அன்பின் மொழிகள்.. 029

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

அன்பின் மொழிகள்.. 029

அன்பின் மொழிகள்

அன்பான மனதில் கனிவும் இரக்கமும்

பொங்கி வழியும்!

பிறரின் சுமையும் தன் சுமையாய்ச்

சுமக்கத் தோன்றும்!

துன்புறும் மனிதனின் துயரைத் துடைக்கக்

கைகள் தானாக முன்வரும்!

அன்பின் இதயமாய்க் கொட்டிக் கொடுக்கும்

ஆவல் பிறக்கும்!

பரிசுத்த அன்பே! இதுவென

 இனம் காண வைக்கும்!

புரிந்திடும் பாசம் இல்லையென்றாலும்

விலகியே நின்று களிகூரும்!

துன்புறுத்தப்பட்டாலும் பொறுமையும் அமைதியும்

அன்பென மெய்பிக்கும்!

தேவையென வரும்போது தன்துயர் மறந்து

மழையென வாரி வழங்கிடும்!

இளைப்பாற இடம் தேடும் தருணத்தில்

நிழல் தரும் மரமாய் இதம் தரும்!

அன்பின் ஆழம் அகல் நீளம் காண

உயிரையும் தரும் தோழனாகும்!

ஒரு இதயம் இன்னொரு இதயதத்தை

உணரும் போது உலகமே தனக்குள் அடங்கிவிடும்!

தியாகத்தின் ஊற்றாகப் பிறப்பெடுக்கும் அன்பு பயணத்தில்

அன்பில் அழுக்கில்லை! கறையில்லை!

என்றுணர்வோம்!

அன்பில் ஆனந்தமான அமைதியே மேலோங்கும்

என்றறிவோம்!

அன்பின் மொழியால் இருளடைந்த

மனங்களுக்குள் நம்பிக்கை தீபம் ஏற்றுவோம்.

 

-முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா,

ஜெ.அ. மகளிர் தன்னாட்சிக் கல்லூரி,

பெரியகுளம், தேனி – 625601, தமிழ்நாடு, இந்தியா.