உன் பார்வையில்...

புதுக்கவிதை

உன் பார்வையில்...

கண்ணுக்குள் நீந்தும் சேலும் கயலும்
மனதுக்குள் நீந்த ஆரம்பிக்கின்றன
இப்போது மனது  கடல்
கருந்தடக் கன்னியின் பக்தனாகிறேன் நான்

உயிரை திருகி எடுத்துவிடும் 
ஒரு பார்வையை
வீசினால்
எவ்விதம் தாங்குவேன் சொல்
கொடுங்கூற்றுக்கு இரையாவதற்கோ
நாம் உயிர் வளர்ப்பது?

வேண்டுமானால் உன் வீட்டு தோட்டத்தில்
நித்யகல்யாணி பூவாக பூத்து விடுகிறேன்
பறித்து சூடிக்கொள்
ஆரணங்கே!

அடர் கானகம்போல பூத்துக் கிடக்கிறது
இருள்
அதை கூந்தலில் சிறை கொண்டு விட்டாய்
சரி
அதில் சூடிக்கொள்ள 
என் உயிர்தான் வேண்டுமா?

பேரண்டத்தின் பெரும் சுழற்சிகளை
சிறிய பார்வையின் வழியேதான்
நீ கடத்திவிட்டுப் போனபின்
உன் நினைவில் சுழலும்
அச்சாகிறேன் நான்

தங்கேஸ்