முறிந்த சிறகுகள் காவியத்தின் ஒரு பகுதி

முறிந்த சிறகுகள் காவியம்

முறிந்த சிறகுகள் காவியத்தின் ஒரு பகுதி

நான்  மொழி  பெயர்த்த  கலில்ஜிப்ரானின்  முறிந்த சிறகுகள்  காவியத்திலிருந்து சிறு  பகுதி

The nightingale does not make his nest in a cage 
lest slavery be the lot of its chicks 
ஒரு பாடும் பறவை ஒரு கூண்டுக்குள்ளே 
தன் கூடமைக்காது
ஏனென்றால் தன் குஞ்சுகள் அடிமையாவதை
அது ஓரு நாளும் விரும்பாது

செல்மாவோ துயரத்தின் கைதி
அவளின் வாழ்க்கையைப் பங்கிட்டுக்கொள்ள
இன்னொரு துயரத்தின் கைதியை
இறைவன் அவளுக்கு அளிக்க விரும்பவில்லை போலும்

மண்ணின் மீது மலரும் மலர்களெல்லாம்
சூரியனின் குழந்தைகள் 
இயற்கையின் நேசங்கள்
மனிதரின் குழந்தைகளோ
அன்பின் மலர்கள்
கருணையின் சிசுக்கள்

அன்பும் கருணையும் ராஸ்பெய்ருத்தில்
செல்மாவின் அழகிய வீட்டை சென்றடையவேயில்லை

அவளோ ஒவ்வொரு நாளும் 
கடவுளின் முன் முழந்தாளிட்டு  
தன் வாழ்க்கையில் அன்பும் அரவணைப்பும் ததும்ப
ஒரு குழந்தை வரம் வேண்டினாள்
ஆனால் அது இறைவனின் காதில் விழவேயில்லை
ஆனால் அவள் அது இறைவனின் காதில் விழும் வரை
அவள் தன் பிரார்த்தனையை நிறுத்தவேயில்லை

கடைசியில் அவளின் வேண்டுதலை
கடவுளே செவிமடுத்துவிட்டார் போல
ஆம் இருட்குகையில் நின்ற மரம்
ஒரு குலை தள்ளியது
கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த பாடும் பறவை
தன் சிறகிலிருந்த இறகுகளால்
ஒரு மென்மையான கூடு கட்ட ஆரம்பித்து விட்டது.

சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 
தன் இருகரங்களையும் இறைவனை நோக்கி விரித்து
ஒரு ஒப்பற்ற ஒரு பரிசை 
கடைசியில் 
அவனிடமிருந்து பெற்றுவிட்டாள் செல்மா

ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பது போல்
உயர்ந்த மகிழ்ச்சி இந்த உலகத்தில்
அவளுக்கு வேறெதுவும் கிடையாது.

பரபரப்பாகவும் அதே நேரம் பொறுமையாகவும்
அவள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்
சொர்க்கத்தின் இனிய கீதத்தை கேட்பதற்காக
ஆம் குழந்தையில் குரல் தன் காதில் ஒலிக்கும்
ஒரு நாளுக்காக
ஆம் அவள் கண்ணீரின் ஊடாக 
ஒரு பிரகாசமான விடியலை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்

அது நிசான் மலர்கள் மலரும் காலம்
பிரசவ வலி கண்ட செல்மா படுக்கையில்
கிடத்தப்பட்டிருந்தாள்
அங்கே வாழ்க்கையும் மரணமும் 
மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தன
மருத்துவரும் செவிலியரும்
இந்த உலகத்திற்கு வருகை தரப்போகும்
ஒரு புதிய விருந்தாளியை அறிவிக்க
ஆவலோடு காத்திருந்தனர்

நள்ளிரவுக்குப் பின்பு
செல்மா தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தாள்
வாழ்க்கையிலிருந்து வாழ்க்கைபிரியும் ஒரு கதறல் அது
வெறுமையிலிருந்து ஒரு தொடர்ச்சி பிரியும்
ஒரு உன்னத கதறல் அது
பலவீனமான ஒரு சக்தி 
நிசப்தமான  மகா சக்திக்கு முன்பு
இறைஞ்சும் ஒரு கதறல் அது

அவநம்பிக்கை என்னும் தரையில் 
மரணத்தின் காலடியில் கீழ் கிடக்கும்
செல்மாவின் பலவீனமான கதறல் அது

விடியலில் செல்மா 
ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்
அவள் தன் கண்களைத் திறந்து பார்த்தபோது
அந்த அறை முழுவதும் சிரித்த முகங்களையே
கண்டாள்
அதே நேரம் தன் படுக்கைக்கு அருகில்
வாழ்க்கையும் மரணமும்
இன்னும் மல்யுத்தம் செய்து கொண்டிருப்பதையும்
அவள் அங்கே கண்டாள்
உடனே தன் கண்களை மூடிக்கொண்டு 
முதன் முறையாக கத்தினாள்
‘’ என் மகனே ‘’
செவிலி பட்டுத்துணியில் சுற்றியருந்த
பச்சிளம் சிசுவை அவளருகே கிடத்தினாள்
ஆனால் அங்கே செல்மாவை
கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த மருத்துவர்
அவநம்பிக்கையுடன் தலையை 
இப்படியும் அப்படியுமாக அசைத்தார்.

