ரோமியோ ஜூலியட் தமிழில்....

ரோமியோ ஜூலியட் தமிழில்

ரோமியோ ஜூலியட் தமிழில்....

Shakespeare’s
Romeo and Juliet

தமிழ் மொழியாக்கம்

முன்னுரை

ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞன் , நாடக மேதை ,  படைத்த ஒப்பற்ற காதலகாவியம் தான் ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகமாகும். இதன் அடிப்படையிலே அதன் பின்னர் எண்ணற்ற திரைப்படங்களும் நாடகங்களும்  தோன்றிக்கொண்டேயிருக்கின்றன என்பது வரலாறு. ஆனால் எது ஒன்றுமே ãலநாடகமான இதற்கு இணையாகாது என்பதுதான் நிதர்சனமான உண்மை

கதை சூழல் :

வெரோனா ஒரு அழகிய இனிய நகரம் .அங்கே இரண்டு பெரும் குடும்பங்களுக்கு இடையே தீராப்பகை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்று மாண்டேக் ( ரோமியோ குடும்பம் ) மற்றொன்று கேபுலட் (ஜூலியட் ) . இந்தப் பிரபுக்கள் குடும்பங்களின் குலப்பகை அந்த நகரத்தையே ஆட்டிப்படைக்கிறது. இவர்களின் பகை வெறியின் மீது நிகழும் வன்முறையில் தெறிக்கும் இரத்தம் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் நகரத்தின் அமைதியையும் குலைக்கிறது. நகரத்தின் நடு வீதிகளிளெல்லாம் பகைமை கரும்புகை வீசுகிறது.

 அந்த நகரத்தினை ஆட்சி செய்யும் இளவரசர் இரு குடும்பங்களையும் அழைத்து எச்சரிக்கிறார். இனியும் குல வன்முறை நகரத்தின் அமைதியை பாதிக்குமானால் சம்மந்தப்பட்டவர் நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறார். ஆனால் அதன் பின்னர் தான் பகை உச்சம் பெறுகிறது.

இன வெறி அறியா காதல் : 

ரோமியோ மாண்டேக் குடும்பத்தை சேர்ந்த பதினாறு வயது இளைஞன் அழகன் வீரன் . இவன் ரோசலின் என்ற அழகி மீது காதலில் விழுகிறான். அவள் கேபுலட் குடும்பத்தின் உறவினள். ஆனால் ரோசலின் அவளது காதலை அங்கீகரிக்கவில்லை. அவளது அன்பை பெறாத ரோமியோ ஒரு பைத்தியம் போல புலம்பிக் கொண்டு திரிகிறான். 

அவன் பெற்றோர்களுக்கு அது கவலையளிக்கிறது. காரணத்தை கண்டுபிடி என்று ரோமியோவின் நண்பர்களை  வேண்டுகிறார்ள். ரோமியோவின் நண்பர்கள் ரோசலின் என்ற அழகி தான் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். 

நண்பனுக்கு உதவும் பொருட்டு கேபுலட் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு மாறு வேடத்தில் ( முக ãடி அணிந்து செல்லலாம் ) என்று அவனை அழைக்கிறார்கள். அவன் மறுக்கிறான். அங்கே ரோசலின் வருகிறாள் என்று சொல்கிறார்கள். உடனே ரோமியே ஒப்புக் கொள்கிறான்.

நடன விருந்து :

கேபுலட் குடும்பத்தில் முகிழ்த்த இன்னும் பதினான்கு வயது நிரம்பாத அழகு மலர் ஜூலியட். இவளின் உறவினன் பாரிஸ் ( பெரும் பதவி வகிப்பவன் ) ஜூலியட்டை மணம் முடித்து தர வேண்டி அவளது தந்தை கேபுலட்டை அணுகுகிறான். அவர் வயதை காரணம் காட்டி முதலில் மறத்தாலும் ஜூலியட் அவனை விரும்பினால் அவனுக்கு மணம் செய்து தர தயார் என்று உறுதியளிக்கிறார். 

மேலும் தான் அன்று இரவு நடத்தும் நடன விருந்தில் கலந்து கொண்டு அவளது காதலைப் பெற முயற்சி செய் என்றும் அவனை ஊக்கப்படுத்துகிறார்
காதலர்களின் சந்திப்பு :
எதிரியின் நடன விருந்தில் ரோமியோவும் அவன் நண்பர்களும் முகத்தை மறைத்து முக  மூடி அணிந்து கலந்து கொள்கிறார்கள். 

ஜூலியட் மாடிப்படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வருகிறாள். அவளைப்பார்த்த விநாடியிலேயே ரோமியோவின் இதயம் அவனை விட்டு அவளிடம் போய் தஞ்சம் புகுந்து கொண்டது. நடனமரபுப்படி அவளது கையை முத்தமிட அனுமதி கேட்கிறான்.
கிண்டல் கேலிப் பேச்சுக்களலான அந்த உரையாடல் கடைசியில் உதட்டின் முத்தத்தில் முடிகிறது. இரண்டு முத்தங்களில் பாவங்கள் நீக்கப்படுகின்றன. ஆழமான காதல் தோன்றுகிறது.

