புண்ணிய புரட்டாசி

புரட்டாசி மாதம் சிறப்புகள்

புண்ணிய புரட்டாசி

புண்ணிய புரட்டாசி மாதம்

பழமை வாய்ந்த
மகத்துவம் நிறைந்த மாதம்!
திருநாமம் அணிந்து,
மஞ்சளாடை உடுத்தி,
மண்பானையில் தளிகை படைத்து,
துளசி மாலை பெருமாளுக்கு சார்த்தி,
தூய மனதுடன் திருப்பதிக்கு 
*பாதயாத்திரை* செல்லும் மாதம்!

12 நாள் பிரமோற்சவம்,
7 நாள் தெப்போற்சவம்,
வண்ண விளக்குகள் அலங்காரம்,
180 வருட சம்பிரதாயம் கண்ட,
கருடன் மகிழ்ந்து வட்டமிட,
சென்னையிலிருந்து தானமாகும்
9 அடி குடையின் நிழலில்,
8 குடைகள் பின்புறம் ஆடி வர,
*கோவிந்தா!* பக்தி முழக்கத்துடன்,
கருடசேவை/புஷ்பம்/முத்தங்கி சேவை
மனோரஞ்சிதம்/குருவிவேர்மாலைகள்
வீதிவுலா அரங்கனை பேரெழில் கூட்ட,
ரங்கன் நடையழகு,
சதிராடும் குடையழகு,
சக்கரம்/சங்கு படையழகென,
காண்போரை லயிக்க வைக்கும் மாதம்!

கருடன் கொணர்ந்த *கருடாத்ரி*
ருஷ்பாசுரனால் *ருஷ்பாத்ரி*,
நாராயணன் தரும் *நாராயணாத்ரி*,
நரசிம்மன் பெயரால் *சிம்மகிரி*,
அஞ்சனை தவத்தால் *அஞ்சனாத்ரி*,
ஆதிசேஷனின் *சேஷாத்ரி*,
ரிடபாசுரனால் *ரிஷபகிரி* யெனும்
ஏழுமலைகள் சூழ்ந்த ஏழுமலையை...
கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்கள் காக்க,
இந்திரன் கோப மழையை தடுத்து,
7 நாட்கள் கோவர்த்தனகிரியை
விரலால் தாங்கி பிடிக்க,
விரல் பட்ட இடங்கள் பாதம் படவும்,
காண வரும் பக்தர்கள் சுமக்கும் வரம்
*கோவர்த்தனகிரி* பெற்றிட,
ஏழுமலையான அம்மலை மீதிலே,
பாதம் வைத்து பயணித்து,
மேல்மலையினிலே வாசம் செய்ய,
*ஏழுமலையானாக* நின்ற மாதம்!

புணர்ப்பு தோஷமெனும்
இல்லற வாழ்வு தடை செய்யும்,
சந்திர சனி கிரக சேர்க்கை நீங்கிடவே...
சந்திர ஸ்தலமாம் திருப்பதி சென்று,
புரட்டாசி பௌர்ணமியுள்ள சனிநாளில்,
*மஞ்சளாடை* தரித்து,
மண்பாத்திரத்தில் தளிகையிட்டு,
பெருமாள் படம் வைத்து,
வேங்கடேச அஷ்டகம் சொல்லி,
துளசியிலையால் அர்ச்சிக்க,
புணர்ப்பு தோஷம் நீங்கி,
*திருமணம்* கை கூடும் மாதமிது!

மாவிளக்கு வழிபாடு,
மரத்தை வேங்கடவனாக நினைத்து,
தேனும் தினைமாவும் படையிலிட்டு,
வேடனொருவன் பூஜிக்க,
அவனுக்கு பிரசன்னமாகி அருள்செய்த
வேங்கடவனை,
இடித்த பச்சரிசி/ஏலம்/எள்
அச்சுவெல்லம் கலந்து விளக்காக்கி,
ஏழுமலையாக பிரதிஷ்டை செய்து,
நெய் தீபம் வேங்கடவனாக ஏற்றி பணிய
*முக்தி /செல்வ செழிப்பு* கிட்டும் மாதம்!

