ரோமியோ ஜூலியட் தொடர்

ரோமியோ ஜூலியட் தமிழாக்கம்

ரோமியோ ஜூலியட்  தொடர்

ஷேக்ஸ்பியரின் 

உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் 

ரோமியோ ஜுலியட்டின் 

தமிழ் மொழியாக்கம்

Romeo and Juliet

Act 1, Scene 4

களம் 1 காட்சி 4

காட்சி பிண்ணனி

பொழுது – பகல் முடிந்து இரவின் ஆரம்பம்

( ரோமியோ மற்றும் அவனது நண்பர்கள் ஜுலியட்டின் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு மாறு வேடத்தில் செல்கிறார்கள் )

ரோமியோ , மெர்குஷியோ மற்றும் பென்வாலியோ ஆகிய  மூவரும் விருந்துக்கு முகமூடி அணிந்தபடி செல்கின்றனர். மேலும் ஐந்து பேர்கள் முகமூடி  அணிந்தபடியும்  கையில் டார்ச் விளக்கைப் பிடித்தபடியும்  அவர்களுடன் உடன் செல்கிறார்கள்.

 

ரோமியோ :  ( நண்பர்களிடம் ) 

 

             தாமதத்திற்கு எப்படி மன்னிப்பு கோருவது ?

             அல்லது மன்னிப்பு கோராமலேயே 

   உள்ளே நுழைந்து விடலாமா ?

பென்வாலியோ : 

ரோமியோ ! மன்னிப்பு கேட்பதெல்லாம்  

பழைய பாணி 

அது இப்ப பேஷன்.இல்ல 

 

( கிண்டலாக )

 

பாரு ரோமியோ ! இரண்டு  கண்ணையும் 

கருப்பு துணில கட்டிக்கிட்டு , 

கையில ஒரு பொம்மை அம்பை வச்சுகிட்டு 

பயமுறுத்திக்கிட்டு இருக்குற 

சோளக்கொல்லை பொம்மை கூட்டத்துக்குள்ள போah

நாம நுழையப்போறோம் ?

நாங்க வந்துட்டோம் வந்துட்டோம்னு சொல்றதுக்கு /

இல்லை பள்ளிக்கூட பசங்க மாதிரி அட்சரம் பிசகாம

மனப்பாடம் பண்ணி வச்சத 

அப்படியே போய் பேச்சுப்போட்டில ஒப்பிக்கப் போறோமா ? 

 

நாம  நடனமாடப்போறோம்பா நடனமாட ....

 

பார்க்குறவங்க எப்படி வேணாலும் நினைச்சுக்கட்டும்

அதப்பத்தி நமக்கு கவலை இல்லை

 

ரோமியோ : 

சரி சரி  டார்ச் விளக்கை என்னிடம் கொடு. 

நான் அதை ஏந்திக் கொள்கிறேன்.

நடனமாடும் மனநிலையில் நான் இல்லை.

                                                      :

மெர்குஷியா : 

இல்லை இல்லை என் இனிய  ரோமியோ !

இன்று நீ நடனமாடியே தீரவேண்டும்

 

ரோமியோ : 

நீங்கள் வேகமாக நடனமாடக்கூடிய 

நல்ல ஷுக்களை அணிந்திருக்கிறீர்கள் 

அதனால் நன்றாக நடனமிடலாம் 

ஆனால் என் ஷுக்கள்  மிகவும் கனமான ஈயத்தால் ஆனவை,

அவைகள்  என்னைத்  தரையில் நங்கூரமிட வைக்கின்றன.

அதனால்  என்னால் நகரக்  கூட  முடியாது.

மெர்குஷியா : 

 ( கிண்டலாக ) 

நீ தான் காதல் இளவரசனாயிற்றே 

மன்மதனின் சிறகுகளை  கொஞ்சம் கடன் வாங்கு,                அதை வைத்துக் கொண்டு பறந்து பறந்து             நடனமிடலாம்

ரோமியோ : 

ஓ நான் பறக்க முடியாத அளவு 

அந்த மன்மதனது அம்புகளால் 

துளைக்கப்பட்டு கிடக்கிறேன். 

என் காயப்பட்ட இதயம்  

சோகத்திலிருந்து என்னைத் தப்பவே விடாது. 

நான் காதலின் பெரும் சுமையில் 

மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.

மெர்குஷியா : 

நீ காதலில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் என்றால்

கனத்துக் கொண்டேயிருக்கிறாய் 

என்று தானே அர்த்தம்.

பார்த்துக் கொள் நண்பா 

அந்த மென்மையான வஸ்து உன் எடையை தாங்காது

உன்னை மூழ்கடித்து விடப் போகிறது. 

