ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட் தமிழில்

ரோமியோ ஜூலியட்

Shakespeare’s
Romeo and Juliet

தமிழ் மொழியாக்கம்

( ரோமி​யோ  , ஜூலியட் நாடகம் )
Act 1 Scene 1
( காட்சி 1 )

இடம் :வெரேனா வீதி  
பொழுது - பகல்

பாத்திரங்கள் 

கேபுலட் குடும்பத்தின் வேலைக்காரர்கள்  
சாம்சன் மற்றும் கிரிகரி
கேபுலட் அவர் மனைவி திருமதி கேபுலட் 
மற்றும் உறவினன் டைபால்ட்

 மூத்த மாண்டேக்   அவர் மனைவி திருமதி மாண்டேக் 
 மற்றும் அவர்களின் உறவினர் பென்வாலியோ மற்றும் ​ரோமி​யோ  ,
மாண்டேக்கின் வேலைக்காரர்கள்   ஆப்ரம் மற்றும் செர்விங்கம் 
பொதுமக்கள் மற்றும் வெரோனாவின் அரசன்  எஸ்கேலஸ்  ஆகியோர்

, Shakespeare’s
Romeo and Juliet

தமிழ் மொழியாக்கம்

முன்னுரை

கதை சூழல் :

வெரோனா ஒரு அழகிய இனிய நகரம் .அங்கே இரண்டு பெரும் குடும்பங்களுக்கு இடையே தீராப் பகை  எப்போதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்று மாண்டேக் ( ரோமியோ குடும்பம் ) மற்றொன்று கேபுலட் (ஜூலியட் ) . இந்தப் பிரபுக்கள் குடும்பங்களின் குலப்பகை அந்த நகரத்தையே ஆட்டிப்படைக்கிறது. 

இன வெறி அறியா காதல் : 
ரோமியோ மாண்டேக் குடும்பத்தை சேர்ந்த பதினாறு வயது இளைஞன் அழகன் வீரன் . இவன் ரோசலின் என்ற அழகி மீது காதலில் விழுகிறான். அவள் கேபுலட் குடும்பத்தின் உறவினள். 

ஆனால் ரோசலின் ரோமியோவின்  காதலை அங்கீகரிக்கவில்லை. அவளது அன்பை பெறாத ரோமியோ ஒரு பைத்தியம் போல புலம்பிக் கொண்டு திரிகிறான். அவன் பெற்றோர்களுக்கு அது கவலையளிக்கிறது. காரணத்தை கண்டுபிடி என்று ரோமியோவின் நண்பர்களை  வேண்டுகிறார்கள். ரோமியோவின் நண்பர்கள் ரோசலின் என்ற அழகி தான் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.

காட்சி தொடங்குகிறது 

( கேபுலட்  குடும்பத்தின் வேலைக்காரர்கள் சாம்சன் மற்றும் கிரிகரி  ஆகிய இருவரும் மாண்டேக்கின்  குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் குடும்பத்துப் பெண்கள் பற்றியும் மிகவும்  தரக்குறைவான கொச்சையான மொழியில் ​பேசிக்கொண்டே  வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் )

சாம்சன் :: நான் உண்மை​யை சொல்றேன் அவங்க குப்பையை 
          நாம சுமக்க முடியாது

கிரிகரி:  :ஆமா அப்படி சுமந்தா  நாம குப்பைக்காரங்களா மாறிடுவோம்

சாம்சன் ::நான் என்ன  சொல்ல வர்றேன்னா அவங்க நம்மளை     வெறுப்பேத்துனா உடனே நாமளும் நம்மை வாளை உருவிடனும்

கிரிகரி   நீ வாளை உருவறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல     சட்டைக்காலர்ல இருந்து உன் கழுத்தை  உருவு. 
     அது உள்ள  முங்கிப்போய் கிடக்குது.

சாம்சன் :: இ​தோ பாரு  எனக்கு கோபம் வந்தா உடனே அடிச்சிருவேன்.

கிரிகரி   ::  ஆனா உனக்குத்தான்  கோபமே  வராதே

சாம்சன் ::: யாரு ​சொன்னா  எனக்கு பயங்கரமா கோபம் வரும். மாண்டேக்        வீட்டு நாயைப்பார்த்தாக் கூட போதும் அப்படி​யே........  

கிரிகரி : :பயந்துகிட்டு அப்படியே ஓடிப்போயிருவ அதுதான சொல்ல வர்ற  ?

சாம்சன் :: இல்​லை எனக்கும் பயங்கரமா கோபம் வரும்னு சொல்ல      வர்றேன்

கிரிகரி  :: உனக்கு பயங்கரமா​கோபம்   வருமா ? கோபம் வந்தா எப்படி       வரணும் தெரியுமா ? கர்ண  கொடூரமா வரனும்  கடைசி       வரைக்கும் எதிர்த்து நிக்கனும்   முடியுமா உன்னால ?

சாம்சன் : அட உனக்கு இன்னும் புரியலையா ? அந்த வீட்டு      நாயைப்பார்த்தாக்கூட போதும் அடங்காத கோபத்துல அப்டியே      நின்னுடுவேன்.