 காதல் தோன்றிய பிறகு தான் இருவருமே தாங்கள் எதிரிகளின் வாரிசுகள் என அறிந்து திடுக்கிடுகிறார்கள்.
 
மீண்டும் சந்திப்பு  :

உடனே ஜூலியட்டைப் பார்க்க ஆவல் கொண்ட ரோமியோ  .நள்ளிரவிலேயே நண்பர்களை விட்டுப் பிரிந்து மீண்டும் அவளது அரண்மனை போன்ற வீட்டிற்கு வந்து யாருக்கும் தெரியாமல் மதிலேறி அவளது பால்கனியின் ஓரத்திற்கு வந்து இருளோடு இருளாக நிற்கிறான். இவன் நிற்பதை அறியாமல் ஜூலியட் தன் காதலை பிதற்றுகிறாள். 

அவளுடைய காதலை அறிந்து ரோமியோ அவள் முன் தோன்றுகிறான். இது தான் இருவருக்கும் தனிமையின் 

முதல் சந்திப்பு

ஷேக்ஸ்பியர் இந்த முன்னுரையை தந்து விட்டு  இரண்டு மணி நேரங்கள் இந்த மேடையை அதிர்ஷ்டமில்லா இந்த காதலர்களுக்கு விட்டு விடுங்கள் என்று பார்வையாளர்களை கேட்கிறார். கவித்துவம் நிரம்பி வழியும் இந்த ஒரே ஒரு காட்சிக்காகவே காலமெல்லாம் இந்த மேடையை களங்கமில்லா இந்த காதலர்களுக்கே விட்டு விடலாம் என்றே இதை வாசிக்கும் வாசகர்கள் யாவர்க்கும் தோன்றும் ... 

Shakespeare’s
Romeo and Juliet

தமிழ் மொழியாக்கம்

( ரோமியோ  , ஜூலியட் நாடகம் )
Act 2 Scene 2
( காட்சி 2 )

இடம் : ஜூலியட்  அரண்மணை

நேரம் : இரவு

பாத்திரங்கள்  ; ரோமியோ  , ஜூலியட்

( இரவு நேரம் ஜூலியட்டின் அரண்மணையை நோக்கி ரோமியோ வருகிறான். இது இவளுடனான தனிமையின் முதல் சந்திப்பு )  

ஜூலியட் தன் மாடி
 அடி அறையின் சன்னலில் தோன்றுகிறாள்

ரோமியோ:    (தனக்குள்ளேயே                       பேசிக்கொள்கிறான்)
காயம் காணாதவன்தான் வடுக்களைப்பற்றி கேலி                                              செய்வான்
( அப்பொழுது  ஜூலியட் தன் மாடி அடி அறையின் சன்னலில் ஒளி நிலவாக தோன்றுகிறாள் )

ரோமியோ  : கொஞ்சம் பொறு மனமே ! அந்த அறையின் சன்னலில்    வெளிச்சம் தோன்றுகிறது. ஓ  ஜூலியட் !
           ......இரவில் ஒரு சூரியன் !

              அன்பே  நீ இந்த திசையில் தோன்றினால் இது தான் என்     கிழக்கு
              ஓ உதித்தெழு சூரியனே !
              உன் மீது பொறாமை கொண்ட       நிலவை
              உடனே கொன்று விடு...           அந்த நிலா உடல் நலமின்றி          ஏற்கனவே 
  வெளுத்துப் போய் தானிருக்கிறது
    ஏன் ? .( ஜூலியட்டைப்பார்த்து )  அட நீ தான்  ...காரணம்
             நீயோ அவளது தோழி ! ஆனால் அழகி அவளை விட                இது போதாதா அவள் உடல் நலம் கெட ?
   ( நிலவைப்பார்த்து ) அவளது கன்னித்தன்மை தான்                               அவளை கவலைக்குள்ளாக்குகிறது
பாவம் வெளுத்துப்போய் கொண்டே......யிருக்கிறாள்  முட்டாள்கள் தான் எப்போதும் கற்பு கற்பு என்று                                    கதைப்பார்கள் அதை எடுத்து முகமூடியாக அணிந்து    கொள்வார்கள்

அதோ அங்கே என்னவள் !
 என் ஆருயிர் !
அவளை நாம் எவ்வளவு     நேசிக்கிறேனென்று 
அவள் அறிந்து கொள்ள வேண்டும் வேண்டும் ரோமியோ ...

