மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள்

மகிழ்ச்சி தின கவிதைகள்

மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள்

மார்ச் 20- உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு
மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025

கவிதைப் போட்டிக்கான கவிதைகள்

001.மகிழ்வித்து மகிழுங்கள்!

உதவும் உள்ளம் நம்மிடம்தான் உள்ளது!

இதைத்தான் என்று நாம் முடிவு செய்யாமல்

எதையும் எந்த நேரத்திலும் உதவிடலாம்!

மனம் இருந்தால் வழி தெரியும்!

வழி தெரிந்தால் இரக்கம் பிறக்கும்!

யாரென்று பார்க்காதீர்கள் நேரத்தை யோசிக்காதீர்கள்!

இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்!

மகிழ்வித்து மகிழ இதை விட வேறென்ன வேண்டும்?!

முத்து ஆனந்த் வேலூர்.

மகிழ்வித்து மகிழுங்கள்!

செல்வத்தில் குறை இருக்கலாம்

நம் செல்வாக்கில் குறையிருத்தல் கூடாது!

பணம் ஒன்றிற்கு மட்டு(ம்)மே

மதிப்பும் மகிழ்வும் இருக்கிறதென்ற

எண்ணமே இங்கே மேலோங்கியிருக்கிறது!

ஆனாலும் உண்மையென்னவவெனில்

மகிழ்வித்து மகிழ்தலில்தான்

வாழ்க்கையே அடங்கியிருக்கிறது

கற்களிலும் கோயில் கருவறைகளிலும்

மட்டுமில்லை

மற்றவரை மகிழ்வித்து மகிழும்

அருளான நற்குணத்திலும்

தெய்வங்களிருக்கிறது!

முத்து ஆனந்த் வேலூர்

002.மகிழ்வித்து மகிழுங்கள்...

மகிழ்வித்து மகிழுங்கள்,மனதார வாழுங்கள்.

நேசம் கொண்டு பேசுங்கள்,நம்பிக்கையை வளருங்கள்.

உதவியென்று எதிர்பாராது,உதவிகள் செய்து மகிழுங்கள்.

சிரிப்பை பூத்திடும் வண்ணம்,சேர்ந்து நலம் பேசுங்கள்.

பெருமிதம் விடுங்கள்,பெருவாழ்வு பெறுங்கள்.

எளிமையில் உயருங்கள், எல்லோரையும் நேசுங்கள்.

மனமுவந்து மகிழ்வித்து, மனதார மகிழுங்கள்.

நல்லதை எண்ணி வாழ்ந்து, நலமுடன் நீடிக்க வாழுங்கள்.

-சி. ராஜேஸ்வரி மதுராந்தகம்.

003.மகிழ்வித்து மகிழுங்கள்...

அன்பென்ற மழையால் மகிழ்வித்து மகிழ்ந்திடு

பசித்திருக்கும் மனிதருக்கு உணவளித்து மகிழ்ந்திடு

திருநங்கைகளை சகோதரியாக மதித்து மகிழ்ந்திடு

வாய்மையோடு வாழ்ந்து வாழ்வில் மகிழ்ந்திடு

இறைவனருளிய இயற்கைதனை மாசாக்காமல் மகிழ்ந்திடு

சான்றோர்களின் பாதையினை வணங்கி மகிழ்ந்திடு

கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் மழலைதனில் மகிழ்ந்திடு

கடமையிலிருந்து ஒருபோதும் தவறாமல் மகிழ்ந்திடு

குடிக்கும் நீரினை சேமித்து மகிழ்ந்திடு

பெண்களை தெய்வமாக மதித்து மகிழ்ந்திடு

நோய்தனை விரட்ட மகிழ்வித்து மகிழ்ந்திடு

பெற்றோர்களுக்கு இறுதிவரை துணையிருந்து மகிழ்ந்திடு

செம்மொழி கவிதையோடு கவலையின்றி மகிழ்ந்திட

அறவழியில் வாழ்ந்து அனைத்திலும் மகிழ்ந்திடு

ஐந்தறிவு நண்பர்களுடன் ஐயென மகிழ்ந்திடு

மகிழ்ச்சி எஃப் எம் கேட்டு மகிழ்வித்து மகிழ்ந்திடுவாயே. . .