     நாயைப் பார்த்தாலே அப்படின்னா அப்ப மனுசங்களைப்      பார்த்தா எப்படின்னு நீ புரிஞ்சுக்கோ

          எதிரியோட ஆளுங்க அது ஆணோ பொண்ணோ  எதிர்ல                      பார்த்துட்டேன் அவ்வளவு தான் என்ன செய்வேன்னு எனக்கே       தெரியாது.

கிரிகரி ::   என்ன செய்வ ?

சாம்சன்  ::அப்படியே சுவரோரம் மறிச்சு நின்னுகிட்டு அவங்களை        சாக்கடையில தான் நடக்க விடுவேன்

கிரிகரி ::   இதுலயிருந்தே நீ சோதாப்பயன்னு தெரியுதா ?
          சொத்தைப் பயல்கள் தான் எப்பவும்  இப்படி சுவரோரம்      ஒதுங்குவாங்க 
          முழிக்காத சுவரோரம் ஒதுங்குனா நாம வீக்குன்னு அர்த்தம்      தெரியும்ல 

சாம்சன்  ( கிண்டலாக ) அதனால தான் அந்த வீட்டுப் பொம்பளைங்க         எல்லாம் சுவர் பக்கம் ஒதுங்குறாங்களா ?

     ஆனா எனக்கு அதெல்லாம் தெரியாதுப்பா அந்த வீட்டு      ஆம்பளங்களப் சுவரோரமாப் பார்த்தா ஆக்ரோஷமா மோதி       அப்படியே தெருவுல தள்ளி விடுவேன்

 ஆனா அதுவே      பொம்பளங்கன்னு  வச்சுக்கோ அப்படியே அந்தப் பக்கம்      தள்ளிட்டுப் போயி .....

கிரிகரி  : இதோ பார் சண்டை நம்ம எசமானர்களுக்குள்ள தான்       நாமெல்லாம் அவங்களோட வேலைக்காரங்க அதப்புரிஞ்சுக்கோ 

சாம்சன்  :ஆனா எனக்கு எல்லாமே ஒண்ணு தான்.  நான்      ஆம்பளைகளோட சண்டை போட்டா அப்படியே புயல் மாதிரி  பொங்குவேன் 

ஆனால்  சண்டையே     பொம்பளைகளோடன்னு  வச்சுக்கோ பூ மாதிரி குளிருவேன்

           ஆனால் ஒண்ணு பொம்பளையா இருந்தாலும் கோபம்  வந்திருச்சா  அவங்க தலையை சீவாம விடமாட்டேன்       

கிரிகரி  :   என்னது அவங்களுக்கு தலை சீவி விடுவியா ?

சாம்சன்  :: தலையையும் சீவுவேன் சில நேரம் தலை முடியையும்    சீவி விடுவேன் அது அப்ப அப்ப  மாறும் என் மனநிலையைப்  பொறுத்தது .

           நீ எடுக்க வேண்டிய அர்த்தத்துல எடுத்துக்கோ எனக்கு அதப்  பற்றி கவலை  இல்லலை 

கிரிகரி  :  ( சனங்களைப் பார்த்து )  பெண்களே உஷார் இவனை  கொஞ்சம் கவனிச்சுக்கோங்க      
    
சாம்சன்   :: (  இரட்டை அர்த்தத்தில் ) அவங்க என்னை கவனிக்க   ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் கவனிக்கிறதை    நிறுத்தவே மாட்டாங்க. 

கடைசில என்னை ஒரு கம்பீரமான    ஆண் அப்டின்னு சொல்லிட்டுத்தான் போவாங்க

கிரிகரி  :  நல்ல வேளை அவங்க உன்னைய நல்ல ஆண்ணு      சொன்னாங்க நல்ல மீன்னு சொல்லியிருந்தா யாராவது உப்பு       மசாலாவை  உன் மேல தடவி அப்படியே பொறிச்சு       சாப்பிட்டிருப்பாங்க 

( அப்போது மாண்டேக்கின் வேலைக்காரர்கள் ஆப்ரம் மற்றும் செர்விங்கம் இருவரும் எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள் ) 

கிரிகரி  : உன்னேட ஆயுதத்தை உடனே உருவு .அதோ மாண்டேக் வீட்டு      வேலைக்காரங்க எதிர்ல வர்றாங்க

சாம்சன்  : ( சட்டென்று பயந்து போய் ) அடடா இப்பா பார்த்து நான்      நிராயுதபாணியா நிக்கிறேனே.
 பரவாயில்லை நீ அவங்களோட      போயி  மோது. நான் உனக்கு உதவுறேன். 

கிரிகரி  :: (கிண்டலாக ) எனக்கு  எப்படி உதவுவ அவங்க பக்கத்துல வந்த  உடனே  அப்படியே தலைதெறிக்க ஓடிப்போயிருவ அதானே ?

சாம்சன்  :: நீ என்னைப் பத்தி எதுவும் கவலைப்படாத

கிரிகரி   :: என் கவலையே உன்னைப்ப்ற்றித்தான்

சாம்சன்  :: சரி சரி நாமளா  முதல்ல சட்டத்தை மீற வேண்டாம் . சண்டையை முதல்ல அவங்களே ஆரம்பிக்கட்டும்.