 அதோ அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்...  ஆனால் ஒசை கேட்கவில்லையே .......
அதனாலென்ன அவள் கண்கள் தான் அற்புதமாக                    உரையாடுகின்றனவே !

            அதற்கு நான் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கிறேன்

           ஆனாலும் எனக்கு அசட்டுத் துணிச்சல் தான் ....
 அவள் என்னைப்பார்க்கவுமில்லை    எதுவும் கேட்கவும் இல்லை 
ஆனாலும் நான் ஏதேதோ அவளுக்கு பதிலாக உளறிக்    கொண்டிருக்கிறேன்

          ( தனக்குள்ளேயே )   அவள் கண்களை கவனி ரோமியோ !

  விண்ணிலே அழகுவாய்ந்த இரு நட்சத்திரங்கள்
 ஒருவேலையாக வெளியூர் செல்கின்றனவெற்றிடமாகி விடுமே தங்கள் இருப்பிடம் ?

          கவலை கொள்கின்றன
          என்ன செய்யலாம் ?

          உடனே ஒரு யோசனை 
          மண்ணில் இறங்கி வருகின்றன. வந்தவை 
         அவளின் (ஜூலியட்டின் )கண்களைப்பார்த்து 
            கெஞ்சுகின்றன

 நாங்கள் திரும்பி வரும் வரைக்கும்

நீ விண்ணகத்தில்  எங்கள் இடத்தில் அமர்ந்து ஒளியூட்டுவாயா ?
( தனக்குள் மெல்ல  நகைப்புடன் )

         எங்கிருந்தாலென்ன அவளுடைய கண்கள் ? 
        இங்கிருந்து  விண்ணிற்கு இடம் பெயர்ந்தால்  என்ன ? 
        இல்லை விண்ணிலிருக்கும் நட்சத்திரங்கள் 
        இவளது  கண்களுக்குள்    குடிபுகுந்தால் தான் என்ன ?
       எந்தப் பகல் விளக்கையும் ஒளியிழக்கச் செய்யும்
       சூரியனைப்போல்
       எந்த நட்சத்திரங்களையும் ஒளியற்றதாக்கி விடுமே 
       அவளது கன்னச்செழுமையில் பொங்கி வழியும் 
       அபரிதமான அழகு..

 ஒரு வேளை அவளது கண்கள்    இரவு வானத்தில் 
 நட்சத்திரங்களாக இருக்கின்றன என்று வைத்துக் 
கொள்வோம்
எந்தப் பறவையும் இது இரவென்று சத்தியம்
செய்தாலும் நம்புமா ?

      ஓ அதற்குள் விடிந்து விட்டதென்று பூபாளம் பாட ஆரம்பித்துவிடும்                        அல்லவா ?
  ரோமியோ ரோமியோ  பார் அவளது கன்னத்தை தாங்கியிருக்கும்     அவளது அழகிய கரங்கள்
அந்த அழகிய கரங்களில் அவள் அணிந்திருக்கும் அதிர்ஷ்டக்கார கையுறைகள்
ஓ ! நான் மட்டும் அந்தக் கையுறைகளாக இருந்தால் அவள் கன்னங்கனை எப்போதும் உரசிக் 
கொண்டிருப்பேனே ..?.

   ( அங்கே ஜூலியட் தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்    அதைப்பார்த்தபடி  )
   ரோமியோ  :  ஓ ஒளியின்   தேவதையே !
 மீண்டும் மீண்டும் பேசு  
 இந்த இரவு உன் வார்த்தைகளின் ஒலியில் மகோன்னதமடைகிறது..
 ஓ !என் தலைக்கு மேலே இறக்கை கட்டி வந்தஒளியின் தேவதை......

 சாதாரண மனிதர்கள் விழிகளை அகல விரித்து இமைகளை அசைக்க மறுத்து உன்னை உற்று நோக்கி கொண்டிருப்பார்கள்
 அங்கே மேகத்தில் அழகிய தேவதையாகநீ  ஆனந்த நடனமிடுவாய் கைகளை துடுப்பாக அசைத்து காற்றில் படகு விடுவாய் 
பிறகு கண்களிலிருந்து காணாமல் போவாய் ..

ஜூலியட் :   ( யாருமில்லை என்று நினைத்து ஜூலியட் சப்தமாகப்    பேசுகிறாள் )  ரோமியோ ஓ ரோமியோ ! 
             நீ எங்கேயிருக்கிறாய் ?

             நீ ஏன் ரோமியோவாக இருக்கிறாய் ? 

 முதலில் உன் தந்தையை துற
  பிறகு உன் பெயரைத் துற
  உன்னால் அது முடியாதென்றால் 
 அதை முழுமனதுடன் என்னிடம் சொல் 
             ‘’ ஜூலியட் உன்னை உயிராக நான் நேசிக்கிறேன்‘’ என்று
             நான் இந்த கேபுலட் (குலப் பெயர் ) என்ற பெயரை
உடனே துறந்து விடுகிறேன்

  ரோமியோ : நீ இன்னும் இன்னும்    பேசு இன்னுயிரே  நான்      இரவெல்லாம் கேட்டுக் 
 கொண்டிருக்கிறேன் 
 அடடா அன்பே நான் பதில் சொல்ல முடியாதா ?

