பெண்மையை போற்றும் 035

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றும் 035

பெண்மையை போற்றுவோம்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட 

பார்வையும் - நிலத்தில் யார்க்கும் அஞ்சாத 

நெறிகளும் - திமிர்ந்த ஞானச் செருக்கும்

இருப்பதால் - செம்மை மாதர் திறம்புவது 

இல்லையாம்”. 

இது முண்டாசு கவிஞனின் வரிகள். 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் , திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டிருப்பதால் செம்மை நெறியில் இருந்து ஒருபோதும் மாறுவதில்லை என்பது இதன் பொருள்.

உலக மகளிர் தினத்தை உலகமே கொண்டாடுகிறது ஆண் வர்க்கம். பெண்களை அன்று ஒரு நாள் மட்டும் வானளவு புகழ்ந்து பேசிவிட்டு அடங்கிவிடுகிறது. இது போன்றே ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில் தேசபக்தி பொங்கி அடங்கிவிடுகிறது. இது முற்றிலும் தவறானது. இரத்த அணுக்களில் சமுதாய உணர்வும், தேச பக்தியும் நம் மக்களுக்கு பீரிட்டெழ வேண்டும். அதுவே நம் நாட்டிற்கு உடனடித் தேவையாக இருக்கிறது.

ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கும், கிராம மக்களுக்கும், கடும் உழைப்பை நல்குவதால் மாடுகளை பெருமைப்படுத்தவே, விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாடுகிறார்கள். இது மாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். மகளிருக்கு எவ்வாறு பொருந்தும்?. ஆண்டு முழுவதும், காலம் முழுவதும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள். புதுமைப் பெண்களடி, பூமிக்கே கண்களடி எனக் குறிப்பிட்டார் மகாகவி. பூமிக்கு பெண்கள் கண்கள் மட்டுமல்ல. பூமிக்கு ஆதாரமே பெண்கள் தான்.

பெண்களை ஏறக்குறைய அடிமைகளைப் போன்று நடத்திய காலத்தில் மகாகவி பாரதியார் பெண்மையைப் போற்றுவதைத் தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார். “செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும் பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்” எனப் பேசி அக்ரஹாரத்திலேயே அதிசயத்தைத் துவங்கினார். அவர் விதைத்த விதை விருட்சமாய் வளர்ந்து பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், சில துறைகளில் அவர்களையும் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களைத் தெய்வமாக போற்றுவது தான் நம் பண்பாடு. நதிகளுக்குக் கூட கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைபடுத்தியிருக்கின்றனர்.

இறைசக்தியை கூட சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரராகப் போற்றினார்;கள், போற்றிக் கொண்டும் இருக்கின்றனர். இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பராமரிப்பதாகக் கூறி, பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள்.

பாரத நாட்டின் ஆன்மீக தத்துவ ஞானத்தை உலக அளவில் உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார். தாயார் ஜுஜுபாய் இல்லையென்றால், சிவாஜி சத்ரபதியாகிருக்க வாய்ப்பேயில்லை. எதிரி முகாமிலிருந்து பிடித்து வந்த பெண்ணை, தாயாக ஏற்று அதே முகாமிற்கு வீரர் மூலம் அனுப்பி வைத்தார் வீர சிவாஜி.

வீர சிவாஜி மட்டுமல்ல, எல்லோருமே யாரோ ஒரு பெண்ணிற்கு பிறந்து வளர்ந்தவர்கள் தான். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பெரும்பான்மையான ஆண்களின் வாழ்க்கை அனுபவம். அந்தப் பெண் தாயாகவும் இருப்பாள், தாரமாகவும் இருப்பாள்.

கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் பெண்கள் தங்கள் வாழ்வையே தியாகம் செய்கிறார்கள். ஆண்கள் குடும்பத்திற்காக எட்டு மணிநேரம் வேலை செய்தால், பெண்கள் நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள்.

படித்த பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றி குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். அதிகப் படிப்பு இல்லாத பெண்கள் சித்தாள், சாலை போடும் பணி போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஆண்களின் வருமானம் தீய வழிகளில் செலவாகும் வாய்ப்புண்டு. பெண்களின் வருமானம் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது குடும்ப நலனுக்கேப் பயன்படும். 

பெண்கள் முன்னேற்றப் பாதையில் வந்து கல்வியில் வளர்ச்சி பெறுவதனால் சமூகத்தில் இடம் பெற்றுள்ள குற்றங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரம் பெறுவதனால் சமூக குற்றங்கள் தடுக்கப்பட்டு அந்த சமுதாயமும் வெற்றிகரமாக அமையும். முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே சம்பாதித்தனர். ஆனால் இன்று பெண்களும் சமமாக வருமானம் ஈட்டுவதனால் பொருளாதாரம் மற்றும் உழைப்பாளர் தொகை என உயர்வடைகின்றது.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணி இருந்தவர்; மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”. ஆனால் இன்றோ, “பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற நிலை வந்தாகிவிட்டது. இது ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்;தியையும் மேம்படுத்த உதவும். முற்று முழுதாக சமூக வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணி செய்ய முடியும் என்பதை பெண்கள் நிரூபித்தனர். ஆண்களுக்கு சரிநிகராக பெண்களால் வேலை செய்ய முடியும் என்பதையும் பெண்கள் நிரூபித்தனர். இவை ஆண் சமுதாயத்திற்கு சவுக்கால் அடித்தாற் போல் புரிய வந்தது. பணியாற்ற பெண்களுக்கு  வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கும்   ஆண்களுக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பல பெண்கள் 1857 – ஆம் ஆண்டு மார்ச் 8 – ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிர்ந்து போன அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை அடக்க முயற்சித்தது. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை இனம் என்று பெண் தொழிலாளர்கள் “சம உரிமை, சம ஊதியம், 8 மணிநேர வேலை” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 1907 – ஆம் ஆண்டு மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளிகள், பல பெண்கள் அமைப்பு மற்றம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவரான கிளாரே செர்கிளே மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பல ஆண்டுகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து 1920 – ல் சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்கள் போராட்டத்தில் அலெக்ஸாண்டாரா கெலுன்ரா தான் மார்ச் 8 – ஆம் தேதியை உலக மகளிர் தினம் என பிரகடனம் செய்தார். 1921 – ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 – ஆம் தேதியை உலக மகளிர்  கொண்டாடி வருகின்றோம். 19 – ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் மெல்;ல மெல்ல  உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்து பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர். வேத காலங்களில் கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகள் மெத்த படித்தவர்களாகவும், கணவர்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்களாகவும் இருந்தனர் என உபநிடதம், ரிக் வேதம் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை அப்படியே தலைகீழாக சரியத் தொடங்கியது. “சதி” என்னும் உடன்கட்டை ஏறுதல், சிறு வயதில் திருமணம் என்ற பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கின. சுpல பெண்கள் வயது வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்கள் ஆயுள் முழுவதும் விதவையாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் 

  செய்திடல் வேண்டுமம்மா” 

என்ற கூற்றுக்கு இணங்க அப்பேற்பட்ட பெண்களையும், பெண்மையையும் வாழ்நாள் உள்ளவரை போற்றுவோம்.

- முனைவர்.வீ.உமா,

    இயக்குனர், உடற்கல்வித்துறை,
   அ.து.ம மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
     நாகப்பட்டினம்.