தனியொருவனுக்கு உணவில்லையெனில்...!

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தனியொருவனுக்கு உணவில்லையெனில்...!

தனியொருவனுக்கு உணவில்லையெனில்...

தனி ஒரு மனிதனுக்கு

  உணவில்லையெனில்

ஜகத்தினை அழிக்க அன்று

  சூளுரைத்தான் பாரதி!

 உணவு மட்டுமா இல்லையின்று?

    நீரும் இல்லையே இங்கு!

உணவும் நீரும் எங்கோ

     பதுங்கிச் சிரிக்கின்றனவே!

பதுக்கல் மன்னரும் மாபாதகரும் 

       அரைகுறை அரசியல்வாதிகளும்

வெளிநாட்டு வங்கிகளில்

    சேர்த்துச் செழிக்கின்றனரே!

புரட்சிக்கவியும் மீசைமுறுக்கி

    பொறுத்துப் பார்த்துப்

பொறுமை இழந்துவிட்டான்!

    சினத்துடன் சீறுகிறான்!

வேதனைப் பெருமூச்சு கூடப்

    புயலாய் வீசுகிறதே!

அவன் விழிகளில் துளிர்த்து

    வீழும் கண்ணீர்த் துளி

பெருவெள்ளமாய் மாறியே

    பேரழிவு தருகிறதே!

புரட்சிக்கவியே அடங்கி விடு!

    புயலும் வெள்ளமும்

வாட்டி  வதைப்பது ஏழை

    எளியோரைத் தானே? 

புதுப்பிறவி எடுத்து நீயும்

    பூவுலகில் வந்துவிடு!

தீயோரைத் தண்டித்து நாம்

    தீயவை துரத்துவோம்!

ஒவ்வொரு மனிதனுக்கும்

    உணவு உடை நீரும்

நேர் கொண்ட பார்வையும்

    திமிர்ந்த ஞானச்செருக்கும்

 பள்ளி கல்லூரிகளில் கல்வியும்

      கவிதைகளும் தந்திடுவோம்! 

புதியதோர் உலகம் செய்து

      புரட்சிக்கொடி  நாட்டிடுவோம்!

முண்டாசுக் கவியே நீ

        முன்னோடி வந்து விடு!

புவனா சந்திரசேகரன்.