இசைப்பேரரசி

முனைவர் லதா சங்கரன்,இசைத்துறை தலைமையாளர்

யுனிவர்சல் எஜுகேஷன் பல்கலைக்கழகம்,சென்னை.

004.மகிழ்வித்து மகிழுங்கள்

உலகை மகிழ்வித்து மகிழ்

மனிதனை ஒருமித்து மகிழ்

எளியமக்களோடும் கைசேர்த்து மகிழ்

போராட்டம் செய்வதென்றால்

உலகம் ஒரு கோளாய் அறிய போராடு,

அதுவே இறுதியான போராட்டமாய்

வரலாற்றில் பதியட்டும்…!

மொழிகளை கொண்ட நாடுகள்

அறியப்பட வேண்டாம்

மொழிகள் வெவ்வேறு ஓசைகள்

எந்தமனிதன் எந்தமனிதனை

சந்தித்தாலும் மொழிகள் தடையாயில்லாமல்

புதிய ஓசை பிறக்கட்டும்,

அது உலகிற்கு ஒன்றாய் இருக்கட்டும்…!

பூமியை பிளந்தா எல்லைகள் செய்தாய்!

வெற்றுக் கோடுகளுக்கு இன்னும்

எத்தனை உயிர்களின் நினைவு தப்பும்.!

இனி துருவங்கள் மட்டும் அறியப்படும்

புத்தகம் செய்…

ஆயுதங்கள் துறக்கப்படுவதைவிட

சமாதானம் பறப்பதைவிட

ஒரு மகிழ்ச்சி இருந்துவிட போகிறதா…?

கோள்களுக்கு ஒரு கொடியை நட்டு

இனி அந்தநாளை கொண்டாடிக்கொள்ளலாம்

போதுமானதே போதும் என்பது

பூமியின் உறுதிமொழியானால்

இல்லாதவராய் யாரும்

இருக்கவேமாட்டார்கள் இதைவிட

மகிழ்வு இருந்துவிடபோகிறதா..?

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம்

தனித்தனியாய் என்பது அற்றுப்போக

ஒரே பழக்கவழக்கத்தின் கீழ்கொண்டுவந்து

பூமியை ஒற்றை சமுதாயமாய் நிலைநிறுத்து… பின்

மௌனமாய்கூட புரட்சிகள் தேவைப்படாது

எல்லோரும் எடுத்தாளும் உலகை

மகிழ்வித்து மகிழ்…!

- சிவசங்கரி ராஜா,

005.மகிழ்வித்து மகிழுங்கள்

பிறப்பின் போது மகிழ்ச்சி

பிறக்கும் குழந்தை அழுத போதிலும்

பிறப்பினை காணும் மற்றோருக்கு

அளவோடு ஆசை, அன்பு, பாசம்

வைப்பவர்களுக்கு ஆயுள் முழுவதும் மகிழ்ச்சி

போதுமென்ற மனம் கொண்டவருக்கு

அவர் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் மகிழ்ச்சி

ஆடம்பரமின்றி வாழ்வோரிடம் காண்போம் அளவற்ற மகிழ்ச்சி

விட்டு கொடுத்து வாழ்வோரிடம் என்றென்றும்

பிரியாது மகிழ்ச்சி ஒற்றுமையான உறவுகளை

காணும் போது அதனை காண்போருக்கு மகிழ்ச்சி

என்று வாழ்க்கையில் மகிழ்வித்து மகிழுங்கள்

கர்னத்தம் இராம. கலியமூர்த்தி,தாம்பரம்,சென்னை.

006.மகிழ்வித்து மகிழுங்கள்...