அங்கே கேட்ட ஆனந்தக்கூச்சல் 
அண்டைவீட்டுக்காரர்களை எல்லாம்
எழுப்பி விட்டது.
ஒரு புதிய வாரிசு பிறந்ததையொட்டி
அந்த தந்தைக்கு வாழ்த்துச்சொல்ல
அவர்கள் அனைவரும் அங்கே குவிந்தனர்.

ஆனால் மருத்துவரோ அதிதீவிரத்துடன்
செல்மாவையும்அவள்குழந்தையையும்
கூர்ந்து நோக்கியவண்ணமேயிருந்தார்.
அவநம்பிக்கையுடன் தலையை 
அப்படியும் இப்படியுமாக அசைத்தார்
வேலையாட்கள் பாதிரியிடம்
இந்த இனியை செய்தியை சொல்ல
விரைந்தனர்

ஆனால் மருத்துவர் செல்மாவையும்
அவள்குழந்தையையும்
உற்றுப்பார்த்தவண்ணமேயிருந்தார்
அவர் முகத்தில்  ஏராளமான ஏமாற்றம் 
நிரம்பியிருந்தது.

சூரியன் உதயமானது
செல்மா தன் குழந்தையை எடுத்து
மார்புக்கு கொடுத்தாள்
அவன் முதன் முதலாக 
தன் கண்களைத்திறந்து
தன் அன்னையைப் பார்த்தான்
பிறகு அவன் உடலில் ஒரு நடுக்கம் ஓடிற்று
அவ்வளவு தான் அவன் கடைசியாக
தன் கண்களை மூடியே விட்டான்

மருத்துவர் செல்மாவின் தோளிலிருந்து
அவளது மகனைப் பிரித்து எடுத்தார்
அவரது கன்னங்களில் கண்ணீர் துளிகள்
விழுந்து கொண்டிருந்தன
பிறகு அவர் தனக்குள்ளேயே முனு முனுத்தார்
‘’ இவன் ஒரு பிரிந்து  செல்லும் விருந்தாளி ‘’

குழந்தை இறந்து விட்டது
அண்டை வீட்டார்  அந்தப் பெரிய அறையில்
தந்தையுடன் சேர்ந்து 
கையில் மதுப்புட்டிகளோடு
குழந்தையின் நலத்திற்கான 
கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

செல்மா மருத்துவரைப்பார்த்து இறைஞ்சினாள்
‘’ என் குழந்தையை என்னிடம் தாருங்கள்
நான் அவனை தழுவிக்கொள்ள வேண்டும் ‘’

குழந்தை இறந்து விட்டது
ஆனால் அந்தப் பெரிய அறையில் 
மதுக்கோப்பையின் இரைச்சல் மட்டும்
அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

குழந்தை..
அவன் கருக்கலில்  பிறந்தான்
ஆனால் சூரிய உதயத்திலேயே இறந்து விட்டான்
ஒரு எண்ணத்தைப்போல பிறந்து
ஒரு பெருமூச்சைப்போல இறந்து
ஒரு நிழலைப்போல காணாமலேயே 
போய்விட்டான்.

தன் அன்னையை அரவணைக்கவும் 
ஆறுதல் படுத்தவும்
அவன் விரும்பவில்லை போலும்

இரவின் கண்கள் சொரிந்த பனித்துளி
உஷ்ணத்தின் ஒரு தொடுதலில்
உலர்ந்து போவது போல
அவனது வாழ்க்கை இரவின் முடிவில் ஆரம்பித்து
பகலின் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது.

ஒரு அலை கரைக்கு கொண்டு வந்த சேர்த்த முத்தை
இன்னொரு பேரலை கடலுக்குள்ளேயே 
கொண்டு போய்விட்டது போல
வாழ்க்கை மொட்டிலிருந்து 
சற்று முன்னரே மலர்ந்த
ஒரு அல்லி மலர்
மரணத்தின் காலடியில் சிதைக்கப்பட்டது போல
அவன் வாழ்க்கை முடிந்துவிட்டது.