     ( ரோமியோ அங்கே இல்லையென்ற நினைப்பில் 
ஜூலியட்)

ஜூலியட் : ரோமியோ ! உன்னுடைய பெயர்தான் என்னுடைய ஆகச் சிறந்த எதிரி ,  

          நீ நீயாகவே இருக்க வேண்டும். மாண்டேக்காக
          (ரோமியோ குலப் பெயர் )  நீ ஓர் நாளும் இராதே 
          உன்னை  இறைஞ்சுகிறேன். மாண்டேக் என்பதுஎன்ன ? 

 கைகளா ? கால்களா ? தோட்களா?   இல்லைஉடலின் ஏதாவது ஒரு பாகமா ?அட பெயரில் என்ன தான் இருக்கிறது சொல் ?

 ஒரு ரோஜாவை நீ என்ன பெயர்     சொல்லி அழைத்தால் என்ன ?
 என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அது சுகந்தத்தை தானே பதிலுக்கு அளிக்கிறது   உன்னை என்ன பெயர் சொல்லி அழைத்தாலென்ன 
 ரோமியோ ?

 எப்படியானாலும் அதே ரோமியோ தானே நீ ?                                   
 உன் பெயர் முழுமையா ? நீ தானே முழுமை?
 ரோமியோ உன் பெயர் உனக்கு 
 அழகைத்தரவில்லை 
  நீதான் அதற்கு அழகு
  உன் பெயரை உதறு
 பதிலுக்கு என்னை முழுமையாக எடுத்துக் கொள்.

ரோமியோ:  உன் வார்த்தைகளின் பெயரால் உன்னை வாரிக்கொள்கிறேன்  அன்பே 
 அன்பே அன்பே என் பெயரை மற
  என்னை காதல் என்றே அழை
 எனக்கொரு புதிய பெயரை நினை
 உடனே அதை நான் சூட்டிக்கொள்கிறேன்
 இந்த நிமிடத்திலிருந்து இனி நான் ரோமியோ  இல்லை  

ஜூலியட் :  ( குரல் கேட்டு திடுக்கிட்டு பிரமையோ என்று சுற்றும்   முற்றும் பார்த்து பின்பு  ரோமியோ மீது பொய் கோபமாக ) 
 என்ன மாதிரியான உயிரினம் நீ ?
 இந்த இருளில் எங்கோதான் ஒளிந்து 
 கொண்டிருக்கிறாய்? ஆனால் என் அந்தரங்க எண்ணங்களையெல்லாம் 
  ஒன்றுவிடாமல் 
           அறிந்துகொண்டேயிருக்கிறாய்..    எங்கேயிருக்கிறாய்   நீ
ரோமியோ : அன்பே என்ன பெயர் 
சொல்லி என்னை நான் உன்னிடம்   சேர்ப்பேன் ?
என்னுடைய பெயர் உனக்கு எதிரியென்றால் அது எனக்கும்             எதிரிதான்
அதை நான் அவ்வளவு வெறுக்கிறேன் தெரியுமா ?
என் பெயரை யாராவது
 காகிதத்தில் எழுதினால்
அதை  நான் சுக்கு நூறாக கிழித்தெறிவேன்
ஜூலியட் : (ரோமியோவின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து  )
ஒரு நூறு வார்த்தைகளை கூட நீ இன்னும் முழுமையாக            உச்சரிக்கவில்லை
 ஆனால் உன் ஒலியின் ஓசையிலிருந்தே  நீ யாரென்று நான்          கண்டுகொண்டேன்
ரோமியோ தானே நீ ?  மாண்டேக்தானே நீ ?
ரோமியோ : நீ அழைத்த 
ரோமியோ இனி  நானில்லை ஏனென்றால் என் பெயர் உனக்குப் பிடிக்கவில்லையே

ஜூலியட் :  ஓ ரோமியோ  இங்கே ஏன் வந்தாய் ?எப்படி வந்தாய் ? இத்தனை  உயரமான இந்த அரண்மனை            மதில்களின் மீது ஏறி எப்படி இங்கே வந்தாய் ? என்   உறவினர்கள் எவரேனும் உன்னைப்பார்த்தால் உடனே   உன்னை கொன்று விடுவார்களே !

ரோமியோ : காதல் எனக்கு ஒளியின் சிறகுகளைத் தந்தது . அந்த   ஒளியின் சிறகுகளால் உன் அரண்மனை மதில்களின் மீது   பறந்து பறந்து நான் உன்னிடம் வந்து சேர்ந்தேன்.   கற்சுவர்களானாலும் காதலை புறந்தள்ளாது அல்லவா?