திருவோண நட்சத்திரத்தில்,
திருமலையில் பெருமாளாக ஜனனமாகி,
மகாவிஷ்ணுவின் அவதாரமான
வேதாந்த தேசிகர்
*காஞ்சிபுரத்தில்* அவதரித்த மாதம்!
ஊமையான குயவன் பரிசுத்த பக்தி
மெச்சி/களிமண் பிரதிஷ்டை/களிமண்
பூக்களின் அர்ச்சனையை  ஏற்று,
மண்பானை தயிர்சாதப் படையலேற்று,
தங்கப்பூ படைத்த தொண்டைமானுக்கும்,
பீமய்யாவிற்கும் கனவில் காட்சி தந்து,
திருமலையில் *மண்பானை தளிகை*
படையல் வழக்கமான  மாதம்!

கோகுலத்து கண்ணன்
கம்சன் ஏவிய மாயாவை அழிக்க,
சனீஸ்வரன் கண்ணனின் அருள் பெற,
அடுத்து வந்த ஹோலிக்காவை
உக்கிரபார்வை பார்த்து பஸ்பமாக்க,
சனிபகவானின் கெடுபலன் 
மறையவென /திருமால்  வழிபாடு 
*சனிக்கிழமை* வழிபாடான மாதம்!

திருமலையில் நாராயணன்
பிரமோற்சவம் காணும் மாதம்!
ஐந்து சனிக்கிழமைகளாக
சிறப்பு தளிகை படையலிட்டு
பெருமாளை வழிபடும் மாதம்!
அலைமகள்/கலைமகள்/மலைமகள்
சிறப்புற *நவராத்திரி* கொலு வைத்து
*விஜயதசமி* திருநாளும் காணும் மாதம்!

ஆடி மாரியுள்ள மண்ணுக்கும்,
புரட்டாசி பெருமாளுக்குமான மாதம்!
கிருஷ்ணனுக்கு மார்கழியும்,
வேங்கடவனுக்கு புரட்டாசியுமான மாதம்!
*ஹரி/ஹரி* யென ஏழு முறை சொல்லி,
திருமண் திலகமிட்டு/திருப்பல்லாண்டு/
திருப்பள்ளியெழுச்சி/விஷ்ணு
சஹஸ்ரநாமம்/சிற்றஞ் சிறுகாலையென
தொடங்கும் *29 வது திருப்பாசுரம்*  பாடி
ஸ்ரீனிவாசனை வணங்கும் மாதம்!

தானியம்/காய்கறிகளை 
நாடும் சைவ மாதம்!
ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதியில்
அலைமகள்/கலைமகள்/
மலைமகளை வழிபடும்
வியாசர் நடைமுறைப்படுத்திய
நவராத்திரி விழா காணும் மாதம்!
முன்னோர்களை வழிபட
மஹாளய அமாவாசை வரும் மாதம்!
வீடுகளில் கொலு வைத்து
எட்டு நாட்கள் போரிட்டு /9 ஆவது நாள்
*மகிஷாசுரனை* வதம் செய்த வெற்றி
பெற்ற விஜயதசமி கொண்டாடும் மாதம்!

புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திரத்தில்
வரும் பௌர்ணமியில்,
கோதுமை கலந்த வெல்ல அப்பம்
நிவேதனம் செய்து /உமா-மகேஸ்வர விரதம் கடைப்பிடிக்கும் மாதம்!
எமனின் கோரைப்பற்களான
வசந்த ருது/சரத் ருதுவில் வரும்
நோயிலிருந்து தப்பிக்க/18 கைகள்,
ஆயுதம் தாங்கி வீரியம் உடைய
*சண்டிகையை*  வழிபடும் மாதம்!