கிரிகரி  :: கேட்டுக்கோ அவங்க நம்ம பக்கத்துல வரும்போது அவங்களைப்       பார்த்து நான் என் கட்டை விரலை கடிப்பேன் .அத அவங்க       எப்படி வேணாலும் எடுத்துக்கட்டும் அதப் பற்றி எனக்கு கவலை       இல்லை.

சாம்சன்   :: இல்லை நான் என் கட்டை விரலை அவங்களைப் பார்த்து  கடிக்கப் போறேன்.அது அவங்களுக்கு பயங்கரமான  அவமானம்., 

அத மட்டும் அவங்க பொறுத்துகிட்டாங்கன்னா  அவங்க ஆம்பளங்களே கிடையாது

( சாம்சன் அவர்களைப் பார்த்து கட்டை விரலை கடிக்கிறான் )

ஆப்ரம் :   (சாம்சனைப் பார்த்து ) எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை       கடிச்சியா ?

சாம்சன் :: என் கட்டை விரலை நான் கடிச்சேன்
ஆப்ரம்  : (சாம்சனைப் பார்த்து )

 எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை      கடிச்சியா ?

சாம்சன்  (கிரிகரியைப் பார்த்து ) இந்தக் கேள்விக்கு நான் ஆமான்னு பதில்      சொன்னா சட்டம் நம்ம பக்கம் இருக்குமா இல்ல அவங்க பக்கம்      இருக்குமா?

கிரிகரி : அவங்க பக்கம் தான்
சாம்சன்  (ஆப்ரமைப் பார்த்து )  நான் என் கட்டை விரலை கடிச்சேன் ஆனா உன்னைப் பார்த்து கடிக்கலை

கிரிகரி : (ஆப்ரமைப் பார்த்து ) இதுக்காக நீங்க சண்டையை ஆரம்பிக்கப்          போறீங்களா ?

ஆப்ரம்   : இல்லையே 

சாம்சன்  : ஆரம்பிச்சாலும் அதப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை.    நாங்க யார்னு அப்பத்தான் உங்களுக்குத் தெரியும்

ஆப்ரம்    :எங்களுக்குப் பயமில்ல

சாம்சன்  : பார்க்கலாமா ?

( அப்போது மாண்டேக்கின் உறவுக்காரன் பென்வாலியோவும் மறுபுறம் கேபுலட்டின் உறவுக்காரம் டைபால்ட்டும்  அங்கே உள்ளே நுழைகின்றனர் )

கிரிகரி :  ( சாம்சனிடம் ) இதோ நம்ம முதலாளியோட உறவுக்காரர்
சாம்சன்  : ( ஆப்ரமிடம் ) மோதிப் பார்க்கலாமா ?

ஆப்ரம்    : பொய் சொல்லாத
சாம்சன்   (ஆப்ரமைப் பார்த்து ) நீ ஆம்பளையா இருந்தா வாளை உருவு
         ( கிரிகரியைப் பார்த்து ) எப்படி அடிச்சு நொறுக்கப்போறேன்னு                                      வேடிக்கை  பாரு

பென்வாலியோ :( வாளை உருவியபடியே ) நிறுத்துங்க அப்படியே                தள்ளிப்போங்க முட்டாள்களே நீங்க என்ன செய்றீங்கன்னு         உங்களுக்கே தெரியலை

( அப்போது கேபுலட்டின் உறவுக்காரன் டைபால்ட் அங்கே வருகிறான் )

டைபால்ட் 

(பென்வாலியோவைப் பார்த்து ) பென்வாலியோ போயும்           போயும் இந்தப் புள்ளைப் பூச்சிகள்ட்ட மோதப் போறியே உனக்கு          வெக்கமாவே இல்ல . இங்க திரும்பு உன்னை கொல்லப்போறவன்        இங்க நிக்கிறேன்.

பென்வாலியோ   டைபால்ட்டைப் பார்த்து )
 
நான் இவங்களை              அமைதிப்படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். 

ஒண்ணு உன்         வாளை அந்தப்பக்கம் வீசு . இல்லை இவங்களை      அமைதிப்படுத்துறதுக்கு எனக்கு உதவி செய்

டைபால்ட் (பென்வாலியோவைப் பார்த்து ) 

என்னது வாளை வச்சுகிட்டு        சமாதானம் பேசுறியா ?

          நரகம்ங்கற வார்த்தையை நான் எப்படி வெறுக்கிறோனோ அது          போலத்தான் சமாதானம்அப்டிங்கற வார்த்தையையும் நான்           வெறுக்கிறேன்- 

அது போலத்தான் மாண்டேக் அனைவரையும்        நான் வெறுக்கிறேன்.  இன்னும் மோதாம நின்னுகிட்டே                                 இருக்கிற  ஒரு கோழை

( அங்கே ஒரு பயங்கரமான சண்டை ஆரம்பிக்கிறது )

( பொதுமக்கள் நிறையப்போர் உள்ளே நுழைந்து சண்டையில் பங்கேற்க ஆரம்பிக்கிறார்கள் )

பொதுமக்கள்

 ( களேபரமான குரலில் ) கம்புகளை எடுங்கள் .
 கழிகளை         எடுங்கள். 
வாட்களை உருவுங்கள் வேட்களை வீசுங்கள்.            
 கேபுலட்டுகளை வீழ்த்துங்கள் மாண்டேக்குகளை மண்ணோடு                   சாயுங்கள் ..