          . ஒரு மனிதனிடம்  மட்டும் காதல் வந்து சேர்ந்து விட்டால்,   அவனால் என்னென்ன முடியுமோ அத்தனையையும் அவனை      அது செய்யத் தூண்டும்  ,  அதன் பெயர் தான் காதல்.  ஆதலால்  உன் உறவினர்கள் நம் காதலுக்கு ஒரு தடையல்ல

 ஜூலியட் :  ( கோபமாக ) ஆ என் உறவினர்கள் மட்டும் இப்பொழுது    உன்னை இங்கே பார்த்தால் உடனே கொன்று விடுவார்கள்

ரோமியோ :   நீ என்னை அப்படி கோபாமாக பார்க்காதே அன்பே
 உன் உறவினர்களின் இருபது கொடுவாட்களை விடவும்     அதிக ஆபத்தாக இருக்கிறது  உன் கோபமான பார்வை .     அது இந்த நொடியே  என்னை கொன்று விடுமென்று     பயமாக   இருக்கிறது

ஜூலியட் : ( கோபம் தணிந்து ) சத்தியமாக சொல்கிறேன். என் உயிரையே   கொடுத்தாவது உன்னை அவர்களின் கண்களில் படாமல் நான்   காப்பாற்றுவேன். 

ரோமியோ : அவர்கள் இங்கே வந்தால் இருளின் கருமை உடையில் நான்   ஒளிந்து கொள்வேன். ஆனால் நீ மட்டும் என்னை   நேசிக்கவில்லையென்று சொன்னால் அவர்கள் உடனே   இங்கே வரவேண்டுமென்று கண்களை  மூடிக்கொண்டு நான்   பிரார்த்திப்பேன். 

ஏனென்றால் நீ என்னை நேசிக்காத ஒரு   வாழ்க்கையை வாழ்வதை விட , அவர்களின் வாளால்         மடிந்து   போவதே மேல்

ஜூலியட் : ( கிண்டலாக ) என் படுக்கை அறையை நோக்கி யார் உனக்கு  வழி காட்டினார்கள் ?
ரோமியோ : உன்னை முதன் முதலில் என் கண்ணில் காட்டிய அதே  காதல் தான் எனக்கு  வழி காட்டியது. நான் என்ன செய்ய?  வேண்டுமென்றே தான் என் காதல் தான் எனக்கு வழி  சொன்னது. அதற்கு என் கண்களை நான் பரிசாக கொடுத்து  விட்டேன். 

 நான் ஒரு மாலுமி அல்ல. ஆனால் நீ தூர தூரமாய் கடலுக்கு  அந்தப்புறம் இருந்தால் உன்னை அடைய நான் என்       உயிரையும் பணயம் வைப்பேன்.

ஜூலியட் : ( வெட்கத்துடன் ) இப்பொழுது இருள் முகத்திரையிட்டு என்  முகபாவத்தை மறைத்திருக்கிறது. 

 இல்லையென்றால் உன் வார்த்தைகளுக்கு வெட்கத்தில் என்  முகம் எப்படி  கன்றி சிவந்து போகிறது என்று நீ கண்டுபிடித்து  விடுவாய்

. ஆனால் இன்று இந்த இனிய  விதியின் காரணமாக  என் வாய் வெட்கத்தை விட்டு வெளிப்படையாக உன் பெயரை  சத்தமிட்டு அழைத்து விட்டது.

அதை நீ மறந்து விடு. ஆனால் இப்பொழுது சொல் நீ என்னை  நேசிக்கிறாயா ? நீ 

ஆமாம் என்று தான் சொல்வாய்
 அல்லலா ? . அதை  நானறிவேன்.
 ஆனால் நீ என்னை விரும்புகிறேனென்று சத்தியமெல்லாம்  செய்தால் அது பொய் தான். ஜோ தேவன் காதலர்கள் பொய்  சொல்லும் போது புன்னகைப்பான் என்று நீ  கேள்விப்பட்டதில்லையா ?

 ஓ ரோமியோ நீ என்னை மனதார நேசித்தால் மட்டும் அதை  உண்மையாக சொல். 

          ஆனால் நீ என்னை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று     நினைத்தால் நான் அதை நான் உள்ளுணர்வினால் கண்டுபிடித்து     விடுவேன்.   

பிறகு ஒரு நாளும் உனக்கு       கிடைக்காமல் போய் விடுவேன்.
     ஓ ......அழகிய மாண்டேக் நான் உன்னை எவ்வளவு      நேசிக்கிறேனென்று உனக்கு தெரியுமா ? 