ஆறுதல் தரும் ஆனந்தம் தன்னை அனைவருக்கும் அளித்திடு!

தேறுதல் தரும் வார்த்தைகளால் செவிகள் நிரப்பிடு

மாறுதல் ஒன்றும் மாயமில்லை என்பதை தெரிந்திடு

கூறுதல் நல்ல வார்த்தைகள் எனும் பயிற்சி பெற்றிடு

முடியும் என நினைத்து நற் செயலில் இறங்கிடு

மனதார மகிழ்ந்திட்டால் மருத்துவமும் தேவையில்லை

உளமார உணர்ந்திட்டால் உயரம் ஒரு தூரமில்லை

கண்ணீர் துளி கன்னம் நனைக்க கவலையின்றி சிரித்திடு

மற்றவரை மகிழச்செய்து நீயும் மனதார மகிழ்ந்து விடு

இடியும் மழையும் இயல்பு என்பதை நீ உணர்ந்திடு

இன்முகம் காட்டுதல் என்பதை இயன்றவரை செய்திடு

புலனைந்தும் புத்துணர்வு பெறவே புன்னகை புரிந்திடு

இருக்கும் வரை இன்முகமும் இன்பமும் இனிதென நினைத்திடு

கள்ளம் கபடம் அறியா குழந்தையை போல் களித்திடு

எத்தனை துன்பமானாலும் எளிதாக எதிர் கொண்டு முடித்திடு

மகிழ்ச்சியால் மகிழ்ச்சியை மற்றவர்க்கும் மனதார பகிர்ந்திடு

வி பிரபாவதி,மடிப்பாக்கம்.

007.மகிழ்வித்து மகிழுங்கள்...

அன்னை தந்தையை ஆராதித்த போது

அளவில்லாத மகிழ்ச்சி

அகத்திலே குடிகொண்டது

ஆருயிர் குழந்தைகளைப் பேணியபோது

ஆனந்தம் என்முகவரி கேட்டுத் தேடி வந்தது

இயற்கையைப் போற்றிய போது

ஈடில்லா இன்பத்தை வாரி வழங்கியது

உயிர்கள் அனைத்தையும் நேசித்த போது

ஊக்கத்துடன் உவப்பும் சேர்ந்தது

எழில்மிகு தமிழுக்குத் தொண்டு செய்த போது

ஏந்தலாக்கி என்னைக் களிப்புறச் செய்தது

ஐயமின்றிச் சொல்லலாம்

ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து வாழ்வதே

ஓங்கு புகழ் தந்து

ஔடதமின்றி வாழ வைக்கும் என்று(ம்).

கவிஞர் கு.உமாராணி,தமிழாசிரியர் ,இராஜபாளையம்.

008.மகிழ்வித்து மகிழுங்கள்

மனபதைக் காக்கும் மா உளப் பேறதாம் மகிழ்ச்சி..!

மனமும்குணமும் மறுமுகம் கலைபெற மகிழ்ச்சியில் மைந்துறும்!

நிலவிலா வானமும் நீரிலா மேகமும்

மழவிலா மனையும் போல்

மகிழ்விலா மனமும் மதியிலா வீரமும்

உன்னும் மனதை உருகச்செய்யாது.

உளம் நன்னிப்பெருக தருகும் பண்பின் தயையால்

தளரும் மனமும் தாழா திருக்க

வளரும் தாழையினும் மலரும் மகிழினிதென

மழவின் மழலையாகி மனமும் குணமும் மலர்தல் வேண்டும்.

முன்பின் அறியாது முந்துறும் செயலதும்

மனதால் பழகி மறுமுகம் கற்றிட

மனமாரப் பகிர்ந்து மனம்மாறச் செய்யும்.

அன்புசால் தூனதால் ஆழ்மனத் துயரகலுமே!

பண்பெனப் பழகிடப் பார்மனம் தோற்குமே!

மகிழ்வித்து மகிழாயோமாண்புடை நெஞ்சமே!

