ஏக்கம்....

காதல் கவிதை

ஏக்கம்....

ஏக்கம்...

அலைபேசியை விட்டு அகலா கண்களோடு
ஏதோ கடமையென விழுங்கி தொலைக்கிறாய்
எந்தன் சமையலை...
உன்னிடம் பேச எத்தனித்து
உன்னெதிரில் வந்து நிற்கிறேன்
நீயோ என்னை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வைப் பார்த்து விட்டு
தொலைபேசியில் தொலைந்துப் போகிறாய்...

எத்தனை  முறை தொலைபேசியில்
தொடர்புக் கொள்ள முயற்சித்தாலும்
வேறொரு தொடர்பிலிருக்கிறாய்
எனது விடுபட்ட அழைப்புகளை
கண்டும் காணாமல் அலட்சியமாய்
கடந்து செல்கிறாய்...
எப்போது புரியும் உனக்கு
எனது விடுபட்ட அழைப்புகளனைத்தும்
உனது அழைப்பிற்காய்
ஆவலாய் காத்திருக்கிறதென்று...

இப்படி எப்போதும் உனதருகிலிருந்தும்
உனது பார்வையிலிருந்து வெகுதொலைவில்
தள்ளி வைக்கப்பட்டிருக்கிறேன்..
என்னுடன் பேசிட
உனக்கு நேரமில்லை என்பதாலேயே
துவைக்கையில் உந்தன் ஆடைகளுடனும்
பாத்திரம் தேய்க்கையில்
நீ சாப்பிட்ட எச்சில் தட்டுடனுமே
எந்தன் உரையாடல்கள்
அரங்கேறிக் கொண்டிருக்கின்றன
தினம் தினம்...

இவையேதும் நடக்காததுப் போலவே
காத்திருக்கிறாய் கட்டிலின் மேல்
இரவின் ஏக்கங்களைத் தீர்த்துக்கொள்ள...
நானும் கிடத்தி வைக்கப்படுகிறேன்
மஞ்சத்தின் மேல் உணர்ச்சிகளற்ற
மரப்பாச்சி பொம்மையென...
அடுத்த ஜென்மத்திலாவது
அலைபேசியாய் பிறந்திட வேண்டும்
உந்தன் கைக்குள்ளேயே அடங்கியிருந்திடவே...

சசிகலா திருமால்
கும்பகோணம்.