பெண்ணியம் காப்போம்...! 034

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்ணியம் காப்போம்...! 034

பெண்ணியம் காப்போம்.

குறிப்புச் சட்டகம்:

முன்னுரை
அவ்வையார்
கர்ணம் மல்லேஸ்வரி
லட்சுமி அகர்வால்
முடிவுரை

முன்னுரை:
    ஆண், பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடு பெண்ணியம்.சமூக உரிமைகள், சலுகைகள் இவற்றை பாலினத்தின் வழியே பிரித்து,அதை ஆண்களுக்கு முதன்மையாக கொடுத்து ,பெண்களை ஒதுக்கி ஆளும் ஆணாதிக்க சமூகத்திற்கு," ஆணும், பெண்ணும் சமம்" என உரைக்கச் சொல்லுவதே பெண்ணியம்.
    சுருங்கச் சொன்னால் 'பெண்மை' என்பது, பணிவின் ஆழத்தை தொடுவது. 'பெண்ணியம்' என்பது சுயமரியாதையின் உச்சத்தை தொடுவது எனப் பொருள் கொள்ளலாம்.
    பெண்ணின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்க நினைத்த ஆண்களுக்கு,' பெண்' என்பவள் உனக்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பதை நிரூபித்து, ஆணின சமூகத்தை தலைகுனிய செய்த சம்பவங்கள் எத்தனை எத்தனையோ? அதில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

அவ்வையார்:
    அவ்வையாரின்  நீதிகளை உணர்த்தும் எத்தனையோ பாடல்களை நாம் அறிந்திருப்போம். ஆனால், 
   தமிழ் சபைக்குள் நுழைந்த ஔவையை அவமதிக்க நினைத்த கம்பன், அவரை நோக்கி 'ஒரு காலடி நாலிலைப் பந்தலடி'.அது என்ன? என புதிர் போட்டார் அவ்வையிடம்.
ஔவைக்கு உள்ளுக்குள் ஒரே கோபம்.  தன்னை' டி' என்று சொல்லி பாட்டில் அவமதித்து கூறிய கம்பனுக்கு ,பதிலடிக் கொடுக்கும் விதமாக
 அவ்வை ஒரு பாடல் பாடினார்.
 எட்டே கால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே ,முட்ட மேல் கூரை இல்லா வீடே,
 குல ராமன் தூதுவனே, 
ஆரையடா சொன்னாயடா., என்பதே அந்த பாடல்.
    இந்தப் பாடலின் பொருள் :
    'எட்டே கால் லட்சணமே',அப்படி என்றால் அவலட்சனம் என்று பொருள்.  'எமனேறும் பரியே', அப்படி என்றால் எமனின் வாகனமான எருமை மாடு என்பது பொருள். 'மட்டில் பெரியம்மை வாகனமே', அப்படி என்றால், மூதேவியின் வாகனமான கழுதை என்பது பொருள். 'முட்ட மேற்கூரை இல்லா வீடு' அப்படி என்றால், குட்டிச்சுவர் என்பது பொருள் 
'குலராமன் தூதுவனே' என்றால் குரங்கு என்று பொருள். இப்படியெல்லாம் கூறிவிட்டு ,நீ கேட்ட கேள்விக்கு பதில் 'ஆரைக் கீரையடா' என்று பதிலளிப்பதாக இந்த பாடல் அமைந்திருக்கும்.
சுயமரியாதையை யாராவது சீண்டிப் பார்க்கும்போது கோபம் தலையின் உச்சிக்கு செல்லும் என்பார்கள். அப்படி ,கோபம் உச்சிக்கு சென்ற நிலையில் தான் அவ்வை இந்த பாடலை எழுதியிருப்பார். இந்த பாடலைக் கேட்டவுடன் கம்பனின் தலை நிச்சயம் நெற்கதிர் போல் தலை கவிழ்ந்து தான் இருந்திருக்கும்.