- அ.அமுதவல்லி,பள்ளிகொண்டா.

009.மகிழ்வித்து மகிழுங்கள்

ஆறுதல் தரும் ஆனந்தம் தன்னை அனைவருக்கும் அளித்திடு!

தேறுதல் தரும் வார்த்தைகளால் செவிகள் நிரப்பிடு

மாறுதல் ஒன்றும் மாயமில்லை என்பதை தெரிந்திடு

கூறுதல் நல்ல வார்த்தைகள் எனும் பயிற்சி பெற்றிடு

முடியும் என நினைத்து நற் செயலில் இறங்கிடு

மனதார மகிழ்ந்திட்டால் மருத்துவமும் தேவையில்லை

உளமார உணர்ந்திட்டால் உயரம் ஒரு தூரமில்லை

கண்ணீர் துளி கன்னம் நனைக்க கவலையின்றி சிரித்திடு

மற்றவரை மகிழச்செய்து நீயும் மனதார மகிழ்ந்து விடு

இடியும் மழையும் இயல்பு என்பதை நீ உணர்ந்திடு

இன்முகம் காட்டுதல் என்பதை இயன்றவரை செய்திடு

புலனைந்தும் புத்துணர்வு பெறவே புன்னகை புரிந்திடு

இருக்கும் வரை இன்முகமும் இன்பமும் இனிதென நினைத்திடு

கள்ளம் கபடம் அறியா குழந்தையை போல் களித்திடு

எத்தனை துன்பமானாலும் எளிதாக எதிர் கொண்டு முடித்திடு

மகிழ்ச்சியால் மகிழ்ச்சியை மற்றவர்க்கும் மனதார பகிர்ந்திடு

வி பிரபாவதி ,மடிப்பாக்கம்.

மகிழ்வித்து மகிழ்ந்திடு...

மனம் நிறைந்ததா? முகிழ்நகை புரிந்திடு!

உன்னுள் மட்டும் வைக்காது உற்றாருக்கும் சொல்லிடு

உன் மகிழ்ச்சி உனக்கு மட்டுமல்ல

உனைச் சேர்ந்தோரும் உவகை கொள்ளட்டுமே!

கட்டத்தை மறந்து விடு கணமும் விடாது மகிழ்ச்சி கொள்

முடிந்தவரை சுற்றத்தை மூச்சுமுட்ட சிரிக்கச் செய்

முன்னோரும்மூத்தோரும் சொல்லித்தந்ததிது

உன் கவலை உனக்கு மட்டும் ஆனால் உன் களிப்பு ஊராருக்கும்

சொந்தமாக்கிடு

வாய்விட்டு சிரிக்கவை நோயைக் கொஞ்சம் குறையச் செய்

மகிழ்ச்சி ரெட்டிப்பாகும் மனமும் உடலும் லேசாகிடும்

மருத்துவரை அணுகாமல் மகிழ்வொன்றே மருந்தென கொள்!

மகிழ்வித்து மகிழ்ந்து விடு மனம் நிறைந்து வாழ்ந்து விடு

வி பிரபாவதி,மடிப்பாக்கம்.

010.மகிழ்வித்து மகிழுங்கள்...

கொடுக்க பணமில்லையா? புன்னகையைப் பரிசளி!

கொடுக்க பொருளில்லையா? குணத்தைக் கொடு!

மகிழ்ச்சியைப் பகிர்ந்து மகிழ்வித்து மகிழ்

கொடுக்கும் போதும் மகிழ்ச்சி நூறாகும்

பெறும் போதும் இன்பம் பயனாகும்

ஏழையின் சிரிப்பில் இன்பத்தை கண்டு

ஏங்கிடும் இதயத்திற்கு இயன்றதைக் கொடு!

இளைத்த வயிறு அன்னத்தைத் தேடும்

அன்னத்தைக் கொடுத்து தானத்தின் தலைவனாகு!

அனாதைப் பிணங்களை அடக்கம் செய்திடு

ஆத்மாவை சுத்தப்படுத்தி கர்மாவை வென்றிடு!