  

ரோமியோ : 

காதல் மென்மையானதென்று யார் சொன்னது.?

காதலித்துப்பார் தெரியும்  

காதல் கரடு முரடானது  கட்டுக்கடங்காதது. 

முள்ளைப்போல குத்துவது என்று உனக்குத் தெரியும்

 

 

மெர்குஷியா : 

( கிண்டலாக )

காதல் உன்னிடம் கரடு முரடாக நடந்து கொண்டால் 

நீயும் அதனிடம் அவ்வாறே நடந்து கொள். 

காதல் உன்னை முள்ளைப்போல குத்தினால்

நீயும் பதிலுக்கு அதை முள்ளைப்போல் குத்து.

காதல் உன்னைத் தாக்கினால்

நீயும் அதைத் தாக்கி வீழ்த்து.

இப்போது என் முகமூடியை கொடு 

அதை நான் அணிய வேண்டும். 

 

அதாவது ஒரு முகமூடி 

இன்னொரு முகமூடியை மறைப்பதற்கு. 

 

அந்த இன்னொரு முகமூடியைத்தான்

நாம் முகமென்று அழைக்கிறோம். 

யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலென்ன ?

என்ன குற்றம் கண்டாலென்ன ? 

கருமையான புருவங்களைக் கொண்ட இந்த முகமூடி

எனக்கு பொருத்தமாக இருக்கும்.

 

பென்வாலியோ :

சரி சரி வாங்க கதவை தட்டிவிட்டு 

உள்ளே போகலாம். 

உள்ளே போனதும் ஒரே நடனம் தான் 

உற்சாகம் உற்சாகம்

ரோமியோ : 

என் கைகளில் ஒரு ஒளி விளக்கை கொடு 

அதை நான் ஏந்திக்கொள்கிறேன். 

இளகிய இதயம் படைத்தவர்கள்

இங்கே நடனமாடட்டும் 

 

பாவம் இந்த ரோமியோவை விட்டு விடுங்கள்.

நான் விளக்கை ஏந்தியபடி வெளிச்சத்தில்

உங்கள் நடனத்தை ரசிப்பவனாகவே

இருந்து விட்டு போகிறேன்.

இந்த விளையாட்டு மிகவும் 

ரசமானதாக இருக்கும் போல் தோன்றுகிறது. 

ஆனால் அதை ஆடிப்பார்க்கும் மனநிலையில்

இந்த ரோமியோ இல்லை அவ்வளவு தான்..

 

மெர்குஷியா : 

அடம்பிடிக்கும் அழுக்கு எலி போல 

அஞ்சி அஞ்சி ஓடாதே நண்பா. 

உன்னைப் பார்த்தால் இராத்திரி பாராவுக்கு போகும் காவலனைப்போல 

கதைத்துக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது. 

சேற்றில் மூழ்கியிருந்தால் 

உன்னை காதைப்பிடித்துக்கூட 

தூக்கி விடலாம் .

ஆனால் நீயோ காதல் புதைகுழியில்

கழுத்து வரைக்கும் மூழ்கியிருக்கிறாய்.

சரி சரி வா  பகல்  போய்க் கொண்டிருக்கிறது.

வெளிச்சத்தை வீணடிக்க வேண்டாம்.

 

ரோமியோ : 

இல்லை இல்லை இது பகலில்லை இரவு

 

மெர்குஷியா : 

ஆனால் நான் சொல்ல வருவதே வேறு . 

பகலில் சூரிய வெளிச்சத்தை வீணடிப்பது போல

நாம் நமது விளக்குகளை 

வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

நீ ஐம்புலன்களை நம்புவதை விட 

ஐந்து மடங்கு அதிகமாக என்னை நம்ப வேண்டும் 

ஆமாம்  

 

ரோமியோ : 

 

முகமூடியோடு செல்வது 

என்னமோ நல்லதுதான் .

ஆனால் அந்த இடத்திற்கு செல்வது  தான் 

அவ்வளவு நல்லதாகப் படவில்லை.

 

மெர்குஷியா : 

ஏனென்று நான் கேட்கலாமா ?

 

ரோமியோ : 

நான் நேற்று ஒரு கனவு கண்டேன்

 

மெர்குஷியா : 

( உற்சாகமாக )

நானும் கூட உன்னைப்போலத்தான் ....

 

ரோமியோ : 

சரி சரி உன்னுடைய கனவு தான் என்ன ?

