கலில் ஜிப்ரானின் டான்சர்...

கலில் ஜிப்ரான் கவிதைகள்

கலில் ஜிப்ரானின் டான்சர்...

மொழி பெயர்ப்பு
குறுங்கதை
கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்

நடனமாடுபவர்
ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட அந்த இன்னிசைக்கு லயமாக அவள் அற்புதமாக நடனமாடினாள்.

நடனமாது ஒவ்வொரு நடனமாக லயத்து ஆடிக்கொண்டிருந்தாள். முதலில் தீ ஜூவாலையின் நடனம் பிறகு வாள் மற்றும் ஈட்டியின் நடனம் அடுத்ததாக நட்சத்திரங்களின் நடனம் அதற்கும் அடுத்ததாக பிரபஞ்சத்தின் நடனம் .கடைசியாக அற்புதமாக காற்றில் ஆடும் மலரின் நடனம். அத்தனையும் அதியற்புதம்.

 என்ன என்ன வகையாக இனம் பிரித்து  அம்மாது நடனம் ஆடினாளோ  அந்த அந்த பொருள்களாகவே மாறியிருந்தாள்.

 தீயாகி வாளாகி ஈட்டியாகி நட்சத்திரங்களாகி பிரபஞ்சமாகி காற்றில் ஆடும் மலராகி அடடா ஒவ்வொரு அம்சமாக நடனத்தில் வாழ்ந்து முடித்துவிட்டாள்.

நடனம் முடிந்த பிறகு இளவரசனுக்கு முன் பணிவாகத் தலைவணங்கி நின்றாள் நடனமாது. இளவரசன் அவளை தன்னருகே அழைத்து அவளிடம் கேட்டான்  ‘’ அழகின் அழகியே ! நளினத்தின் குழந்தையே ! பேரின்பத்தின் பெண்மையே  !   எப்படி இந்த தெய்வீக கலை உனக்கு கை வந்தது ? எப்போதிருந்து ? எவ்விதம் நீ பஞ்சபூதங்களையும் உன் அசைவுகளுக்கு இசையும் படி ஆட்டிவைக்கிறாய் ? சொல் பதுமையே ? என்றான்.

அந்த நடனமாது மீண்டும் இளவரசனை பணிவாக வணங்கிவிட்டு பவ்யமாக பதிலளித்தாள்

  “ சர்வ வல்லமை பொருந்திய அரசே ! உங்கள்  கேள்விகளுக்கெல்லாம்  என்னால் உளமார பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால்  உண்மையிலே எனக்கு அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

“” சொல் பெண்ணே “”
“” ஒரு தத்துவவாதியின் உயிர் அவனது தலையில் இருக்கிறது.””
“’ஒரு கவிஞனின் உயிர் அவனது இதயத்தில் இருக்கிறது. “”

“”ஒரு பாடகரின் உயிர் அவரின்குரல்வளையில் இருக்கிறது.”
“”ஆனால் ஒரு நடனக்காரரின் உயிர் அவரின் உடல் முழுவதும் நாட்டியமாடிக்கொண்டிருக்கிறது. “”

மூலம் கலில்ஜிப்ரான்
மொழிபெயர்ப்பு தங்கேஸ்