தமிழர்களின் பெருமை...! 10

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் பெருமை...! 10

தமிழர்களின் பெருமை

முனைவர் இரா சீதா, இணைப் பேராசிரியர், புனித பிலோமினாள் கல்லூரி

மைசூரு

அலைபேசி

முன்னுரை: தமிழைக் குறித்து எத்தனையோ அறிஞர்கள், சான்றோர்கள் புகழ்ந்து பேசினாலும் இன்னும் அதி தனிப் பெருமையுடன் தமிழ் விளங்கக் காரணம் அதில் உள்ள இலக்கியங்களும், கவிதைகளும் கதைகளும்தான்.  கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்கள் கூட தம் எண்ணத்தைக் கைவிட்டு தமிழைக் கற்கத் தொடங்கியது இதன் பெருமையை இன்னும் உயர்த்திப் பிடிக்கின்றது.  பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது திருக்குறள்தான்.  சமண மதத்தைப் பரப்ப வந்தவர்கள் கூட நாலடியார் என்ற பெரிய செல்வத்தை கொடுத்து விட்டுச் சென்றனர். அப்படிபட்ட தமிழின், தமிழர்களின் பெருமையை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்:

 முதல் நகைச்சுவை கதையும், அகராதியும்:

இரு பெரும் சுவைகளில் (துன்பம், இன்பம்) வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு’ என்ற நகைச்சுவைக் கதையை படிக்காதவர்கள் இல்லை.  கான்ஸ்டன்டைன் ஜோசெப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர்  இத்தாலியில் பிறந்தாலும், தமிழிலே சதுரகராதி எழுதியது போற்றற்குரியது. தமிழை முற்றும் உணர்ந்தாலொழிய இது சாத்தியமில்லை. 

 நான்கு நிலங்கள்:

வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு :நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து, அதற்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என வகுத்த திறத்தை என்னென்பது !  (பாலை என்பது குறிஞ்சியும் முல்லையும் மழையின்றி போனால் தற்காலிகமாக வறண்ட நிலமாகத் தென்படும்).  அந்தந்த இடத்தின்  சிறப்பை உணர அங்குத் தென்படும் கருப்பொருட்களின் துணைக் கொண்டு நிலத்தை வகுத்த முறையைப் பார்க்கும் போது நம் தமிழர்கள் எவ்வளவு அறிவு மிக்கவர்களாக இருந்திருப்பார்கள்  என நினைத்து வியப்பாக இருக்கிறது! (இன்றைக்கும் கூட நீலகிரி மாவட்டத்தில் குறிஞ்சிப் பூவைக் கொண்டு மனிதனின் வயதை கூறுகின்ற முறை இருக்கிறது) (உதாரணம் – இராஜம் கிருஷ்ணன் எழுதிய ’குறிஞ்சித்தேன் நாவல்).

ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் பெருமையை விளக்க பாடிய குறிஞ்சிபாட்டு மிகச் சிறப்பு(தொண்ணூற்று ஆறு வகையான பூக்களைப் பற்றி கூறுதல் கூடுதல் சிறப்பு).

       உணவு முறை:

     இன்றைக்கு பேசப்படும் சிறு தானியங்கள்தான் நம் சான்றோர்களின் உணவு முறையாக இருந்து வந்திருக்கிரது.  அரிசிச் சோறு என்பது பண்டிகைக் காலங்களில் அல்லது விருந்தினர் வந்தாலொழிய கிடையாது.(உதாரணம் :மேற்கூறிய நூல்).

           நட்பு:

நம்முடைய இலக்கியங்கள் சான்றோர்களின் சிறப்பான செயலை பல இடங்களில் விரிவாகப் பேசுகிறது:

 முல்லைக்காக பாரி தன் தேரையே கொடுத்தது

 குளிரால் நடுங்கிய மயிலுக்கு தன் போர்வையையே கொடுத்த பேகன்

 அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்

 பெருஞ்சித்திரனார் வறுமையில் வாடினாலும் தான் பெற்ற குமணனின் பரிசை ’ எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்’ என்று தன் மனைவியிடம் கூறியது

 கோவூர் கிழார் எத்தனையோ புலவர்களை துன்பத்திலிருந்து காத்தது(உதாரணம்- மோசி கீரனார், மற்றும் மலையமான் மக்கள்)

 

மன்னனாக இருந்தாலும் புலவர்கள் உண்மை பேசுவதில் அஞ்சாதவர்கள்.

அகிலமெக்கும் இப்படிப்பட்ட சான்றோர்களைக் காண நேர்ந்தாலும் தமிழின் சிறப்புக்கு இதுவும் ஒரு காரணம்:

மன்னன் எப்படிபட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிற்சில நேரங்களில் ஆணவத்துடன் அல்லது அறியாமையுடன் தவறு செய்ய நேரிடும். அதை மிக்க வீரத்துடன் அவனுக்கு எடுத்துரைத்த சிறப்பு கொண்டவர்களாக இருந்தார்கள் அக்காலப் புலவர்கள்:  சான்றாக சில பார்க்கலாம்:

 பாண்டியன் அறிவுடை நம்பி அதிகமாக வரி வசூல் செய்கிறான் என்பதை மக்கள் மூலம் உணர்ந்த பிசிராந்தையார்  மன்னனிடம் சென்று

’காய் நெல்லறுத்து கவளம் கொளினே’ என்ற பாடலின் மூலம் மன்னன் நல்ல முறையில் நாட்டை ஆள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.( யானை புக்க புலம் போல தானும் உண்ணான் ; உலகமும் கெடுமே) என்கிறார்.