அடியாரின் தொண்டு மிடிமையை நீக்கும்

ஆற்றுதல் படுத்தி ஆறுதல் படுத்து

தேவைகள் அறிந்து தேறிட உதவு!

மருந்தாயினும் விருந்தாயினும் உவந்தே வழங்கிடு!

கொடுத்த கரங்கள் புகழினைச் சூடும்!

- கவிஞர் க.அருண்,ஒதியத்தூர்,விழுப்புரம் மாவட்டம் .

011.மகிழ்வித்து மகிழுங்கள்

பசும் பூக்கள் நிறைந்த காஞ்சிர மரங்கள்!

மூங்கில்கள் உரசும் வேய்ங்குழலோசை!

பொன்னாய் மிளிரும் மஞ்சள் கொன்றை பூக்கள் !

பசுங்கொடிகள் படர்ந்த குளிர் சந்தனமரங்கள்!

ரீங்காரங்கள் சிறகசைவுகள் எம் சின்னஞ்சிறு காடு.....

புளியம் பிஞ்சுகளும்காட்டுநெல்லிக்காய்களும்அளித்த

புளிப்பான இனிமை

பனிபடர்ந்த காலைகளில் அம்மா தந்த கடுந்தேநீர்

குளிரடந்த மோன இரவுகளில்," சமரசம் உலாவும் இடமே"

எனக்கம்பீரமாய் ஒலிக்கும்அப்பாவின் பாடல்கள்.....

உயர்ந்த தைல மரங்களும்

போகன்வில்லா மலர்களும் நிறைந்த எம் காட்டுப்பள்ளி

அத்தனை உற்சாகமான ஆசிரியர்கள் சிநேகிதர்கள்

கானாங்கோழிகள் நீந்தும் ஆம்பல் பூக்கள் படர்ந்த ஏரி

அங்கே ஆடித்திரிந்த மாசற்ற எங்கள் இளமை

அன்று கண்ட மகிழ்வே எம் வாழ்வின் அடிநாதம்...

புவியில் மீண்டும் பெற இயலா பொற்காலங்களே எம் மகிழ்ச்சி

-மோனிகா மாறன் ,வேலூர்.

012.மகிழ்வித்து மகிழுங்கள்...

மகிழ்வுடன் வாழ்வதே இனிமை,

மறந்திடலாம் துன்பங்கள் அனைத்தும்.

மகிழ்ச்சி மட்டும் மனதில் மலர,

மலர்ந்திடுவோம் நம்மாழ்வாயம்!

சிரிப்புடன் பேசுங்கள் சந்தோஷம் பெருக,

செல்லமொழி கொடுங்கள் அனைவருக்கும்.

காதல் கனிந்து வார்த்தை ஒலிக்க,

கரைந்திடட்டும் மன வித்தியாசம்!

உதவினால் உறவுகள் பெருகிவரும்,

உண்மை நட்பே என்றும் நிலைத்திருக்கும்.

நாள்தோறும் நல்லதே செய்து,

நம்மைத் தொடரும் நல் பேராசை!

பாசமுடன் இருப்பதே சிறப்பாகும்,

பிரிவுகள் முற்றிலும் தவிர்ப்போம்.

இணைந்திடுவோம் உறவினருடன்,

இளமை தேகும் நம் இதயத்தில்!

நல்லதை செய்வதே மகிழ்ச்சி தரும்,

நட்புடன் இருப்பதே வாழ்வின் செல்வம்.

தர்மமாய் வாழ்வதை நம்பி,

தரணியில் அன்பினை ஊட்டுவோம்!

மகிழ்வித்து வாழ்வதே வாழ்க்கை ஒளி,

மனிதர்கள் ஒன்றாய் இணைவதே பலம்.

தளர்வில்லா நம்பிக்கையுடன்,

தினமும் நாம் உற்சாகமாய்!