          நான் வெட்கத்தை விட்டு சொல்வதால் நீ என்னை 
 எளிதாக எடை போட்டு விடாதே. 
 ஆனால் நீ என்னை 
ஆத்மார்த்தமாக நம்ப வேண்டும் 

         . முதலில் வெட்கப்பட்டு  பின்பு கைவிட்டு விடும் எந்தப்       பெண்ணையும் விட உனக்கு நான் என்றும் உண்மையாக       இருப்பேனென்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
 ரோமியோ உனக்கு தெரியுமா ? 

           நீ இந்த இருளில் என் அருகிலிருப்பது தெரியாமல்
 என் இதயத்தில் இருக்கும் காதலை வாய் விட்டு பிதற்றி விட்டேன்  .நீ அதை ஒட்டுக் கேட்டு விட்டாய். 

           அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். அதற்காக என் காதலை எளிதாக எண்ணி விடாதே.         ஆழமில்லையென்று அலட்சியப்படுத்தி விடாதே.
இந்த இருளுக்குத் தெரியும் என் காதல் எவ்வளவு  ஆழமானதென்று..

ரோமியோ : அன்பே மேலே ஒளிரும்அந்தப் புனித நிலவின் பெயரால்   சொல்கிறேன். 
 அந்தப்புது நிலா இந்தப் பழ மரங்களின் உச்சிக்     கொண்டை மீது வெள்ளி வர்ணம் பூசிக்கொண்டிருக்கிறது….

ஜூலியட் : ( குறுக்கிட்டு ) 
நிலவின் பெயரால் நீ சத்தியம் செய்யாதே .... (ரோமியோ திகைக்க)
அது நிலையற்றது. ஒவ்வொரு மாதமும்  வானில் இடம் மாறிக்கொண்டேயிருக்கும். 
 நீ அந்த நிலையற்ற உயிரி மீது நம் காதலுக்காக  சத்தியம் செய்ய வேண்டாம்

ரோமியோ : எதன் மீது நான் சத்தியம் செய்ய வேண்டும் ?
ஜூலியட் :  நீ எதன் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம். 
ஒரு வேளைசத்தியம் செய்வதாக இருந்தால்அழகிய உன் மீதே சத்தியம் செய். 

            ஒரு விக்கிரத்தில் கடவுளை கண்டு வணங்குவது போல   உனக்குள் நான் காதலை கண்டு வணங்குகிறேன். உன்னை என் உயிரைப்போல நம்புகிறேன்.

ரோமியோ :என் இதயத்தின் ஆழமான அன்பின் மீது சத்தியம் ….

ஜூலியட் : ( குறுக்கிட்டு ) பொறு !பொறு ! உன் இதயத்தின் மீது மட்டும்  வேண்டாம். அதுவும் இன்றிரவு  அவசரம் கொண்ட இதயத்தின்  மீது வேண்டவே வேண்டாம். 

  அதன் மீது நீ சத்தியம் செய்தால் நான் இன்புறுவேன் தான்  ஆனாலும் அது இப்பொழுது வேண்டாம்.
 
           இந்த இதயம் இன்று யோசிக்க மறந்து விட்டது. சட்டென்று உன்மீதுசாய்ந்துவிட்டது. 
திடுமென திசை மாறிவிட்டது. 

           ஒரு மின்னலைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்                        இதன் மீது சத்தியம் செய்தால்...... 

 சட்டென்று ஒளி அணைந்து விடுமென்றுபயமாக இருக்கிறது… நெடும் பயணம் இது கண நேரமில்லை. 

 அன்பே இன்று இது போதும்..     இரவுவணக்கம் கண்ணா 
நமது காதல் இப்பொழுது வசந்தத்தின் மூச்சில் சிறிய  மொட்டாக அரும்பியிருக்கிறது.  
 அடுத்த முறை நாம்
 சந்திக்கும் போது அது
அழகிய மலராக மலர்ந்து சுகந்தம் வீசட்டும்.

           என் இதயத்தில் நிலவும் இனிய அமைதியும் மகிழ்ச்சியும்  உன் இதயத்திற்கும் பரவட்டும்.
ரோமியோ :  (ஏக்கத்துடன் ) ஆசை நிறைவேறாத ஒரு இதயத்தை    இப்படியே விட்டு   விட்டு செல்கிறாயா அன்பே ?

ஜூலியட் :   இன்றிரவு நீ வேறு என்ன எதிர்பார்க்கிறாய்.? 
 
ரோமியோ :   இருவரும் அன்பின் உறுதிமொழியை பரிமாறிக்கொண்டால்    நான் மகிழ்ச்சியடைவேன்

ஜூலியட் :  நீ கேட்பதற்கும் முன்பே என் இதயத்தின் அன்பை உனக்கு    முழுவதுமாக கொடுத்து விடவிலையா ? 

