கவிஞர் கேப்ரியல் அஹரா

நான் ரசித்த கவிஞர்

கவிஞர் கேப்ரியல் அஹரா

நான் ரசித்த கவிஞர்கள் (கேப்ரியல் ஆஹரா  1921  - )

கேப்ரியல் ஆஹரா  ஒரு நைஜீரியக் கருப்பினக் கவிஞர் மற்றும் நாவலாசிரியருமாவார். 

அவருடைய கவிதைத் தொகுதி THE CALL OF RIVER  NUN  ( நதியின் அழைப்பு ) 1953 ஆம் ஆண்டு நைஜீரிய கலை இலக்கிய விழாவில் சிறந்த கலை இலக்கிய விருதுபெற்ற கவிதை நூலாகும். 

இவரின் மிகச்சிறந்த  கவிதைகள் BLACK ORPHEUS 
( இருளின் கருமை ) என்ற ஆகச்சிறந்த பத்திரிகையில்தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டன. 

1960களில் இவர் மிகச்சிறந்த எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். காமன் வெல்த் கவிதை விருதும் இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

‘’ அன்றாடங்களின் இயல்பிலிருந்து அற்புதமான சில மகிழ்ச்சியான தருணங்களில் பயணித்து விட்டு மீண்டும் நிகழ்வின் இயல்புக்குள் நுழைந்து முழுமையடைகின்றன. இவருடைய கவிதைகள்’’ என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஆப்பிரிக்கச் சிந்தனை நாட்டுப்புறப்பாடல்களின் தெறிப்பு மற்றும் கிராமத்து உருவகங்கள் ஏராளமாகப் பொதிந்துகிடக்கின்றன.

இவருடைய முதல் நாவல் ‘’ THE VOICE ( குரல் ) மொழியின் ஆகச்சிறந்த  பரிசோதனை முயற்சியாகும்.

இவருடைய பிற்கால படைப்புகளாக ‘’ THE FISHERMAN!S  INVOCATION 
 ( மீனவனின் வழிபாட்டு பாடல்கள் ) என்ற கவிதைத் தொகுதியும் 
LITTLE SNAKE AND LITTLE FROG (சிறிய பாம்பும் சிறிய தவளையும் )1981
மற்றும் AN ADVENTURE OF JUJU ISLAND 1992 (ஜூஜூ தீவில் சாகசங்கள் )
என்ற குழந்தைகளுக்கான இரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

கீழே மொழி பெயர்க்கப்பட்டுள்ள இவரின் சிறந்த கவிதையான ‘’ ONCE UPON A TIME ( ஒரு காலத்தில் ) என்பது தற்போது +1 மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மாற்றுச்சிந்தனைகளையும் கவிதைகளையும் நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை எல்லாம் நமது முன்னாள் முதன்மைக் கல்விச்செயலாளர் ஐயா.திரு. உதயச்சந்திரன் அவர்களையே சாரும்.

இனி கவிதையைப்பார்க்கலாம்.
கவிதையின் சூழல் - இழந்த காலத்தைப்பற்றி ஆதங்கத்துடன் தந்தை.தன்    மகனிடம் பேசுவதாக அமைந்துள்ளது.

         ’ ONCE UPON A TIME ( ஒரு காலத்தில் ) 

மகனே !
ஒரு காலத்தில் அவர்கள் இதயபூர்வமாக 
சிரித்துக்கொண்டிருந்தார்கள்
கண்கள் பனிக்க வாய்விட்டு சிரித்தார்கள்

இப்பொழுதோ அவர்களின் பற்களால் மட்டுமே
சிரிக்க முடிகிறது
அதே நேரத்தில்
பனிக்கட்டிகள் போல உறைந்திருக்கும் 
அவர்களின் கண்கள்
என் நிழலுக்கும் பின்னால் 
எதையோ தேடிய வண்ணமிருக்கின்றன.

