நண்பன்

நண்பர்கள் தின கவிதை

நண்பன்

நண்பன்
தனிமைகள் உன்னால் தவிர்க்கப்படுகிறது...
மகிழ்ச்சிகள் உன்னோடு செதுக்கப்படுறது...
என் வலிகளும் உன்னால் தான்  தீர்க்கப்படுகிறது ...

கண்கள் குளமாகும் போது
உன் ஒருவனால் தான்
அனைத்தையும் மாற்றியமைக்க
முடிகிறது

என் எண்ணங்களுக்கு
உயிர் கொடுக்கும்
நண்பன் நீ...

நீ இல்லாத ஓர் நாள்
கற்பனையும் செய்ய முடியாது
என்னால்...

தோற்றுப் போகும் தருணங்களிலும் ,
தொலைந்து போகும் தருணங்களிலும் ,
உன்னைப் போல் ஆறுதலளிக்க எவருமில்லை..

நாவில் அடங்கா..
நான்கெழுத்துச் சொல் தேடி..
நாடோடியாய் நாடெங்கும்
நான் அலைந்து அறிந்தேன்..
"நண்பன்" என்னும் சொல்லை...

- கவிஞர்.வாசுகி முத்தையன்
ஈரோடு,
தமிழ்நாடு.

 

@@@@@@@@@@@@@#@@@@##@@@@

*நண்பர்கள் தினம்...*

மூன்று எழுத்தில்
நட்பு !
ஆறு எழுத்தில்
நண்பர்கள் ..

காலம் தந்த
கொடை
நட்புக்கு ஏது தடை .!

கருவறை வாசமிலா
வகுப்பறை
நேசம் இது ..

பேதமில்லாமல்
பழகியக்
கல்லூரிக் காலம் அது ..

இல்லத்து உணவு 
இதயத்து
உணவாக மலர்ந்திடும்..

உள்ளத்து அன்பு
நேரத்து
விருந்தாய் மணந்துவிடும்..

முகம் பார்த்து
ஆறுதலைத் தந்திடும்
காலக் கண்ணாடி .!

மகிழ்வோ சோகமோ
எப்போதும்
கடவுளாய் முன்னாடி .!

என்ன நடந்தாலும்
என்னவென்று
கேட்கும் உயிர்நாடி .!

பார்க்காத நாளெல்லாம்
மழையின்றி
நட்பின் வேர்கள் வாடி .!

ஒற்றைக் குவளைத்
தேநீர்
இரண்டு குவளையாகும்..

'நண்பா' எனும்
ஒற்றைச் சொல்லே 
இதமாய் இளமையாகும்..

ஒற்றைப் பொட்டல
உணவில்
பல கைகள் வரவாகும்..

அடைமொழி சொல்லே
வாழ்நாளில்
அடைக்கல உறவாகும் ..

குடும்ப அட்டையில்
பெயரில்லை - ஆனாலும்
குடும்பத்தில்..

புகைப்பட ஆல்பத்தில்
பார்த்து மகிழ்கிறேன் 
என்னருகே பக்கத்தில்...

முனைவர் இரா. இராமகுமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
விவேகானந்தா கல்லூரி
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.