( அப்போது மூத்த கேபுலட் கவுண் உடையிலும் அவர் மனைவி திருமதி கேபுலட்டும் சாரட் வண்டியில் வருகிறார்கள். அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பார்தது மூத்த கேபுலட் கோபமடைகிறார்

மூத்த கேபுலட் ( தன் மனைவியிடம் )

 என்ன அங்கே ஒரே கூச்சல்      உடனே என் வாளை எடு

திருமதி கேபுலட் :

இப்ப உங்களுக்தேவை ஊன்று கோல் தான் வாள் அல்ல

( அப்போது அங்கே மாண்டேக்கும் மாண்டேக்கின் மனைவியும் வருகிறார்கள் )

மாண்டேக் ( தன்  மனைவியிடம் ) 

 உடனே என் வாளை எடு அதோ           முதிய கேபுலட் தன் வாளை உருவி வீசிக் கொண்டிருக்கிறான்,       

   அதைப்பார்தத்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல்  இருக்கிறது      .

( கேபுலட்டைப் பார்த்து ) வாடா என் எதிரியே 

( மாண்டேக்கின் மனைவி தடுக்கிறாள் அவளைப் பார்த்து )

 உடனே என்னைப் போகவிடு அந்த கூட்டத்தோடு மோத விடு

மாண்டேக்கின் மனைவி : உங்கள் எதிரியை நோக்கி இன்னும் ஒரு எட்டு            கூட நீங்கள் எடுத்து வைக்க கூடாது.

( அப்போது அந்த நாட்டின் அரசன் எஸ்கேலஸ் தன் அவையோரோடு அங்கே   வருகிறான் )

அரசன் எஸ்கேலஸ் :  ( கோபத்தில் கலவரக்காரர்களை நோக்கி கத்துகிறான் ) 
              அமைதிக்கு எதிரிகளே முதலில் அடங்குங்கள்                .       உங்கள் ஆயுதங்களை அடுத்தவன் கழுத்திலா பாய்ச்சுவது ? 

        மனிதர்களா அல்லது விலங்குகளா நீங்கள் ?  நான் கத்துவது          உங்களுக்கு கேட்கிறதா இல்லையா ?  

 உங்கள் கோபத்தின் தாகத்தை தீர்த்துக்கொள்ள அடுத்தவனின் இரத்த     நாளத்தை கீறி அங்கே நீறுற்று போல பீறிடும் குருதியை அள்ளி அள்ளி                    குடிப்பீர்களா ?

உங்கள் கரங்களை பாருங்கள் . இரத்தக்கறை படிந்த ஆயுதங்கள்
அடுத்தவர்களுக்கு வலியை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும் அவைகளை உடனே விட்டெறியுங்கள்

உடனே அதை தூக்கியெறியுங்கள் அல்லது அதிகபட்ச தண்டனையை வழங்க நேரிடும்

( அனைவரும் ஆயுதத்தை கீழே போடுகிறார்கள் )

மூன்று முறை இந்த நகரத்தில் கலவரம் வெடித்துவிட்டது. 

காரணம் உங்கள்  அலட்சியம் தான்.
கேபுலட் மாண்டேக் மூன்று முறை நீங்கள் இருவரும் இந்த நகரத்தின் அமைதியை குலைத்திருக்கிறீர்கள்.

இந்த நகரத்தின் மிக மேன்மையாக குடிமக்கள் தங்கள் கண்ணியமான ஆடைகளை களைந்து விட்டு

 போருக்கு புறப்படும் ஆடைகளை பூட்டிக்கொண்டு  , வாள் கேடயங்களோடு வந்து உங்கள் சண்டையை விலக்கி விட வேண்டியதிருந்தது.

இன்னும் ஒரு முறை இந்த நகரத்தில் நீங்கள் கலவரத்தை தோற்றுவித்தீர்களானால் உங்கள் உயிர்களை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். 

உங்கள்  வெறுப்பை விழுங்கி விழுங்கி  அமைதியின் நகரமே  தன் புனிதத்தை இழந்து விட்டது.

