்கும் வரை.
சூரியப் பூவை நீ பறிக்கலாம். வீட்டு விளக்கை ஏற்றினால் தான் பெருமை.                   அந்நிய நாட்டு பகட்டு கொண்டு,
ஆடம்பர மோகம் கொண்டு,
இல்லற வாழ்வை அழிக்காதே. 
"தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்".
என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து பார். உன் வாழ்க்கை உன் கையில்.
வலி தாங்கும் வலிமை படைத்தவள் நீ!
இன்னோர் உயிரை தன்னுள் சுமந்து, உலகுக்கு அளிக்கும் வல்லமை படைத்தவள் நீ!
அதிசயமே அசந்து போகும் நீ ஒரு உலக அதிசயம்.
வலிமை உணர்ந்து போராடு.
வாழ்வை நீயும் கொண்டாடு.

இனிய மகளிர் தின வாழ்த்துகள்

.             - தங்கேஸ்வரி , அவினாசி,