வாழ்வதை வண்ணமாக மாற்றிடுவோம்,

வானம் வரை மகிழ்வை பரப்புவோம்.

அன்பே நம் அடையாளம் என்று,

ஆர்வமுடன் உலகம் பாடிட!

நம்பிக்கையுடன் நாளை நோக்கி,

நம் பயணம் இனிதாய் தொடரட்டும்!

- ஜெ.பூவிழி, இடைநிலை ஆசிரியர்,ஊ.ஒ.ந.நி.பள்ளி,பசவன் கொட்டாய்,

    அணைக்கட்டு ஒன்றியம்,வேலூர் மாவட்டம்.

013.மகிழ்வித்து மகிழுங்கள்...

இப்புவியில் ஒவ்வொரு மனிதரும் அடைய

வேண்டிய அடைய விரும்புகிற ஒன்று

என்றால் அது மகிழ்ச்சி மட்டுமே

மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டும் போதும்

என்பது இங்கு பலரின் மனநிலையாம்

அப்படிப்பட்ட மகிழ்ச்சியை தானும் அடைந்து

அதனை பிறருக்கு வழங்குவது என்பது

மிகச்சிறந்த மற்றும் ஆகச்சிறந்த ஒன்றாம்

பிறரை மகிழ்விக்கும் போது வருவதும்

ஒரு விதமான மன திருப்தியே

அடடே! என்ன ஒரு பரவசம்

என்று மனிதனின் மனதிற்குள் தோன்றுவதே

அதிசயத்தினுள் அதிசயமாக இன்று விளங்குகிறது

நம் வாழ்நாளோ மிகக் குறுகியது

அதனை வீணாக்காமல் நம் மகிழ்ச்சியை

அனைவரிடத்திலும் பகிர்ந்து மகிழ்ச்சியில் மிதக்கலாம்!

-பா. கீர்த்தனா ,திருப்பூர்.

014.மகிழ்வித்து மகிழுங்கள்...

ஆன்றோர் போற்றிட சான்றோர் புகழ்ந்திட

சுற்றத்தார் மதித்திட சுகமாய் வாழ்ந்திட

மன இருளை விரட்டி மாண்புடனை வாழ்ந்திட

வேதனைகள் துடைத்து சாதனைகள் புரிந்திட

உள்ளம் கண்ட கனவினை நனவாக்கிட

உனக்கான புகழ் உன்னை சேர்ந்திட

மனமுவந்து இனிய சொற்கள் பேசிட

மகிழ்வோடு இருக்க நாளும் முயன்றிடு

உன்னுள் மாற்றங்கள் மகிழ்ச்சியால் விளையட்டும்

மகிழ்ச்சியால் திளைத்து வெற்றிகள் குவித்திடு

வலிமை மிக்க மானிடராய் வாழ்ந்திடு

உலகம் உனக்கானது மகிழ்வோடு வாழ்ந்திடு

வரமாக வந்த மகிழ்ச்சியால் உயர்ந்திடு

துன்பத்திலும் துவளாமல் வீறுகொண்டு மகிழ்ந்திடு

துரோகங்கள் சூழ்ந்தாலும் சூளுரைத்தே மகிழ்ந்திடு

துரோகிகள் துவண்டிட துணிவுடன் மகிழ்ந்திடு

ஆகவே எச்சூழலிலும் மகிழ்ச்சியை பயின்றிடு

க. ஸ்ரீசக்தி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

015.மகிழ்வித்து மகிழுங்கள்

அவ்வை தந்தால் ஆத்திச்சூடி

அறிவுரையால் நம்மை மகிழ்வித்து மகிழ்ந்திடவே!

வான்புகழ் வள்ளுவனுமே

முக்காலமும் நம்மை மகிழ்வித்து மகிழ்ந்திடவே

ஈரடியில் தந்தாரே முப்பாலுமே!

அன்னை தெரசாவோ தம் வாழ்நாளையே ஈந்து

மகிழ்வித்து மகிழ்ந்தாரே ஏழைகளின் நலம் காண!