(கேபுலட்டைப் பார்த்து ) 

கேபுலட் உடனே நீ என்னுடன் அவைக்கு வரவேண்டும்

( மாண்டேக்கைப் பார்த்து )  

 மாண்டேக் நீ மாலை என்னுடைய  பழைய அரசவைக்கு வரவேண்டும், என்னுடைய தீர்ப்பை நான் அங்கே உரைப்பேன். உனக்காக அங்கே உத்தரவுகள் காத்திருக்கின்றன. மறக்க வேண்டாம்

( கேபுலட் மாண்டேக் இருவரையும் பார்த்து ) இன்னொரு முறை இங்கே கலவரத்தை விளைவித்தால் உங்கள் உயிர்களுக்கு இங்கே உத்தரவாதமில்லை .உயிர்களை வாதை செய்யும் இந்த இடத்திலிருந்து உடனே எல்லோரும் கலைந்து செல்லுங்கள்
( அனைவரும் அந்த இடத்தை விடடு கலைந்து செல்கிறார்கள் )

                    %%%%%%%%%%%%%

                      பாகம் 2

( மாண்டேக்கின் அரண்மணையில்    மாண்டேக் மாண்டேக்கின் மனைவி திருமதி மாண்டேக் மற்றும்  அவர்களின் உறவினன் பென்வாலியோ ஆகியோர் மட்டுமே அங்கே இருக்கிறார்கள். )
  
மாண்டேக்  :(பென்வாலியோவைப் பார்த்து ) பழைய கலவரத்தை புதிய        போராக மாற்றியது யார் ? ஆரம்பிக்கும் போதே  
     நீ இங்கிருக்கிறாயா ?

பென்வாலியோ : உங்கள் எதிரிகளின் வேலைக்காரர்களும் உங்களது    வேலைக்காரர்களும் ஒரு சண்டைக்கு  தயாராகி கொண்டிருந்த  போது தான் நான் உள்ளே நுழைந்தேன்.

  நான் என் கை வாளை உருவியது அவர்களை விலக்கி             விடுவதற்குத்தான். ஆனால்  ஆத்திரம் கொண்ட டைபால்ட்            அங்கே எதிர்பாராமல் தோன்றி அத்தனை காரியங்களையும்                 கெடுத்து விட்டான். 

அது மட்டுமல்ல என்னை வாட்போருக்கும்     அழைத்து அவமானப்படுத்தி விட்டான்.

  காற்றின் மீது வாட்கள்    மோதும் கிண் கிண் சப்தம்.

 எங்கள்       வாட்கள் அங்கங்கே மோதி   வளைவுகள்  காட்டியபோது .கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டது-    

பிறகு அரசர் அங்கே வந்து  சேர்ந்த போது  ஆரவாரம் அதிகமாகி விட்டது.

திருமதி மாண்டேக்  : 

 (பென்வாலியோவைப் பார்த்து ) எங்கே    ரோமியோ ?  

இன்று நீ அவனைப் பார்த்தாயயா? நல்ல வேளை அவன் இங்கே இல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சி தான்

பென்வாலியோ (( திருமதி மாண்டேக்கிடம் )

 அம்மா என் மனதில்  ஏதேதோ   எண்ணங்கள் .

விடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்பே  நான் விழித்து விட்டேன். 

அப்போதே நகரத்திற்கு மேற்கே அடர்ந்து கிடக்கும் அத்திமரத் தோப்பிற்கு உலாவச் சென்றேன். 

அங்கே எனக்கும் முன்பே வந்து உலாவிக் கொண்டிருந்தது இன்னொரு உருவம். 

கொஞ்சம் அருகில் சென்று பார்க்கிறேன். 
அடடா அது வேறு யாருமல்ல
 உங்கள் மகன் ரோமியோ தான். 

நான் அவனை நெருங்கிச் சென்றேன். நான் நெருங்குவதை அறிந்து கொண்டதும் அவன் அங்கிருந்த தோப்புக்குள் சென்று மறைந்து கொண்டான். 

அப்போது தான் அவனும் என்னுடைய மனநிலையிலேயே இருப்பதை அறிந்து கொண்டேன்.

தனிமை விரும்பியாக மாறி விட்ட அவன் அடுத்தவர்கள் அருகில் வருவதை முற்றிலுமாக தவிர்க்கிறான்.

 தனிமை என்பது ஒரு மனநிலை. 
நாம் அவனை எவ்வளவுக்கெவ்வளவு தேடிச் செல்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவன் நம்மை விட்டு தள்ளிச் செல்கிறான். 

அவன் என்னை தவிர்க்க நினைப்பதை நான் உள்ளுணர்வால் அறிந்து கொண்டேன். 

அதனால் ஆச்சர்யப்படவில்லை ஆனந்தம் தான் கொண்டேன்.

ஆனந்தத்தின் ஆனந்தம் என்னவென்றால் அவன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு என்னையும் தனிமையில் விட்டுச்சென்றது தான்.

மாண்டேக்    :  (பென்வாலியோவைப் பார்த்து ) 

அந்த அதிகாலையிலேயே அவனை அங்கே அநேகர் அநேக நாட்கள் கண்டதாக கூறுகிறார்கள்.

 கவலையாக இருக்கிறது.
அவன் அழுத கண்ணீர் துளிகள் எல்லாம்  பனித்துளிகளாக மாறி புற்களின் மீது விழுகின்றனவாம்.

அவனது பெருமூச்சுக்கள் மேகத்தின் மீது பரவி பெரும் மழை மேகங்களை உருவாக்குகின்றனவாம்..

ஆனால் அதி உற்சாகமான சூரியன் தூர கிழக்கில் தோன்றி இரவுத்திரையை இழுத்து விட்டு ஆராவின் படுக்கை அறைக்குள் நுழைந்ததும் 

 ரோமியோவை அந்த தோப்பிற்குள் காண முடிவதில்லை. அவன் நேராக அரண்மணைக்குள் நுழைந்து விடுகிறான்.

