அடேய்... தக்காளி...!

தக்காளி கவிதை

அடேய்... தக்காளி...!

*அடேய்... ... தக்காளி* 

"ஏழைகளின் ஆப்பிளாய்
உலா வந்தேன்
இன்று
மாடி வீட்டில் மட்டும்...

வீதியோரம்
மலர்ந்து இருந்தேன்
இன்று
வாங்கும் கரங்கள் முட்டும்..."

"உருவத்தில் சிறிதாய்
ருசியில் பெரிதாய் ..
என்றும் தக்காளி
இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்...

கூவி கூவி
அழைத்தாலும் ஏளனமாய்
கடந்த நிலையைக்
கண்ணிற்குள் சுழல்கிறேன் ..."

"மலிவு விலையில்
நானின்றி சமையல் இல்லை!
இப்போது
சமைக்கிறார்களா தெரியவில்லை.! 

பிதுங்கி பிதுங்கி
வாழ்ந்த நாளில்
என் கண்ணீரை யாரும்
உணரவில்லை..!"

"அடேய்.. தக்காளி
ஏளனம் செய்தோர்
பாருடா... தக்காளி என்பதில்
அற்ப சுகம் எனக்கு .!

அதோ...! தக்காளி
வந்து விட்டது
நெருங்கிய காலம் எப்போது ..."

"இரத்தம் வந்தால்
'தக்காளி சட்னி' என்றோர்
இரத்தம் உறைந்தனர்
என் வருகை குறைந்ததால் ...

வீதியில் கொட்டி
மகிழ்ந்தோர் எல்லாம்
மூக்கில் விரல் வைத்தனர்
என் இருப்பை அறிந்ததால்..."

"அழுகிய என்னைத்
தூக்கி எறிந்த காலத்தில்
அழவில்லை நான்...
இன்று வாங்க முடியாமல்
அழுகின்றனர்
நியூட்டனின் விதியோ ..!"

"பேரம் பேசி
வாங்கிய என்னை
நேரம் தான் உயர்த்தியது ..
இப்போது எல்லாம்
'வீழ்வேன் என்று நினைத்தாயோ'
வசனமே நினைவில்
சுழல்கிறது ..."

"ரசமாய்
கூட்டாய்க் குழம்பில்
குதூகலித்த நாள்கள்
மீண்டும் வருமா.!
குழந்தையின் இதழ்களில்
செல்லமாய்க் கடித்திட
காலமும் கனியுமா...!"

"தக்காளி விற்றுக்
கோடியில் புரண்டோர்
நேற்று வரை
தெருக்கோடியில் இருந்தனர்.."

பதுக்கி வைத்து
வாழ நினைப்போர்
படுகுழியில் தானே வீழ்வர்.

"உயரம் சென்றாலும்
என் உயரம் நானறிவேன்
உங்கள் முகம் மலர
நானே இல்லம் வருவேன்..."

*முனைவர் இரா. இராமகுமார்*
உதவிப் பேராசிரியர்
விவேகானந்தா கல்லூரி
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.