 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் கருவூரை முற்றுகை இடுகிறான். கருவூரின்  அரண்மனை கைப்பற்றப்படுகிறது. இருந்தாலும் அம்மன்னன் வெளியே வரவில்லை. அவனை  வெளியே வருமாறு முரசறைகின்றனர் ; ஆனால் மன்னனோ பயந்தவாறு இருக்கிறான். அதைப் பார்த்த ஆலத்தூர் கிழார் 

’ஆங்கு இனிது இருந்த வேந்தனோடு ஈங்கு நின் மலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை என்பது நாணுத் தகவுடைத்து – ஆகையால், அடுநையாயினும்  விடுநையாயினும் நீ அளந்தறிதி நின் புரைமை என்கிறார்.  இதுவல்லவோ சான்றோர்களின் பண்பு !

 

மானம் காக்கும் பண்பு:

நாட்டைக் காக்கும் மன்னர்கள் தம் மானத்திற்கு இழுக்கு நேர்ந்து விட்டால் ’வடக்கிருத்தல்’ என்ற உயரிய கொள்கையைக் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். (இப்பண்பு தமிழுக்கே/ தமிழனுக்கே உரிய ஒன்று என்று கூறலாம்) இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால்  இறந்து பட்ட தன் நண்பனுக்காகவும் சான்றோர்கள் சிலர் வடக்கிருந்தனர். சான்றுகள் சில:

 கோப்பெருங்சோழன் தனக்கு நேர்ந்த அவமானத்திற்காக (சொந்த பிள்ளைகளே காரணம்) வடக்கிருந்தான்.

 பிசிராந்தையார்  கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருக்கிறார் (இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன் என்ற மன்னனின் கூற்றை மெய்ப்பிக்கிறார்).

 பாரிக்காக கபிலர் தென் பெண்ணாற்றங்கரையினில் வடக்கிருக்கிறார்.

 வீரம் மிக்க மன்னனின் பரம்பரையில் குழந்தை இறந்து பிறந்தால்  - குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார்- அக்குழந்தையின் உடலை வாளால் கீறி புதைப்பர் என்ற செய்தியை கணைக்கால் இரும்பொறையின் பாடலின் மூலம் அறிகிறோம்

.

மடல் ஏறல்:

தான் காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லையென்றால், தலைவன் பனங்கருக்கினால் செய்த குதிரையின் மீது ஏறி வந்து உயிர் துறப்பான் என்று பார்க்கிறோம். சிற்சில நேரங்களில் சான்றோர்கள்  பெண் வீட்டாரை சமாதானம் செய்வித்து அவர்களுக்குத் திருமணமும் நடத்தி வைப்பர் என்பதும் சங்க இலக்கியங்கள் மூலம் பெறப்படுகிறது.

 

பெருமை மட்டுமல்ல:  சிறுமையையும் கடிவர் சான்றோர் :

மனிதன் என்பவன் பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவன்; பொறாமை, கோபம் என்று வந்து விட்டால் நல்லது எது தீது எது என்பதை அவனால்  உணர முடியாது.  சான்றோர்கள் சிலர் வந்து அவனுக்கு உணர்த்தினாலும், அதை உணராத தன்மை கொண்டவர்களாக சிலர் இருந்திருக்கின்றனர். அவர்களையும் சமூகம் தண்டித்திருக்கிறது. எப்படி? அவனைப் போல் இராதே என்று சாடுவதன் மூலம்.  சான்று:

நன்னன் என்பவன் தன் தோட்டதிலிருந்து விழுந்த  மாம்பழத்தை எடுத்து ஒரு பெண் தின்ற குற்றத்திற்காக அவளுக்கு மரண தண்டனை விதிக்கின்றான்.  பெண்ணின் தந்தை பல கோடிப் பொருட்கள் தருகிறேன் என்று சொன்ன பின்பும் அவன் கேட்பதாக இல்லை.  உண்மையே  பேசும் கோசர்கள் முன் இவ்வழக்கு போகிறது. அவர்களும் நன்னனுக்கு பல வழிகளில் நீதியை உணர்த்துகின்றனர். ஆனால், அவன் கேட்பதாக இல்லை.- அவன் தனக்கு மாம்பழமே வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றான்-   பெண் இறக்கிறாள் .ஆகையால் இலக்கியத்தில் நன்னன் என்பவனுக்கு இழிவான நிலையே கொடுக்கப்படுகிறது.(கொடுங்கோல் நன்னன் போல்)

முடிவுரை: நம் சான்றோர்கள் நல்லது எது கெட்டது எது என்பதை சரியான முறையில் விளக்கி தாமே அதற்கு உதாரணமாக திகழ்ந்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.  ’ தீது நன்றும் பிறர் தர வாரா’  என்ற உண்மையை நிலை நாட்டி உலகிற்கு உதாரணமாக வாழந்தவர்கள் அவர்கள்  என்பதை உணரலாம். 

மேற்கோள்கள்:

இராஜம் கிருஷ்ணன்- குறிஞ்சித்தேன்.

புறநானூறு.