ஒரு வேளை அவன் ஒளிக்கு அஞ்சி ஒளிந்து கொள்ள இங்கே வந்து விடுகிறானோ என்னவோ ?

உள்ளே நுழைந்ததும் அவனது மாடி அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொள்கிறான். 

அழகிய காலை வெளிச்சத்தை சிறிதும் அனுமதிப்பதில்லை. 
அவனே ஒரு செயற்கையான இருளை உள்ளறைக்குள் உருவாக்கி கொள்கிறான். 

அவனது இந்த மனநிலை அவனுக்கு என்ன கெட்ட செய்தியை கொண்டுவரப் போகிறதோ எங்களுக்கும் தெரியவில்லை.

இப்போது  அவனது உடனடித்தேவை ஆறுதல் மட்டுமே..
தகுதியான ஒரு உள்ளம் அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் .
அவன் விரைவிலேயே தேறுதல் பெற வேண்டும்.

பென்வாலியோ :(( மாண்டேக்கிடம் )

 அருமை மாமா அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு காரணம் தெரியுமா ?

மாண்டேக்  :  அவன் என்னிடம் ஏதும் கூறவில்லை. எனக்கு எதுவும் காரணம் தெரியாது.

பென்வாலியோ  : இதன் காரணத்தை அறிந்து கொள்ள நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லையா ?

மாண்டேக்  

  முயற்சி செய்யவில்லையா யார் சொன்னது ? 

எத்தனை எத்தனை முயற்சிகள் .?

 நான் முயன்றேன் முடியவில்லை. 
என் நண்பர்கள்  முயன்றார்கள் முடியவில்லை.

 யார் யார் முயன்றாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவன் அவனுக்கு மட்டுமே நண்பணாக இருக்க முயற்சிக்கிறான்.

அடுத்த நண்பர்களை நாடுவதில்லை.
அவன் அவனுக்கே நல்ல நண்பணாக இருக்கிறானா என்று  கூட              எனக்குத் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவனிடம் ஒரு ரகசியமிருக்கிறது.                 

அந்த இரகசியத்தை அவன் அவனிடமிருந்தே ஒளித்து வைத்திருக்கிறான்.

அவன் ஒரு மொட்டைப்போல் இருக்கிறான். ஆனால் அந்த மொட்டு உலகத்தைப்பார்த்து இன்னும் மலரவேயில்லை.

காரணம் அந்த மொட்டுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் அந்த மொட்டை உள்ளிருந்தே விசத்தால் தாக்கி கொண்டிருக்கின்றன.

அவன் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறான் என்ற காரணத்தை மட்டும் நாம் கண்டுபிடித்துவிட்டால் 

  அவனை , அவன் சோகத்திலிருந்து வெளியேற்ற அவனுக்கு நாம் உதவ முடியும் 

( ரோமியோ  அப்போது அரண்மணைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறான். )

பென்வாலியோ (  மாண்டேக் திருமதி மாண்டேக் இருவரையும் பார்த்து  )

இதோ ரோமியோ வந்து கொண்டிருக்கிறான்.
 
உங்கள் இருவருக்கும் ஆட்சேபனை இல்லையென்றால் 
நீங்கள் இருவரும் இந்த திரைமறைவில் ஒளிந்து கொள்ளுங்கள். 

நான் இன்று ரோமியோவிடம் காரணத்தை கண்டுபிடிக்கிறேன்.

மாண்டேக்    ( திருமதி மாண்டேக்கிடம் ) 

வா   இன்று ஒளிந்திருந்து உண்மையான காரணத்தை கண்டுபிடிப்போம்  

அதிர்ஷ்டம் நம் பக்கம் தான் உள்ளே வா

(  மாண்டேக் திருமதி மாண்டேக் இருவரும் திரைக்குப் பின்னால் மறைகிறார்கள்.   
)
              888888888888888888888888888888888888888888
பென்வாலியோ  : குட்மார்னிங் ரோமியோ

ரோமியோ   :என்னது இன்னும் நான் கண் திறக்கவில்லையா ?

பென்வாலியோ   இப்போது தான் மணி ஒன்பதாகிறது.

ரோமியோ     : 
நண்பா நீ சோகமாக இருக்கும் போது மணி நத்தை போல      நகர்கிறது.
 அது சரி அதற்குள்ளாகவே என் தந்தை  இங்கிருந்து கிளம்பிவிட்டாரா ?

பென்வாலியோ  :
  
அது சரி அது என்ன சோகம் அது ?    என் ரோமியோவின் நேரத்தை இப்படி நீட்டித்துக்   கொண்டே செல்கிறது ?

ரோமியோ   : 
நேரத்தை பறக்க வைக்கும் மந்திரம் ரோமியோவிடம்  இல்லை.

பென்வாலியோ   : 

ரோமியோ நீ காதலுக்குள் இருக்கிறாயா ?

ரோமியோ     : 

இல்லை வெளியே இருக்கிறேன்

பென்வாலியோ    : 
காதலிக்கிறாயா ?