அது உண்மையிலேயே 
ஒரு அற்புதமான காலம் தான்
ஒருவர் மற்றவருடன் ஆத்மார்த்தமாக
கை குலுக்கிக் கொண்டார்கள்

ஆனால் அந்தக்காலம் 
காணாமல் போய்விட்டது மகனே !

இப்பொழுதோ ஜீவனற்று கை குலுக்குகிறார்கள்
அதே நேரம் அவர்களது இடது கை
என்னுடைய வெற்றுப் பையில்
எதையோ தேடியலைந்த வண்ணமேயிருக்கிறது.

ஒருவரை முதல் முறை வீட்டில் சந்திக்கும்போது
இது உங்கள் வீடு போல 
அடிக்கடி வந்து போங்க என்று
அன்பொழுக சொல்கிறார்கள்

அடுத்த முறை நான் அங்கே சென்றால்
அதற்கும் அடுத்த முறை 
நான் அங்கே சென்றால்
ஒரு வேளை 
மூன்றாவது முறையும் நான் அங்கே சென்று விட்டால்
என் முகத்திற்கு நேரே கதவுகள்
அறைந்து சாத்தப்படுகின்றன

நான் நிறையக்கற்றுக் கொண்டு விட்டேன் மகனே !
உடைகளைப்போல முகங்களை அணிவதற்கும்
நான் அவர்களிடம் கற்றுக் கொண்டேன் மகனே

எத்தனை எத்தனை முகங்கள்
வீட்டு முகம் , அலுவலக முகம்
வீதி முகம் , விருந்தளிப்பவர் முகம்
முகங்கள் முகங்கள் 
பல்வகை முகங்கள்எனக்கு

 அத்தனையும் சிரித்தபடியே இருக்கும்படி
பார்த்துக் கொள்கிறேன்
சுவரோவியத்தில் வரைந்து வைத்த 
மாறாத புன்னகை போலவே 

நான் உதடுகளால் மட்டுமே சிரிக்க
கற்றுக் கொண்டு விட்டேன் மகனே
எந்திரம் போல சாரமற்று கைகுலுக்கவும்
கற்றுக் கொண்டு விட்டேன் 

போய் வருகிறேன் என்று போலியாக 
உரைக்கவும் கற்றுக் கொண்டேன் 
( உள்ளூர வெறுப்பை உமிழ்ந்தாலும்கூட  )

மகிழ்ச்சியற்ற போதும் உங்களைச் சந்திப்பதில்
மகிழ்கிறேன் என்று ஒருவரிடம் உரைக்கிறேன்
அயர்ந்து போகச் செய்யும்
ஒரு சாரமற்ற உரையாடலுக்குப் பின்பும் 
உங்களோடு உரையாடியது அற்புதம் என்கிறேன்
வாய் நிறைய 

ஆனால் நீ என்னை நம்ப வேண்டும் மகனே !

நான் உன்னைப்போல மாறிவிட விரும்புகிறேன்

ஆம் உன்னைப்போல நானிருந்த காலத்தில்
எவ்விதம் இருந்தேனோ அப்படியே
மாறிவிட விரும்புகிறேன்

இவர்களிடம்  நான் கற்றுக் கொண்டதையெல்லாம்
மறந்து விட வேண்டும்

ஆனால் நான் கற்றுக் கொள்ள விரும்புவது 
உன்னிடமே மகனே
ஆம் முதலில் எவ்விதம் சிரிப்பதென்பதை
கற்றுக் கொள்ள வேண்டும்

என் சிரிப்பை கண்ணாடியில் பார்க்கும்போது
விஷப்பாம்பின் பற்கள் தான் அங்கே மின்னிடுகின்றன

ஒரு காலத்தில் நானும் உன்னைப்போலவே
வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருந்தேனே மகனே

அதை நீ எனக்கு மீண்டும் கற்றுத் தருவாயா ?
ஆத்மார்த்தமாக சிரிக்க 
ஆம் ஆனந்தமாக புன்னகைக்க ....

கவிஞர்  கேப்ரியல் ஆஹரா  
ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு - தங்கேஸ்