போதி மரத்தடி புத்தன்ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று

மக்களுக்கு போதித்து மகிழ்வித்து மகிழ்ந்தாரே!

முல்லைக்கு தேர் தந்த பாரியே தம் ஈகையால்

ஓர் உயிருக்கும் ஜீவன் தந்து மகிழ்வித்து மகிழ்ந்தாரே!

இவர்கள் பட்டியலில் நாமும் சிறு துளியேனும் ஈந்து

மகிழ்வித்து மகிழ்வோமே!

கோவைக்கவி புவனா ,கோயம்புத்தூர்.

016.மகிழ்வித்து மகிழுங்கள்...

சிரிப்பு என்பது இதயத்தின் பிரதிபலிப்பு

கனிவையும் கருணையையும் உண்மையாக வெளிப்படுத்து

அடுத்தவர் வெற்றியை நீங்கள் கொண்டாடுங்கள்

அடுத்தவர் உணர்வுக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்

வார்த்தைகள் ஒவ்வொன்றும் பூவை போன்றவை

தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மணம் வீசும்

வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாவி போன்றவை

சரியான சாவியை பயன்படுத்தினால் இதயங்களை திறக்கலாம்

விட வேண்டியதை விட்டுவிட்டால் பெறவேண்டியவை

அனைத்தும் அங்கேயே இருப்பது தெரியும்

உணர்வு என்பது உணர்ந்தால் தெரியும்

மகிழ்ச்சியை பகிர்ந்து பார் தெரியும்

சுகத்தை சுகிர்த்துப் பார் தெரியும்

பெற்றாலும் கொடுத்தாலும் இருமடங்காகும்

பாராட்டுங்கள் அதுவே பல மடங்காகும்

மகிழ்ச்சியை மகிழ்ந்து கொடுத்துப் பாருங்கள்

மு. நளினா,அரியலூர்.

17.மகிழ்வித்து மகிழுங்கள் ...

தரவு கொச்சகக் கலிப்பா

நிறைவான மனமிருந்தால் நிழல்கூட நிசமாகும்

மறைவான எண்ணத்தால் மனமங்கு மலடாகும்

பிறைப்போல நாமிருந்தால் பிறருக்கும் இன்பமடா

கறையோடு வாழ்ந்திட்டால் கனமெல்லாம் துன்பமடா

சாதிக்க எழுந்திட்டால் சாத்திரங்கள் பேசிடுவார்

போதிக்க வந்தவர்போல் பொழுதெல்லாம் ஏசிடுவார்

வீதியிலே நடந்தாலும் வீண்பழிதான் போட்டிடுவார்

நாதியற்று நின்றாலும் நச்சுகளை ஊட்டிடுவார்

தேடல்தான் வாழ்வென்று தேனீக்கள் சுற்றிடுமே

வாடல்தான் இயல்பென்று வாழ்வைத்தான் பற்றிடுமே

மாடங்கள் இருந்தாலும் மதிப்பின்றிப் பயனில்லை

ஊடல்கள் பெரிதானால் உயிருக்கும் நயமில்லை

இருக்கின்ற உறவுகளை இருப்பென்று போற்றிடுவோம்

கருக்கின்ற நெஞ்சமதைத் கண்ணீரால் ஆற்றிடுவோம்

உருக்கொண்ட கனவுகளை உள்ளத்தில் சூடிடுவோம்

சுருக்கென்ற சொல்லிட்டால் சுகந்தத்தைத் தேடிடுவோம்

வடுக்களையும் மறந்திட்டு வனப்பாகத் தொழுவோமே

சுடுகின்ற பொழுதெல்லாம் சுயமாக எழுவோமே

துடுப்பாக நிற்பதுதான் துணையென்று சொல்வோமே

கொடுப்பதுவே மகிழ்வென்றக் கொள்கைதனில் வெல்வோமே ...

- சு.சோலைராஜா , முதுகுளத்தூர்.