ரோமியோ     : 

ஆம் நான் காதலிக்கிறேன். 
ஆனால் அவள் என்னை  காதலிக்கவில்லை

பென்வாலியோ     

மேலோட்டமாகப் பார்த்தால் காதல் மென்மையானதாக தோன்றும். 
ஆனால் அதை அனுபவித்துப் பார்த்தால் தான் அது எவ்வளவு கரடு முரடானது என்று புரியும்
.
ரோமியோ    :

 காதல் கண்ணற்றது தான்
 ஆனால் ஆச்சரியம்  
பாதையில் நடப்பதையெல்லாம்  அது தன் மனக்கண்ணால் 
பார்த்தபடியே தான் இருக்கிறது.

ரோமியோ     சரி எங்கே உணவருந்தலாம் 

(பென்வாலியோவின் கரங்களைப் பார்த்து திடுக்கிட்டு )

ஓ என்ன நடக்கிறது இங்கே ? 

என்னிடம் நீ எதுவும் சொல்லாவிட்டாலும் கூட எல்லாம் தெரியும் எனக்கு 

.இந்த இரத்தம் வெறுப்பினால் விளைந்தது தானே ? 

ஆனால் அதைவிட வலிக்க கூடியது  காதல் என்று தெரியுமா நண்பா ?

போரிடும் காதல்  போரிடும் காதல்
காதல் என்பது வெறுப்பை நேசிப்பது
காதல் என்பது ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்று வருவது

ஓ அது  ஒரு சோக மகிழ்ச்சி 
தீவிரமான முட்டாள் தனம்
அழகிய வசந்தம் 
அது ஆனால் வெறுப்பில் பூக்கிறது

காதல் ஒரே நேரத்தில் எடையுற்றதாகவும்  கனமானதாகவும் இருக்கிறது

ஒளியாகவும் இருளாகவும்  இருக்கிறது . வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆரோக்கியமாகவும் நோயுற்றதாகவும் இன்னும் விழிப்பாகவும் உறக்கமாகவும் உலவுகிறது.

காதல் எல்லாமாக இருக்கிறது காதலாக இருப்பதை தவிர.

இது தான் காதல்.

 காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
 என்னை யாரும் காதலிக்கவில்லையென்றாலும் கூட
காதலைப் பற்றி தெரியும்

(பென் வாலியா முகம் மாறுகிறது)

என்னைப் பார்த்து நீ சிரிக்கிறாயா ?

பென்வாலியோ     :

 இல்லை நண்பா நான் அழுகிறேன்.

ரோமியோ         :  

அடடா நீ ஏன் அழுகிறாய் ?

பென்வாலியோ      : 

உன்னுடைய  இதயம் அழுது கொண்டிருக்கிறதே  அதற்காக 

ரோமியோ      : 

அது தான் காதலின் விதி. 
துயரத்தின் எடை ஏற்கனவே என் இதயத்தை அழுத்திக்கொண்டு 
தான் இருக்கிறது.

பென்வாலியோ      :  

இப்போது உன் இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் 
காதலின் துயரம் 
என் இதயத்திற்குள் புகுந்து  தன் எடையை  கூட்டுகிறது.

ரோமியோ   

பெருமூச்சுக்களில் எழும் பெரும் புகையே காதல்

இதயம் சுத்திகரிக்கப்படுவதால் காதலர்களின் கண்களில்
ஒரு சுடரின் ஒளி உலவுகிறது.

இதயம் நொறுங்குவதால் காதலர்களின் கண்களில் ஒரு கடல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

காதல் என்பது வேறென்ன ஒரு புத்திசாலித்தனமான பைத்தியகாரத்தனம்

அது ஒரு அபூர்வமான சுவாசிக்கும் மூச்சுத்திணறல் 

ஆனால் இனிக்கும் பாதுகாப்பு 

 விடைபெறலாம் நண்பா 

பென்வாலியோ   

சரி நான் ஒன்று சொல்கிறேன்.
 அதுவும் நீ அனுமதித்தால்
இல்லையென்றால் நீ எனக்கு தீங்கு செய்கிறாய்
சரி தானே ?

ரோமியோ   :  

ஓ நானாக நானில்லை நண்பா 
என்னையே நான் எப்போதோ இழந்து விட்டேன்
இங்கே நானில்லையே !
இந்த ரோமியோ எங்கே எவ்விடமோ அலைந்து கொண்டிருக்கிறான்.

பென்வாலியோ   :  

அதே சோகத்தோடு சொல்லிவிடு 
ரோமியோ நீ யாரைக் காதலிக்கிறாய் ?

ரோமியோ    : 

என்னது துயரத்தை உன்னிடம் சொல்லிவிடவா ? 

ரோமியோ புலம்ப வேண்டுமா ?

பென்வாலியோ   :

 புலம்ப வேண்டாம் சோகத்தை மட்டும் சொல்லிவிடு

ரோமியோ      

நோயுற்ற மனிதனை அவனின் விருப்பப்படி துயரத்தில்  உழல விடு.

 உயிரை வாதித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள்...

சோகம் சோகம் சோகம் நண்பா சொல்வதே சோகம்

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.

