மகாத்மாவே மறுபடியும் பிறந்து வா...

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மாவே மறுபடியும் பிறந்து வா...

மகாத்மாவே... 
மறுபடியும் பிறந்து வா...

அகிம்சை எனும் ஆயுதமேந்தி
இனியதொரு சுதந்திரத்தை 
பெற்று தந்த மகானே...
மனிதனாய் பிறந்த மகாத்மாவே
மானுடம் தழைத்திட
மறுபடியும் பிறந்து வா...

தள்ளாத வயதானாலும்
உலகை ஈர்த்த கவர்ச்சி உனது
பொக்கைவாய் என்றாலும்
பூக்கள் தோற்கும் புன்னகை உனது... 
அகிம்சையின் ஹிட்லராய் நீ வீறுக்கொண்டு நின்றதால்தான்
பயந்து ஓடினான் பரங்கியன்.. 
அரையாடையை  நீ
உடுத்திக் கொண்டதால்தான்
பாரத மாதாவால் ஆறுமுழ சேலையை
உடுத்திக்கொள்ள முடிந்தது.. 

நீ சுற்றிய ராட்டைதான்
சாட்டையாய் தாக்கியது அந்நியனை
நீ கைக்கொண்ட வெறும் கோல்தான்
கொடுங்கோலை வீழ்த்தி செங்கோலை நிலைநிறுத்தியது.. 

அறவழி போரை அறிமுகம் செய்தே
ஒற்றை தோட்டாவில் உயிர்தனை இழந்தாய்
தன்னுயிர் நீத்தும் மண்ணுயிர் காத்தாய்
வெள்ளைத்தாளில் வெகுளியாய் சிரித்தாய்
திறன்மிகு தலைவர்களை உருவாக்கி
வெள்ளையர்களைத் திணறடித்தாய்
அகிம்சையெனும் அகலக்குழிக்குள்
அந்நியரை அஸ்தமனம் செய்தாய்.. 

அரைநிர்வாண பக்கிரி என்று கேலியாகவும்
ஒன்மேன் ஆர்மி என்று கெத்தாகவும்
அழைக்கப்பட்டாய்.. 
நின் கைத்தடியோ என்றுமே பேசியதில்லை
மாறாக நின் மௌனமும் சத்தியமும் தான் வாய்மொழியாயிற்று உனக்கு... 

எல்லாக் குழந்தைகளையும் பேணிக் காத்திடும் தாய்போல்
இந்திய தேசத்தின் தந்தை என்றானாய்..
சத்தியத்தைத் தவிர வேறொன்றும் அறிந்திடாத உனக்கு
விருப்பம் எல்லாம் விடுதலை மீதுதானிருந்தது... 

ஆங்கிலையனின் அடிமைச்சங்கிலியை உடைத்தெறிந்து
சுதந்திரம் பெற்று தந்தாய்...
ஆயினும் என்ன பயன்?...
நாங்களோ சொந்த நாட்டிலேயே
அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம் ..
விடியும் முன்னே பெற்றதாலோ என்னவோ 
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம் விடியலை.. 

உனக்கு தெரியுமா?..
அகிம்சை வழி ஆகாதாகிவிட்டது அகிலத்தில் ...
ஆம்.. கத்தியெடுக்கும்
வன்முறை கலாச்சாரம் பெருகிவிட்டது காசினியில்.. 

சட்டமும் செங்கோலும் நாணலென 
வளைகிறதிங்கே அனுதினமும்.. 
மதுக்கடைகள் திறக்கப்படும் போதெல்லாம்
நின் மார்பினை மீண்டும் மீண்டும் தோட்டாக்கள் துளைப்பதை உணர்கிறாயா நீ.. 

உலகம் அறிந்த வழக்கறிஞரே
நீர் போனபின்பு எங்களுக்கென்று வாதாட
இங்கு யாருமே இல்லை என்பதறிவாயா?.. 
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
என்றுரைத்தாயே
கிராமங்கள் வாழ்வதேயில்லை என்ற உண்மை 
உனக்கு தெரியுமா? .. 

மகாத்மாவே... 
இப்போதும் நீ மக்கள் மனதினில்
வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறாய்
எப்போதென்று தெரியுமா
அரசு விடுமுறை பட்டியலில் மட்டுமே...
அனுதினமும் அனைவரின் கைகளிலும்
புழக்கத்தில் இருக்கிறாய்...
ஆயினும்...
ஆண்டிபோல் வாழ்ந்ததாலோ என்னவோ
ஆண்டிற்கு ஓர்முறை மட்டுமே
நினைக்கப்படுகிறாய்... 

அகிம்சையை அழித்து
தீவிரவாதத்தை கையிலெடுத்தோம்
அதில் சத்தியாகிரகமே செத்துமடிந்தது... 
ஆம்... உந்தன் கைத்தடிக்கு
இன்று வேலையில்லை
கைத்துப்பாக்கி மட்டுமே போதுமானது... 
பண்டிகை நாட்களில் மட்டுமே
காந்தியும் கதரும் நினைவிற்கு வருகிறதிங்கே
மேடைதனில் மட்டுமே பேசப்படும்
பேசும் பொருளாகிவிட்டது காந்தியம்.. 

நன்முறை சொன்னதாலோ என்னவோ
வன்முறைக்கு பலியானீர்
அதுதான் வேதனை.. 
தோட்டாக்கள் உன்னை முத்தமிட்டதே
அதற்கும் அகிம்சை பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை
காக்கை குருவியோடு சேர்த்து 
காந்தியையும் சுட்டோம்
சாதிமத பேதமென காயம் பல பட்டோம்
காந்தி பிறந்த மண்ணில் காந்தியத்தையும் விட்டோம்.. 

இந்தியா மீண்டும் சுதந்திரம் பெற வேண்டும்...
அகிம்சை எனும் ஆயுதமேந்தி
இனியதொரு சுதந்திரத்தை 
பெற்று தந்த மகானே...
மனிதனாய் பிறந்த மகாத்மாவே
மானுடம் தழைத்திட
மறுபடியும் பிறந்து வா...

கவிஞர். சசிகலா திருமால்
கும்பகோணம்.