ஒரு சொல்லாகி..!

புதுக்கவிதை

ஒரு சொல்லாகி..!

ஒரு சொல்லாகி

உன்னை ஆராதித்துக்கொண்டிருக்கும் ஒரு சொல்லை
உனதாக்கிவிட நினைக்கிறேன்
பட்டாம்பூச்சியாய் மாறி அது
உன் முகத்திலமர்ந்து 
எச்சில் படாத
 முத்தங்களை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது

குவிந்த ரோஜா மொக்குகளான
உன் மார்பை மொய்த்துக்கொண்டிருக்கும் 
அதைப் பிடித்து
திக்குத் தெரியாத காட்டில் விட்டுவிட்டு
ஓடோடி வந்துவிடுகிறேன்

வெந்நாரையின் நீண்ட அலகுகளாக
மாறி வந்த வெண்ணிலவு
இங்கே விழிகளை மூட விடாமல் கொத்தி விரட்டியடிக்கிறது தூக்கத்தை

நீயோ
சிவந்த மண்புழுக்களாக நெளியும்
என் கனவுகளை கொத்து கொத்தாக வாரி  விழுங்கிக்கொண்டிருக்கிறாய் 
நூடுல்ஸைப் போல

நான் 
குளிருக்கு வெது வெதுப்பாக            இன்னொரு சொல்லை எடுத்துப் போர்த்துகிறேன்

கம கமக்கும்  சீயக்காய் வாசத்தோடு
இரவின் சுயம்புவாய் நீளும் 
மொய்குழலின் வருடலில்
நான் கிறங்கிச் சரிய
முத்தங்களை என் மீது நெய்யத் தொடங்குகிறாய்

ஒளியாண்டுகளின்தொலைவிற்கும்
அப்பால் வீழ்ந்து கொண்டிருந்தவன்
இரவில் கண்விழித்ததும்
 என்னைத் தேடுகிறேன்
நீ தான் ஒரு சொல்லாகி விட்டாயே
என்கிறாய்  புன்னகையோடு

-தங்கேஸ்.