 நீ அதை மீண்டும் மீண்டும் கேட்டால் 
 கொடுத்ததை திரும்ப      பெற்றுத்தானே 
மறுபடியும் தரவேண்டும்

ரோமியோ :   கொடுத்ததை மீண்டும் எடுப்பாயா ? ஏன் அன்பே ?

ஜூலியட் :    உண்மையைச் சொன்னால் உனக்கு மீண்டும் மீண்டும்     கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்      தோன்றுகிறது. என்னுடைய ஆசையோ எல்லையில்லாதது.     

நேசமோ கடலைப்போல கட்டற்றது. அதன் ஆழமோ       யாரும் அறியமுடியாதது. உன் காதலுக்காக நான் எவ்வளவு     கொடுக்கிறேனோ அவ்வளவும் என்னிடமே திரும்ப    வருகிறது. ஒ நம் காதலின் அன்பு 
எல்லையற்றது.

           ( செவிலி உள்ளிருந்து அழைக்கும் குரல் கேட்கிறது )
ஜூலியட் :    உள்ளிருந்து செவிலி அழைக்கிறாள்
                  ஒரு நிமிடம் ( செவிலியிடம் ) 
( ரோமியோவிடம்திரும்பி  ) அன்பே விடைபெறவா ?

              மாண்டேக் நீ உண்மையாக இரு ( ஞாபகம்     வந்தவளாக ) ஒரு நிமிடம் இங்கேயே இருப்பாயா ?
              நான் உடனே திரும்ப வந்து விடுகிறேன். ரோமியோ
                (    மறைகிறாள் ) 

ரோமியோ :   இருளால் சூழப்பட்ட இனிய இரவு இது.ஆனாலும்     உள்ளுக்குள்ளே ஒரு பயம் ஓடிக்கொண்டே இருக்கிறதே.      இருளால் சூழப்பட்டதாலா ? இது கனவா இல்லை நனவா ?

( மீண்டும் ஜூலியட் பால்கனியில் தோன்றுகிறாள் வரும் போதே 

ரோமியோவிடம் பேசிக்கொண்டே வருகிறாள் )

ஜூலியட் :  மொத்தமாகவே மூன்று வார்த்தைகள் தான் ரோமியோ ,பிறகு  இனிய இரவு வணக்கத்துடன் விடைபெறலாம்.நீ     உண்மையாகவே என்னை நேசித்தால் ,

 நேசமுள்ள காதலனாக  நீ திகழ்ந்தால்  ,என்னை திருமணம் செய்து கொள்ள  மனதார விரும்பினால்  நாளையே அதை உறுதிப்படுத்திவிடு.

 நாளை  உன்னிடம் ஒரு இரகசிய தூதுவரை அனுப்புவேன். அவளிடம்  எங்கே எப்பொழுது நம் திருமணத்தை நடத்தப்போகிறாய்  என்று நாளையே நிச்சயமாய் சொல்லி விடு. என்  களங்கமில்லா பெண்மையை உன் காலடியில் சமர்பிக்கிறேன்.

  இந்த உலகத்தில் எந்த மூலைக்கு  நீ என்னை அழைத்தாலும்  நான் உடன் வரக்காத்திருக்கிறேன்.

           ( செவிலியின் குரல் மறுபடியும் கேட்கிறது )

செவிலி : மேடம் மேடம்
ஜூலியட் : ( செவிலியிடம் திரும்பி ) இதோ வந்து விடுகிறேன் 

          (  ரோமியோவிடம் ) நான் மறுபடியும் வந்து விடுகிறேன்
           ஆனால் உன்னிடம் பரிசுத்தமான அன்பு மட்டும்  இல்லையென்றால் ........

செவிலி :  மேடம் மேடம்

ஜூலியட் : நான் மறுபடியும் உன்னிடம் வருவேன்.  நான் உன்னை கெஞ்சி  கேட்டுக் கொள்கிறேன். என்னை அடைய நினைப்பதை  விட்டொழி . என்னை என் துயரத்திடமே சரணடைய விடு
 நாளை நான் உன்னிடம் ஒரு தூதுவரை அனுப்புவேன்…..

ரோமியோ :  என் உயிரே அதை நம்பித்தான் இருக்கிறது என் உயிரே 
ஜூலியட் : ஆயிரம் முறை இரவு வணக்கங்கள்

            ( ஜூலியட் மறைகிறாள் )
ரோமியோ :  உன்னிடமிருந்து விடைபெறுவது ஆயிரம் மடங்கு என்    துயரத்தை  கூட்டும் கொடுமை. ஒரு காதலன் காதலியைத்               தேடி வருவது என்பது பள்ளிச்சிறுவன் புத்தக மூட்டையைப்     பிரிந்து வீட்டுக்கு  வருவது போல் உற்சாகமானது. ஆனால்    காதலியிடம் விடைபெறுவதோ புத்தகமூட்டையை சுமந்து    கொண்டு பள்ளிக்கு செல்வது போல அத்தனை துயரமானது.