உடனே சொல் 

 

மெர்குஷியா : 

 

கனவு காண்பவர்கள் 

பொய் சொல்கிறார்கள் என்பதாக

நான் ஒரு கனவு கண்டேன்

 

ரோமியோ : 

படுக்கையில் படுத்துக் கொண்டு நிஜங்களை  கூட 

அவர்கள் கனவுகளாக கண்டு கொண்டிருக்கிறார்கள்.

 

மெர்குஷியா : 

ஓ அப்படியென்றால் சரி

கனவுகளின் ராணி மேப் 

உன்னோடு உடனிருப்பதை போல 

நான் ஒரு கனவு கண்டேன்.

 

பென்வாலியோ : 

கனவுகளின் ராணி மேப்பா யாரது ?

மெர்குஷியா : 

ஓ அவளா !

அவள் தேவதைகளின் அழகி 

அவள் உருவமோ 

ஒரு சீமானின் மோதிரத்தில் பதித்திருக்கும்

அழகு கல்லை விட சற்றே  சிறியது 

அவ்வளவு தான்.

.

மனிதர்கள் தூங்கும் போது 

அவர்களின் மூக்கின் மீது

அவள் தனது தேரை ஓட்டிப் போகிறாள்.

அந்தத்  தேரை இழுத்து வருவன 

அதனினும் மிகச்சிறிய ஜந்துக்கள்.

அந்த ரதத்தின் ஆரங்கள் 

சிலந்தியின் கால்களால் ஆனது.

அந்த ரதத்தின் திரை 

வெட்டுக்கிளிகளின் 

இறக்கைகளால் ஆனது. 

மேலும் அதன் சேணம் கூட 

சிலந்தி வலைகளால் பின்னப்பட்டது தான்..

 

அவள் குதிரையின் காதுகள்

நிலவின் ஒளிக்கற்றைகளால் ஆனது . 

அவளது சவுக்கு

சிலந்தி வலைகளால் ஆனது. 

அதில் எப்போதும் 

பூச்சிகள் மாட்டிக்கொண்டேயிருக்கும்

 

சோம்பேறி இளம்பெண்ணின் 

விரலில் இருந்து வரும் 

சிறிய உருண்டைப் புழுவில்  

பாதி  கூட இல்லாத 

சாம்பல் நிற கோட் அணிந்திருக்கும்

ஒரு குட்டி கொசு தான்

அவளுடைய  ரத ஓட்டுநர்.

 

அவளுடைய வண்டி 

ஒரு அணில் மற்றும் 

ஒரு புழுவால் காலி செய்யப் பட்ட

ஒரு வெற்றுப் பழக்கூடு அளவு தான் இருக்கும்

ஆனால் இந்தப் பழ ஓடுகள் தான் 

எண்ணற்ற ஆண்டுகளாக 

இப்படித் தேவதைகளின் 

ரதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்த அற்புதமான  ரதத்தில் தான்

 அவள் ஒவ்வொரு இரவும் 

காதலர்களின் மூளை வழியாக சவாரி போகிறாள் 

அவர்கள்  காதலைப் பற்றி

 எண்ணற்ற  கனவு காண்கிறார்கள்

 

அவள் பிரபுக்களின் முழங்கால்களில் மீது

சவாரி செய்கிறாள்,

 அவர்கள்  மேலிடத்திற்குள் 

குனிந்து வளைந்து கும்பிடு போட்டு 

போவதைப் பற்றி கனவு காண்கிறார்கள்

 

அவள் வழக்கறிஞர்களின் விரல்களுக்கு மேல் 

சவாரி செய்கிறாள், 

அவர்கள் தங்கள் அதீதமான கட்டணத்தைப் பற்றி 

கனவு காண்கிறார்கள்.

அவள் பெண்களின் உதடுகளுக்கு மேல்

 சவாரி செய்கிறாள், 

அவர்கள்  முத்தங்களைப் பற்றி 

கனவு காண்கிறார்கள்.

 

ஆனால் ராணி மேப்

 அடிக்கடி அவர்களின் உதடுகளில்

 கொப்புளங்களை பூக்க  வைப்பாள் , 

காரணம் பெண்களின்  சுவாசம்

 மிட்டாய் வாசனையால்  நிரம்பியது. 

அதுஅவளை உண்மையிலேயே கோபப்படுத்துகிறது.

 

சில சமயங்களில் 

அவள் ஒரு நீதிமன்ற அதிகாரியின் 

மூக்கின் மேல் சவாரி செய்கிறாள், 

உடனே  அவர் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான 

வழியை மோப்பம் பிடிக்கும்

கனவை காண்கிறார்.