கர்ணம் மல்லீஸ்வரி:
    2000 ஆவது ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கு மல்லீஸ்வரியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதை அறிந்த சில ஆணாதிக்க மனிதர்கள், எத்தனையோ ஆண்கள்  இருக்கும் போது போயும் போயும் ஒரு பெண்ணை அனுப்ப வேண்டுமா? என வினவினர்.இத்தனை இன்னல்களையும் தாண்டி மல்லீஸ்வரி பளு தூக்கும் போட்டியில் நம் நாட்டின் சார்பாக கலந்து கொண்டு, இந்தியாவிற்கு ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று தந்தார், பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயர்  இடம்பெறுமாறு செய்தார்.
   அப்போது ஒரு கவிஞன் எழுதினான், "மல்லீஸ்வரி தூக்கி நிறுத்தியது இரும்பை மட்டுமல்ல, இந்தியாவின் மானத்தையும் கூடத்தான்"என்று. 'பெண்'என கேவலமாக நினைத்த ,அத்தனை மனிதர்களின் தலையையும் வெட்கத்தால் குனிய வைத்து, தலை நிமிர்ந்து கழுத்தில் பதக்கத்தை அணிந்து வந்தார் மல்லீஸ்வரி.

லட்சுமி அகர்வால்:
     2005 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் இது. தன்னிடம் சொல்லிய காதலை ஏற்க மறுத்த பெண்ணின் மீது ,அந்த காதலனால் ஒரு லிட்டர் திராவகம் வீசப்பட்டது. அந்தப் பெண்ணின் முகமும், உடலும் இந்த செயலால் சிதைந்து போய்விட்டது. அந்தப் பெண் நீதிமன்றத்திடம் 10 ஆண்டுகள் போராடி பட்டாணி,சுண்டல் மாதிரி கண்ட இடங்களில் திராவகம் விற்கப்படக்கூடாது. அதற்கென்று சில நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டு அங்கு மட்டுமே விற்கப்படவேண்டும் என்ற ஆணையை போராடி வாங்கினாள். அந்தத்  துன்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்த லட்சுமி அகர்வால், தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பெண்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை வைத்து ஒரு 'ஆடை அலங்கார அணிவகுப்பை' நடத்திக் காட்டினார். மேலும் ஆக்ராவில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இவரின் செயலை பார்த்த பத்திரிகையாளர்கள், இவரிடம் நேர்காணல் எடுக்க விரும்பினர். அந்த  நேர்காணலின் போது ,நீங்கள் இப்பொழுது என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது ,லட்சுமி அகர்வால் சொல்கிறார் தன் மீது திராவகம் வீசி அவரைப் பார்த்து, நண்பரே,
உங்களால் என் புறத்தோற்றத்தை மட்டுமே மாற்றம் செய்ய முடிந்தது.ஆனால் 'மனவலிமை நிறைந்த என் அகத்தோற்றத்தை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது' என கூறினார் .
   தன்னை வேண்டாம் என சொன்ன ஒரு பெண், இந்த உலகத்தில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடாது, என்று அவள் மீது திராவகத்தை வீசிய அந்த மனிதன் இந்த செய்தியை கேட்டவுடன் நிச்சயம் தலைகுனிந்து தான் போயிருப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முடிவுரை:
      தன்னிடம் ஒருவன் வெளிப்படுத்திய காதலை மறுத்து உலகிற்கு தொண்டு செய்வதே என் லட்சியம் என்ற பெண் காப்பிய கதாபாத்திரமான மணிமேகலையை நாம் யாவரும் அறிவோம். அவளின் பெண்மையை போற்றுகிறோம். அதே நேரத்தில் அவள் மீது எந்த கோபச் செயலிலும் ,அதாவது அவளை இழிவாக கருதாமல், ஆயுதங்களால் தாக்காமல், அவர் விருப்பத்தை அறிந்து, அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பெண்ணியம் காத்த அந்த ஆண் மகன், 'உதயகுமரனையும் நாம் போற்றத் தான் வேண்டும்'.ஏனென்றால் அவன் தான் 'பெண்ணியம்' காத்தவன்.
    பெண்மையோடு கூடிய பெண்ணியம், இதை கண்ணியத்தோடு ஏற்றுக் கொண்ட ஆணியம் ,என்ற நிலை வந்தால் தான் 'பெண்ணியம்' என்பது காக்கப்பட்ட ஒன்றாக கருதப்படும். அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

செ. சுகந்தி,
சாத்தனூர், திருவண்ணாமலை மாவட்டம்.