மரமே வரம்...021

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

மரமே வரம்...021

மரமே வரம்...!

 எட்டாம் வகுப்பு படிக்கும் விஜய் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு திரும்பினான். 

வீட்டின் கொல்லைப்புறத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்றான், பார்த்த காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைத்தது. 

கொல்லைப்புறத்தில் இருந்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டு விழுந்து கிடந்தன. விஜய் ஆசையாய் வளர்த்த பப்பாளி சாய்க்கப்பட்டு கிடந்தது. 

கொய்யா மரத்தை கூலியாட்கள்  வெட்டிக் கொண்டிருந்தனர் அவனது தந்தை பரமசிவம் அருகே நின்று கூலியாட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். 

மெல்ல அப்பாவை நெருங்கிய விஜய் தயக்கத்துடன் 'ஏம்பா மரங்களையெல்லாம் வெட்டுறீங்க' என்றான். 'புதுசா இரண்டு அறை கட்டப்  போறேன்' என்றார் பரமசிவம்.

 'அப்பா' நம்ம வீடுதான் நிறைய பேரு தங்குற மாதிரி பெரிசா, வசதியாத்  தானே இருக்கு,  பின்னே எதுக்குப்பா இன்னும் இரண்டு அறை?  என்றான். 

'உனக்கு ஒன்றும் தெரியாது, நீ போய் விளையாடு ' என்று விஜய்யை விரட்டினார் பரமசிவம். 

வேப்பமரம் தவிர எல்லா மரத்தையும் வெட்டிவிட்டு,  தன் விருப்பப்படியே புதிய அறைகளை கட்டி விட்டார். 

வீடு இன்னும் விசாலமாகிவிட்டது. ஆனால் காற்றாட உட்காரத்தான் இடமில்லை. காங்கிரீட் சுவருக்குள்ளே மின்விசிறியின் கீழே பிடித்து வைத்த சிலை போல அமர வேண்டியதாயிற்று. 

வெயில் வந்துவிட்டால் சுகமாக பருகும் இளநீர் விலைக்கு வாங்க வேண்டியதாகிவிட்ட து. 
 வலிமை தரும் பப்பாளியும் இல்லை. ருசியான மாம்பழங்களும் கிடைப்பது இல்லை. காசு கொடுத்து வாங்கிச்  சாப்பிட்டாலும் எதுவுமே ருசியாகத்  தெரியவில்லை.

 வீட்டில் புழுக்கம் அதிகரித்தது. அது மனதிற்குள்ளும் புழுக்கத்தை உண்டாக்கியது.
 எதிர்படுபவர்களிடம் எரிச்சலாய் பேச வைத்தது. வீட்டு முற்றத்தில் நின்ற வேப்பமரம் தான் இப்பொழுது பரமசிவத்தின் ஒரே ஓய்விடம். 

 முன்பு பால்கனியில் கிடந்த சாய்வு நாற்காலி இப்போது வேப்பமரத்தின் அடியிலேயே எப்போதும் கிடந்தது. ஒருமுறை பள்ளி விட்டு திரும்பிய விஜய், தந்தையைப்  பார்த்து 'இந்த மரத்தை மட்டும் ஏன் வெட்டலப்பா' என்றான். 
 அதற்கு பரமசிவம்,  'இந்த மரத்துல நம்ம குலசாமி இருக்குது' என்றார். 'நம்ம வீட்டடுல இருந்த மரங்களும் ஒரு வகையில குலசாமி தாம்பா' என்றான் விஜய். 
'என்னடா சொல்ற' என்றார்  பரமசிவம். 

'உண்மைதாம்பா  நாம  கேட்டது கிடைக்குறதுக்காக குலசாமியை  கும்பிடுகிறோம். ஆனா நாம கேட்காமலும் தர்றகுலசாமி மரங்கள் தாம்பா. காற்று, காய், கனி, நிழல், விறகு  எல்லாமே மரங்கள் மூலமாத்தான் கிடைக்குது.

மரம் என்பது இயற்கையின் வரம். அந்த வரத்தை வேண்டாம்னு  சொன்னா இப்போ நாம அனுபவிக்கிற கஷ்டமே சாபமாகத்  தொடரும். ஒவ்வொரு மரத்தையும் குலசாமியா நினைச்சா அவையே நம்மை வாழவைக்கும்' வேகமாய் பேசி முடித்தான் விஜய்.

பரமசிவம் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே சில நிமிடம் யோசித்தார். பிறகு நாற்காலியை வீட்டிற்குள் எடுத்து வைத்துவிட்டு, விஜயைக்  கூட்டிக் கொண்டு வேகமாய்  புறப்பட்டார் தோட்டக்கலை பண்ணைக்கு. மறுநாள் மரக்கன்றுகளுக்கு மகிழ்ச்சியாய் நீர் வார்த்துக் கொண்டிருந்தான்  விஜய்.

முனைவர் 
ம.ப.சாந்தி சங்கரி,  புதுச்சேரி.