தமிழர்களின் கட்டிடக்கலைகள்...! 06

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் கட்டிடக்கலைகள்...! 06

தமிழனின் பெருமைமிகு கட்டிட கலைகள்

     "தமிழன் என்றோர் இனமுண்டு 
      தனியே அவற்கொரு குணமுண்டு"
 ' என்று தமிழரை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர். வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு.  
      
தமிழரின் கட்டிடகலை:
        தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டட வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர் கட்டிடக்கலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டிடக்கலை நுட்பத்தில் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டிடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம். 

ஆரம்ப கால கட்டுமான பொருட்கள்:
        சுமார் 6 நூற்றாண்டுக்கு முன்னர் சுடு மண், மரம், சுதை, மூங்கில், வைக்கோல், புல் மற்றும் செங்கல் ஆகியவை கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளும், மன்னர் மாளிகைகளும், வணிக நிறுவனங்களும், பொது இடங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இன்று பல இடங்களில் உள்ளன. கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டிற்கு பின்னர் கட்டுமான பணிகளில் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு கட்டிடங்கள் உருவாயின. 
கட்டமைப்பு முறைகள்

       வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைப்ப தில் 
‘பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து..’ 
      என்ற சங்க பாடலுக்கேற்ப மக்களின் தேவைகள் மற்றும் வசதி ஆகியவற்றை அனுசரித்து கட்டிடங்களை மக்கள் அமைத்துக்கொண்டனர்.  தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (கோபுரம்) ஆகும்.

       தாங்குதளம் என்பது விதிகளின்படி அமைக்கப்படுகின்ற மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும்.  சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். 
கோபுரம் என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு ஆகும். இவை அவற்றின்  நீள, அகலங்களைக் காட்டிலும் பல மடங்கு உயரமாக இருக்கும். கோபுரங்கள் பொதுவாக அவற்றின் உயரத்திலிருந்து பயன் பெறுவதற்காகவே கட்டப்பட்டன. 

பாறைகளில் கட்டிடகலை:
       தமிழக கட்டிடக்கலையில் பல்லவர்கள் காலம் புதிய பார்வையை உண்டாக்கியது. அவர்களது கட்டிடக்கலை அமைப்புகள் குடைவரை, கற்றளி மற்றும் கட்டுமான கோவில் என்று மூன்று விதங்களில் அமைந்தன.

குடைவரைக் கோயில்கள்:
    பெரிய மலைகளை  குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் “குடைவரைக் கோயில்கள்” என அழைக்கப்படுகின்றன. நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள். நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள். குறிப்பிட்ட பாறையின் ஓரிடத்தில் தொடங்கி கட்டுமான வடிவமைப்புக்கு ஏற்ப பாறையை சரியாக செதுக்கிச்செல்ல வேண்டும். அந்த நிலையில் பாறையில் விரிசல்கள் உருவானால் பணி கைவிடப்படும் என்ற நிலையில் தக்க ஒலியியல் சோதனைகள் செய்து கற்களின் உறுதி கண்டறியப்பட்டது.

கற்றளி:
       தமிழர் கட்டிடக்கலையில் கற்றளி என்பது நிலத்திலிருந்து துருத்தி கொண்டிருக்கும் பாறை அல்லது குன்று பகுதியை வெளிப்புறமாக மேலிருந்து கீழாக குடைந்து அமைக்கப்படும் கோயில் அமைப்புகள் ஆகும். பின்னர், ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கற்கள் கொண்டு கட்டுமான கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது மாமல்லபுர கடற்கரை கோவில் ஆகும். யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 45 அடி உயரத்தில் கட்டுமான கோவில்களுக்கும், தமிழர் கட்டுமான நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் அது போன்ற கோவில்கள் உள்ளன. 

இலக்கியத்தில் தமிழர் கட்டிடக்கலை:
 வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: "பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள் கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலாமுற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டன. 

தொழில் நுட்ப அம்சங்கள்:
      இக்காலக் கட்டடக் கலை வல்லுநரும் வியக்கும் சில பொறியியல் துணுக்கங்கள் பழந்தமிழர் கட்டடக் கலையில் அமைந்திருந்ததைக் காண்கிறோம். பலவகை அழகிய தோற்றமுடைய பலகணிகளைப் (ஜன்னல்) பழந்தமிழர் கட்டியிருப்பதை அறிய முடிகிறது.

         பின்னர், சோழர்கள் காலத்தில் தமிழர் கட்டிட கலை வளர்ச்சி பெற்று, பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன.  கருங்கற்களை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கோயில்களை சோழர்கள் அமைத்தனர். அவர்கள் பல்வேறு பொது கட்டமைப்புகளையும் வடிவமைத்து கட்டிடக்கலையை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.  

தஞ்சை பெரிய கோயில்:
     இராசராசன் கட்டிய தஞ்சைக் கோபுரத்தின் உயரம் 216 அடி. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை இராசராசன் எழுப்பினார். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். இவ்வாறு கட்டிட கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்பது நம் அடையாளமாகவே திகழ்கிறது.

-கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.