 

சில சமயங்களில் 

அவள் தேவாலயத்திற்கு தசமபாகமாக கொடுக்கப்பட்ட

 பன்றியின் வாலால் 

பாதிரியாரின் மூக்கில் கூச்சமூட்டுகிறாள் 

உடனே அவர் அதிக ஊதியம் பெறும்

தேவாலயப் பதவியைப் பெற்று விட

கனவு காண்கிறார்.

 

சில சமயங்களில் அவள் ஒரு சிப்பாயின்

கழுத்தில் மீது தேரை செலுத்துகிறாள், 

உடனே  அவன் வெளிநாட்டினரின் 

கழுத்தை வெட்டுவது, 

கோட்டைகளை உடைப்பது, 

உள்ளே பதுங்கியிருப்பது, 

சிறந்த தரமான ஸ்பானிஷ் வாள்களை

பிடித்து சுழற்றுவது  

 பெரிய மதுபானக் குவளைகளை 

தழும்ப தழும்ப நிரப்பி வைத்து சல்லாபமாக இருப்பது 

 போன்றவற்றைப் பற்றிய கனவுகளில் திளைக்கிறான்.

 ஆனால் விழித்தெழுந்ததும் 

அவன் காதுகளில் விழும் 

போர் முரசின் சத்தத்தால்

அவன் உடல் ஒரு கணம் உதறுகிறது. 

உடனே ஒன்றிரண்டு பிரார்த்தனைகளைச்

 சொல்லிவிட்டு மீண்டும் தூங்கச் செல்கிறான்

ஆனால் மேப் மாயம் செய்வாள்

குதிரைகளின் மேனிகளின் ஊர்ந்து 

அவைகளின் முடியை இரவில் சிக்கலாக்கி, 

பின்னர்  அவைகளையும்

 அழுக்குகளில் சிக்க வைத்து

அதை  கடினமான சிக்காக்கிவிடும்

அந்தச் சிக்கலை நீங்கள் தவிர்த்தால், 

அவள் உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை

 கொண்டு வருவாள் . 

கன்னிப்பெண்களுக்கு

 பாலுறவுக் கனவுகளைத் தந்து,

 காதலனின் எடையை எப்படித் தாங்குவது, 

குழந்தையைத் எப்படித் தூக்குவது 

என்று கற்றுக்கொடுப்பதே. அவள் தான்

 

ரோமியோ : 

அமைதி  அமைதி  

மெர்குஷியா அமைதியாக இரு 

ஏனென்றால் நீ பேசுவதில் அர்த்தம் எதுவுமேயில்லை

 

மெர்குஷியா : 

உண்மைதான். 

நான் கனவுகளைப் பற்றி பேசுகிறேன், 

அவைகள் உபயோகமற்ற மூளைகளால் தான்  உருவாக்கப்படுகின்றன. 

அவைகள் காற்றைப் போல 

மெல்லிய பொருளாகவும் 

அதை விட சீரற்றதாகவும் இருக்கின்றன. 

காற்றுக்கு ஏது நிதானம் ?

பனி உறைந்திருக்கும் வடக்கில் ஊதும்

திடீரென்று கோபமடைந்து தெற்கே வீசும்.

 

பென்வாலியோ :  

ஆனால் அந்தக் காற்று

இப்போது நம் மேல் அல்லவா

 வீசிக்கொண்டிருக்கிறது.

 

இரவு உணவும் முடிந்து விட்டது. , 

நாம் மிகவும் தாமதமாகத்தான் 

அங்கே செல்வோம் என்று நினைக்கிறேன்.

ரோமியோ : 

ஆனால் நாம் சீக்கிரமே போகப்போகிறோம்

என்று தான் நான் நினைக்கிறேன். 

இன்றைய இந்த இரவு விருந்து 

என் அகால   மரணத்தை எழுதும்

சமான விதியாக இருக்கப்போகிறதென்று 

என் உள்ளுணர்வு சொல்கிறது.

ஆனால் என் விதியை யார் எழுதுகிறார்களோ 

அவர்கள் தானே என்னை அங்கே அழைக்கிறார்கள்.

ஆகையால் வாருங்கள் 

அங்கேயே செல்வோம் 

என்  அடங்காத நண்பர்களே !

போகலாம்  

பென்வாலியோ :  

சரி தான் முரசை முழக்கு 

(மேடையின் மீது நகர்ந்து நகர்ந்து காணாமல் போகிறான்.

ஒவ்வொருவரும் அது போலவே நகர்ந்து நகர்ந்து 

காணாமல் போகிறார்கள்.)

மூலம் : ஷேக்ஸ்பியர்

மொழியாக்கம் : தங்கேஸ்

( தொடரும் )