பென்வாலியோ   : ஓ

 ரோமியோ நீ காதலிக்கிறாயா ?
 ஓ நண்பா நான் யூகித்தேன் நீ உறுதிப்படுத்தி விட்டாய்

ரோமியோ  :  

சரி தான் நண்பா நீ கண்டுபிடித்து விட்டாய். 
அவள் அழகி
 
பென்வாலியோ    

அவள் அழகி 
அடடா என் அவதானிப்பு சரி

உன் காதல் விரைவில் வெற்றி பெறும் .

சரி  சரி  இலக்கை நோக்கி
அம்பை விடு

ரோமியோ   : 

காதலில் உன் இலக்கு தேறாது நண்பா
 மன்மதனின் அம்பை அவள் அனுமதிக்கவில்லை. 

அவள் டயானாவைப் போல அதிபுத்திசாலி. 
அம்புகளை தன் மீது பாயவிடாமல் தன்னை சுற்றி 
ஒரு கவசத்தை அமைத்திருக்கிறாள். 

ஆம் கற்பினால் அமைத்த ஒரு கவசம்.

ஆம் காதலின்  குழந்தைத்தனமான பலவீனமான அம்புகளால் 
ஓர் நாளும் அவளைத் உரசக் கூட இயலாது.

அவள் வசீகரிக்கப்படாமலேயே வாழ்ந்து வருகிறாள்.

அவள் காதலின் கனிவான முற்றுகையில் என்றும் இருப்பதற்கு ஆசைப்படவேயில்லை

மின்னல் தாக்கும் விழிகளின் சந்திப்புகளையும் 
அவள் சற்றும் விரும்பவேயில்லை

தங்கத்தாலேயே அபிசேகம் செய்தாலும் காதலுக்கு அவள் மடியில் 
சற்றும் இடமில்லை.

அவள் அழகி பணக்காரி 
ஆனால் உண்மையில் பரமஏழை

ஏனென்றால் அவள் உலகை விட்டு மறையும் போது அவள் அழகும் அவளுடனேயே மறந்து போகும் அல்லவா ?

பென்வாலியோ     

அவள் கன்னியாகவே வாழ்ந்து விட வேண்டுமென்று சபதம் எடுத்திருக்கிறாளா ?

ரோமியோ    

உண்மை தான் .கன்னியாகவே காலம் கழித்து 
அவள் அழகை பாழாக்கி கொண்டிருக்கிறாள்.

அழகு அவளது அகம்பாவத்தால் பட்டினி கிடக்கிறது.

அவளது பிடிவாதம் அவளது அழகை 
அத்தனை சந்ததியிடமிருந்தும் பிரித்து வைக்கப்போகிறது.

அவள் அழகி அதை விட புத்திசாலி
அதிபுத்திசாலித்தனத்திற்கும் அதிகமான அழகி

என்னை விரக்தியடையச் செய்தே அவள் பேரின்பம் பெறுகிறாள்.

அவள் என் காதலை துறந்து விட்டேன்
ஆதலால் நான் இறந்து விட்டேன்.

இறந்தவன் ஏன் இன்னும்  உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ?

அவளை பார்ப்பதற்கம் பேசவதற்கும் மட்டும் தான். 

பென்வாலியோ   : 

நான் சொல்வதை கேள் .
 நீ அவளை நினைக்காதே

ரோமியோ       

 நினைப்பதை மறப்பதற்கு
 நீ எனக்கு பாடம் எடு

பென்வாலியோ  
  ஓ ரோமியோ !

உன் விழிகளை அகலமாக விரித்து இந்த வீதிகளெங்கும் உலவவிடு. அடுத்த அழகிகளை தேடலாம்.

ரோமியோ     :

 நண்பா அடுத்த பெண்களை 
நான் ரசித்தால் அது அவள் அழகைத்தான் அதிகப்படுத்தும்

அழகிய பெண்கள் மகிழ்ச்சிக்காக முகமூடி அணிகிறார்கள்.

ஆனால் அந்த கருப்பு முகமூடி  அதற்கு கீழே ஒளிந்திருக்கும்
 அபரிதமான அழகைத்ததான் எப்போதும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.

விதியினால் குருடானவன் அவன்  பார்வை என்னும் பொக்கிஷத்தை  பெற்றிருந்த காலத்தை ஒரு நாளும் மறக்க முடியாது.

அழகிய ஒரு பெண்ணை 
நீ எனக்கு காட்டு..
 அந்த அழகியின் அழகு எனக்கு என்ன தரும் ? 

ஒரு குறிப்பு மட்டுமே தரும்

அதுவும். என்ன குறிப்பு  ?
என்னவளை விட அழகியை 
எங்கேயும் காணமுடியாதென்ற குறிப்பு தான் அது.

மறப்பதை  மறந்தும்நீ
 எனக்கு மறந்தும் கற்பிக்க முடியாது.

பென்வாலியோ   

 எப்படி மறப்பதென்று நான் உனக்கு கற்பிக்கிறேன்

. இல்லையென்றால் அந்த காதலின் மீது ஆணையாக நான் இறந்து விடுகிறேன்.

( இருவரும் மறைகிறார்கள் )
          *********************************************
மூலம்: ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்