பா ரதம் தந்த பா ரதி

பாரதியார் நினைவு தினம் கவிதை

பா ரதம் தந்த பா ரதி

பா ரதம் தந்த பா ரதி

வருகின்றேன் மானிடா
    வாராது இருப்பேனா
தருகின்றேன் “பா” ரதத்தை
    பாரதியாய் உலகினிலே

இயற்கைகள் வளமிருந்தும்
   இன்னல்கள் தீரவில்லை
செயற்கையிலே உழல்கின்றாய்
   செவ்வாழ்வை சிதைத்திடவே

நாடாளும் அரசியரைப்
   பெண்டாளத் துடிக்கின்ற
காமுகரை வீழ்த்திடவே
   சேவகனாய் வந்திடுவேன்

நாற்காலி சண்டையிலே
   நாகரீகம் அற்றுப்போய்
பாதாளம் வீழ்கின்ற
   பாதகரை நானழிப்பேன்

வேதாளம் மரமேற
   வேங்கைகள் நடுங்கிட்டால்
கண்ணாரக் காண்பேனா
   காற்றாக வந்திடுவேன்

தரமில்லா நரிக்கூட்டம்
   தாரைகள் முழங்கிடவே
தெருவினிலே அலைந்திட்டால்
   தீயாக மாறிடுவேன்

வீழ்வான் இவனென்று
   இறுமாப்பு கொண்டாலோ
விதையாகி வீழ்ந்திடுவேன்
  வித்தைகள் செய்திடுவேன்

தர்மத்தின் பாதையிலே
   தடையாக இருப்போரை
தயங்காமல் பாக்களினால்
   புரட்சிகளும் செய்திடுவேன்

வீழாதே மானிடனே
   வீழ்ச்சிகளை வேராக்கி
விருட்சமாய்  எழுந்திடுவாய்
   விதையாக நானிருப்பேன்

வீழாதே மானிடனே
   விதையாக நானிருப்பேன்
        
        “பா” ரதி

புவனா பிரகாஷ் 
கோவை