அந்த உயிரனைய விருந்தினனின் வருகை
செல்மாவின் இதயத்தில் 
உள்ளொளி பாய்ச்சியது
இப்போது அவனது பிரிவோ 
அவளது ஆன்மாவையே கொன்று விட்டது.

இது தான் இந்த மனிதர்களின் வாழ்க்கை
இது தான் இந்த தேசங்களின் வாழ்க்கை
இது தான் சூரியர்களின் சந்திரர்களின்
இது தான் நட்சத்திரங்களின் வாழ்க்கை.
எல்லாவற்றின் வாழ்க்கையும் இதுதான்

செல்மா மருத்துவரின் மீது 
பார்வையை பதித்து
** என் குழந்தையை என்னிடம் கொடுங்கள்
நான் அவனை அணைத்துக்கொள்ள வேண்டும்
நான் அவனுக்கு பாலூட்ட வேண்டும் ‘’
என்று கெஞ்சினாள்

மருத்துவர் தலை கவிழ்ந்தார்
அவரது குரல் உடைந்து தழுதழுத்தது
** உன் குழந்தை இறந்து விட்டது அம்மா
அமைதியாக இரு என்றார்’’

அந்த வார்த்தையை கேட்ட நொடி
செல்மா உயிர்பிரியும் கதறலை வெளியேற்றினாள்
அவ்வளவு தான்
சிறிது நேரம் அமைதியானாள்
ஆனந்தமாக  ஒரு புன்னகை பூத்தாள்
ஏதோ ஒரு மகத்தானஉண்மையை கண்டடைந்தது போல
அவள் முகம் சட்டென்று பிரகாசமடைந்தது.

பிறகு அமைதியாக சொன்னாள்
‘’ என் குழந்தையை என்னிடம் கொண்டு வாருங்கள்
அவன் இறந்து போனதை நான் பார்க்க வேண்டும்’’

மருத்துவர் இறந்த அந்த சிசுவை எடுத்து வந்து
அவளின் தோளின் மீது கிடத்தினார்.
அவள் தன் குழந்தையை வாரியணைத்தாள்
சற்றே முகம் உயர்த்தி சுவரைப் பார்த்தாள்.
பிறகு தன் இறந்த குழந்தையிடம்
 பேச ஆரம்பித்து விட்டாள்.

‘’ நீ இங்கே வந்ததே 
என்னை எடுத்துச்செல்லத்தானே 
என் மகனே 

கரைக்கு செல்வதற்கு வழிகாட்டவே
நீ இங்கு வந்துதித்தாய் மகனே
நான் தயராக இருக்கிறேன் 
வா மகனே வழிகாட்டு
நாம் இருவரும் இந்த இருட்குகையைவிட்டு
புறப்படலாம்’’

அடுத்து ஒரே நிமிடம்
அந்த அறையின் சன்னல் திரையை
சூரியன் ஊடுருவி
அங்கே படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த
இரண்டு உயிரற்ற உடல்களின் மீதும் விழுந்தது
.
அந்த இடத்தை கனத்த மௌனம்
காவல் காத்துக்கொண்டிருந்தது
மரணச்சிறகுகளின் நிழல் அங்கே
அசைந்த வண்ணமேயிருந்ததது.

கண்களில் கண்ணீரோடு மருத்துவர்
அந்த அறையை விட்டு வெளியேறி
கீழே உள்ள பெரிய வரவேற்பறைக்கு
போய் சேர்ந்த போது
கொண்டாட்டங்கள் துக்கமாக
மாற்றம் கொண்டிருந்தன.

ஆனால் மரியாதைக்குரிய பே காலிப் 
ஒரு வார்த்தை பேசவில்லை
ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை
வலது கையில் பிடித்திருந்த மதுக்கோப்பையுடன்
ஆடாமல் அசையாமல் 
ஒரு சிலைபோலவே நின்றிருந்தான்.

    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இரண்டாவது நாள் 
செல்மா தனது வெள்ளைத்திருமண உடையினால்
போர்த்தப்பட்டு
சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தாள்

பிறந்த போது சுற்றிப் போர்த்தப்பட்டிருந்த
அந்த வெள்ளைப் பட்டுடையே
குழந்தையின் இறுதி உடை 