கருணை மிகுந்த
கிரகதோஷம் போக்கும் ஆஞ்சநேயரை 108 போற்றி கூறி/ வழிபடும் மாதம்!
1180 பல்லவர்/சோழர்/பாண்டியர்/
சாளுக்கியர்/கிருஷ்ண தேவரின்
கல்வெட்டுகள் சூழ்ந்த 
*புஷ்கரணி தீர்த்தத்தில்* குளித்து
பாவம் தீர்க்கும் மாதம்!

வேம்...பாவம்/கடா...அழித்தல்/
ஈசன் ....மிகப் பெரிய கடவுள்
என பொருள்படும் வெங்கடாசலபதியை,
ஆதிசேஷனின் 7 தலைகள்
ஏழு மலைகளாக மாற்றம் கண்ட மாதம்!
வெயிலும்/காற்றும் குறைந்து
மழை ஆரம்பிக்கும் மாதம்!

புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில்,
காரியசித்தி உண்டாக தூய்மையுடன்
 விநாயகரை வழிபட..
சித்தி விநாயக விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில்,
சர்வ மங்கலங்கள் கிட்ட
பரமேஷ்வரனை நினைத்து,
*சஷ்டி லலிதா* விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில்,
குடும்பம் செழிக்க/சிவனுடன்
விநாயகரை வழிபட்டு,
*துர்வாஷ்டமி* விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத. வளர்பிறை சப்தமியில்
சந்ததி செழிக்க/சௌபாக்கியம் கிட்ட,
12 முடிச்சுள்ள சரடினை வலக்கையில்
கட்டிய பின் உமா மகேஷ்வரன் வணங்க
*அமுக்தாபரண* விரதமிருக்கும் விரதம்!

புரட்டாசி மாத அஷ்டமி முதல் 16 நாட்கள்
வறுமை நீங்கி/வாழ்க்கை வளம் பெற,
லட்சுமி தேவியை பிரார்த்திக்க,
மஹாலட்சுமி விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில்,
சித்திகளை பெற/சூரியனை பூஜித்து,
பழுப்பு வர்ண பசுமாட்டினை,
ஆபரணங்களால் அலங்கரித்து,
*கபிலாசஷ்டி* விரதமிருக்கும் மாதம்!

திருவண்ணாமலை வேணுகோபாலசாமியை,
அபிஷேகம் செய்து/வணங்கிட..
வாழ்வில் தடைகள் நீங்கும் மாதம்!

விழுப்புரம் /திருக்கோவிலூர்
சுண்ணாம்பு/மூலிகைகளாலான,
ஆதிசேஷன் மீது சயனித்த
ரங்கநாதரை /இன்பம் தடையற
கிட்டிடவே வணங்கும் மாதம்!

காரைக்கால்/நித்ய கல்யாண
பெருமாளை/சகஸ்ரநாம பூஜை
செய்ய/நோயற்ற வாழ்வுடன்,
வற்றாத செல்வம் கிட்டும் மாதம்!

திருமண வரன் வீடு தேடி வர,
*திருவெண்காடு*
சுவேதாரண்யேசுவரரை/வீட்டின்
 பெரியவர்கள் வணங்கும் மாதம்!

புதன் கிரகத்தின் அதிதேவதை
மகாவிஷ்ணுவின் அருளினை,
அன்னதானம் செய்து பெறும் மாதம்!

எள்/எண்ணைய் தீபமிட்டு,
சூரிய நாராயணனை வணங்க,
சூரியன்/புதனின் அனுக்கிரகம்,
குறைவின்றி கிடைக்கும் மாதம்!

கலியுகம் முடியும் வரை,
சிலாரூபமாக...அனுதினமும்
ஆயிரக்கணக்கில் பக்தர்களை
வரவழைத்து/திருப்பங்களை
வாழ்வில் வாரி வழங்கும்,
புரட்டாசி மாதம் புண்ணியம் பெற
பத்மாவதி பதியினை,
ஸ்ரீபாலாஜி ஏழுமலையானை,
வணங்குவோம்! வளம் பெறுவோம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
M.Sc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
முதுகலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513