  (  ரோமியோ கிளம்ப எத்தனிக்க மீண்டும் ஜூலியட் உள்ளே வருகிறாள். )
ஜூலியட் : ரோமியோ நான் மட்டும் ஒரு பெண் பால்கனர் பறவை போல  ஒலி எழுப்ப முடிந்தால் ,.....

           என் செல்ல இணையை (ரோமியோவைப் பார்த்து  )  நினைத்த   உடனே அழைத்துக் கொள்வேன்.

           ஆனால் இந்த இரவில் நான் அமைதியாக இருக்க வேண்டும்    இல்லையென்றால் எக்கோவின் தூக்கத்தை எழுப்பி  விட்டுவிடுவேன் என்று பயமாக இருக்கிறது .

          எக்கோ மட்டும் எழுந்து விட்டாளென்றால் அவள் எழுப்பும் கரடு         முரடான சப்தத்தில் என் ஆசை ரோமியோ உன் பெயரை      சொல்லி நான் அழைப்பது எனக்கே கேட்காது 

குறிப்பு - 
( எக்கோ ஒரு புராண பெண் கதா பாத்திரம். இவள் தன் காதலன் நார்ஸியஸின் பெயரை உச்சரித்தே குகையில் உயிரை விட்டவள்.)

ரோமியோ :  எனது ஆன்மா என் பெயர் சொல்லி அழைக்கிறது. இந்த    இரவில் காதலனின் பெயர் சொல்லி இவள் அழைப்பது    வெள்ளி நாதத்தைப்போல அத்தனை இனிமையாய்    இசைக்கிறது.

ஒரு காதலன் கேட்கும் ஓசைகளிலேயே மிக    மிக இனிமையானது அவன் காதலி அவன் பெயர் சொல்லி    அழைக்கும் ஓசை தான்.

ஜூலியட் :   ரோமியோ ரோமியோ ( ஆசையாக ) 

ரோமியோ:   என் குட்டிப் பருந்தே ..

ஜூலியட் :  நாளை எத்தனை மணிக்கு நான் தூதுவரை அனுப்ப    வேண்டும் ?

ரோமியோ:   ஒன்பது மணிக்கு 

ஜூலியட் : நான் அதை தவற விட மாட்டேன் ஆனால் ஒன்பது மணியை  அடைவதற்குள் இருபது வருடங்களை கடப்பது போல  இம்சையாக இருக்கும் .அது சரி நான் ஏன் உன்னை திரும்ப  அழைத்தேன் என்பதே எனக்கு மறந்து போய் விட்டது

ரோமியோ: அப்படியென்றால் நீ எப்போதும் மறந்து கொண்டேயிரு நான்   இங்கேயே நின்று கொண்டிருக்கிறேன். இந்த இடத்தை தவிர  எனக்கொரு வீடிருக்கிறது என்பதையே நான் சுத்தமாக மறந்து  விடுகிறேன்.

ஜூலியட் : ஏறத்தாழ விடியப் போகிறது. நீ இங்கிருந்து உடனே கிளம்ப   வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனாலும் சுதந்திரப்   பறவையாக அல்ல ஒரு கைதியைப்போல் காலில் கயிறு             கட்டப்பட்ட சிறைப்பறவையாக. உன்னை நான் எவ்வளவு  அனுமதிக்கிறேனோ அவ்வளவு தான் நீ தாவி தாவிச் செல்ல  முடியும் பறவையோ .உன்னைப் பார்க்க வேண்டுமென்று  நினைத்தவுடன் கயிற்றை பிடித்து இழுத்து உன்னை  வரவழைப்பேன்

ரோமியோ: அப்படியென்றால் உடனே நான் உன் பறவையாக  ஆசைப்படுகிறேன்

ஜூலியட் : நீ என் பறவையானால் உன்னை கொஞ்சி கொஞ்சியே கொன்று  விடுவேன். பிரிவு கூட ஒரு இனிய துயரம்தான்அடுத்த சந்திப்பு  வரும் வரைக்கும் .
 இந்த இரவு நாளை விடியலாகும் வரை  இனிய இரவு  வணக்கம் 

         ( ஜூலியட் மறைகிறாள் ) 

ரோமியோ : தூக்கம் உன்  கண்களை தழுவட்டும் !
            அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டும் !
            அந்த தூக்கமும் அமைதியும் நான் ஆனால்
            இரவு முழுவதும் இனிமையாக உன்னுடனேயே இருந்துவிடுவேன்.
    நான் இப்பொழுதே பாதிரியாரிடம் செல்ல  வேண்டும்

            காதலில் வெல்ல அவரின் உதவியை நாட  வேண்டும்

            ரோமியோ மறைகிறான்.

  மூலம் : ஷேக்ஸ்பியர் 
   மொழி பெயர்ப்பு : தங்கேஸ்