அவனுடைய சவப்பெட்டி
அவனது அன்னையின் தோள்களே

அவனது கல்லறை
அன்னையின் துடிப்பற்ற மார்பே

இரண்டு உயிரற்ற உடல்களும்
ஒரே சவப்பெட்டியில் வைத்து 
எடுத்துச்செல்லபட்டன

இறுதி ஓய்வெடுக்கும் இடத்திற்கு 
செல்மா மற்றும் அவளது குழந்தையின்
இறுதி யாத்திரை 

மரியாதையுடன் பின் செல்லும் கூட்டத்தில் 
ஒருவனாக நானும் பின் செல்கிறேன்

இடுகாட்டிற்கு வந்தாயிற்று 
பாதிரி காலிப் மந்திரங்களை ஜெபிக்க 
ஆரம்பித்து விட்டார்
மற்ற பாதிரிகளோ பிரார்த்தனைகளை 
தொடங்கிவிட்டார்கள்
அவர்களின் இருளடைந்த முகங்களில் 
அறியாமையும்  வெறுமையுமே மண்டிக்கிடந்தன

சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்ட போது
அங்கே நின்றிருந்த ஒருவன் சொன்னான்
இரண்டு உடல்களை ஒரே சவப்பெட்டிக்குள் 
இறக்குவதைப் பார்ப்பது
இதுவே என் வாழ்வின் முதல் முறை.

அடுத்தவன் சொன்னான் 
இரக்கமற்ற கணவனின் கொடுமையிலிருந்து
தன் தாயைக் காப்பாற்றி செல்லவே
அந்தக் குழந்தை இங்கே அவதரித்திருக்கிறது
மூன்றாமவன் சொன்னான்
பே காலிப்பை பாருங்கள் 
இங்கே எதுவுமே நடவாதது போல
வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான்
அவன் கண்கள் என்ன 
கண்ணாடியால் செய்யப்பட்டவையா?

நான்காமவன் சொன்னான்
அவனுக்கென்ன 
அவனுடைய பாதிரி மாமா
நாளையே அவனுக்கு வசதியான வளமான
ஒரு பெண்ணைப்பார்த்து 
மணமுடித்து வைத்துவிடுவான்

வெட்டியான் குழியை மண்வெட்டியால்
மூடி முடிக்கும் வரையிலும்
பெரிய பாதிரியும் மற்ற பாதிரிகளும்
மந்திரங்களை உச்சரித்துக்கொண்டும்
பிரார்த்தனைப்பாடல்களை பாடிக்கொண்டுமேயிருந்தனர்.

புதை குழி முற்றிலும் மண்ணால் மூடப்பட்ட பிறகு
ஒவ்வொருவராக பாதிரியிடமும்
மருமகனிடமும் சென்று
மரியாதையை செலுத்திவிட்டு
தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை
தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்
தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நானோ  
செல்மாவும் அவள் குழந்தையும் 
எனக்கு ஏதுமற்றவர்கள் போல..
ஆறுதல் சொல்லவும்
ஒரு நாதியற்று தன்னந்தனிமையில்
நின்று கொண்டிருந்தேன்  அவ்விடத்தில்

இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்களெல்லாம்
ஒவ்வொருவராக இடுகாட்டை விட்டு 
கலைந்து சென்றுவிட்டார்கள்

கையில் மண்வெட்டியுடன் வெட்டியான் மட்டும
அந்தப் புதிய கல்லறையின் அருகில் 
நின்று கொண்டிருந்தான்

நான் அவனை அனுகி
‘’ பெரியவர் பாரிஸ் எபாண்டி கராமியை
எங்கே புதைத்தாய் என்று உனக்கு 
ஞாபகமிருக்கிறதா ? என்று கேட்டேன்

அவன் என்னை ஒரு கணம் 
உற்றுப் பார்த்துவிட்டு
செல்மாவின் கல்லறையை காட்டி
இங்கே தான் இதே கல்லறையில் தான்
அவரைப் புதைத்தேன்

இப்போது அவர் மகளையும் அவர் மீது
வைத்துவிட்டேன்
மகளின்  பச்சிளம் சிசுவையும் 
அவளின் மார்பின் மீதே வைத்துவிட்டேன்
அனைவரையும் இதே குழிக்குள் வைத்தபின்பு
இதோ இந்த மண்வெட்டியால்
தோண்டியெடுக்கப்பட்ட அதே மண்ணாலேயே
அவர்களின் புதைகுழியை மூடியும் விட்டேன்

நான் அவனிடம்  சொன்னேன்
‘ நீ இதே குழிக்குள் என் இதயத்தையும்
சேர்த்தே புதைத்து விட்டாய்  ‘’ 

 
வெட்டியான் பாப்ளார் மரங்களுக்குப்பின்னால்
மறைந்த நொடியில்

அடக்க முடியாத அதீத வேதனையோடு
நான் செல்மாவின் கல்லறையில் விழுந்து
கதறி அழுதேன் ..

- மூலம் கலில் ஜிப்ரான் 
மொழி பெயர்ப்பு  தங்கேஸ்.