018.மகிழ்வித்து மகிழுங்கள் ...

காற்றின் சுகந்தத்தை நம்மால் உணரத்தான் முடியும்..

ஆழியின் ஆர்ப்பரிப்பை உள்ளங்கால்

இழுக்கும்போது தான் அறிய முடியும்...

குழந்தையின் உள்ளம் பாராட்டிலும் பட்டாம்பூச்சியிலும் நிறையும்...

பட்டினி இருப்பவனுக்கு ஒருவேளை உணவின் மகத்துவம் புரியும்...

தனிமை துயரில் துவள்பவனுக்கு நெஞ்சார்ந்த ஆறுதல் நிம்மதி அளிக்கும்...

ஒரு பொழுதேனும் பிறரை மகிழ்வித்து மகிழுங்கள்...

தினம் தேடி அலைவதில் இல்லை மகிழ்ச்சி...

எப்பொழுதும் நமக்குள்ளே இருக்கும் மகிழ்ச்சியை

சில நொடிகள் இயற்கையைப் போல பிறரை மகிழ்வித்து பாருங்கள்...

உங்கள் உலகம் மகிழ்மிகுதியால் நிரம்பி வழியும்

-ர.ஹேமலதா,நாமக்கல்.

019.மகிழ்வித்து மகிழுங்கள் ...

ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே

உணர்ந்து வாழ்தலே மனித இயல்பே

இருந்தும் என்றுதான் புரிய போகிறான்

மனிதன் மனிதனாய் என்று மாறுவான் .........

கள்ளம் கபடமில்லாத மனதை கொண்டு

கலவர குணத்தை அறவே மறந்து

ஒவ்வொரு மனிதனையும் சமமாய் மதித்து

ஒற்றுமையோடு சிரித்து வாழு .........

வஞ்சனை கொண்ட மனமும் வேண்டாம்

வன்முறை நிறைந்த வார்த்தைகள் வேண்டாம்

அன்பு நிறைந்த வார்த்தை உதிர்த்து

கருணையோடு காத்திட பாரு ...........

உந்தன் நலனை நாடுவது போலே

அவரின் நலனிலும் அக்கறை கொள்ளு

உன்னை நீ நேசிப்பது போலே

அவரையும் கொஞ்சம் நேசித்து வாழு ........

நீ மட்டும் சிரிப்பது நீதி இல்லை

பிறரை மகிழ்வித்து நீயும் மகிழு

பண்புள்ள வார்த்தைகள் உதிர்க்க தொடங்கினால்

வம்புள்ள உலகம் மறைய தொடங்கும் .......

-முனைவர் பாலசந்தர், மண்ணச்சநல்லூர்.

020.மகிழ்வித்து மகிழுங்கள்...

உன்னுள் விதைந்த உள்ளொளியின் நலத்தால் - மகிழ்வித்திரு

தன்னை நம்பியோர் தன்னிலை உயரவும் -மகிழ்வித்திரு

மன்புகழ் பெருகி மனிதநேயம் நிலைக்கவும் - மகிழ்வித்திரு

சன்மானம் கிடைக்கவும் சமூகப் பணியிலும் - மகிழ்வித்திரு

என்றும் சமநிலை எதிலும் கிடைத்திடவும் - மகிழ்வித்திரு

சென்றும் நற்செயலைச் செம்மையாய்ச் செய்திடவும் - மகிழ்வித்திரு

அன்றென்றும் இராதும் அன்றே நடத்திடவும் - மகிழ்வித்திரு

இன்றே உண்மையென இனிதே இருக்கவும் - மகிழ்வித்திரு

மன்னிய புகழை மற்றோரும் அடையவும் - மகிழ்வித்திரு

கன்றின் ஓட்டமாய்க் கடமையைச் செய்திடவும் - மகிழ்வித்திரு

ஒன்றும் உணர்வில் ஒற்றுமை நிலைக்கவும் - மகிழ்வித்திரு

நன்றே செய்தும் நன்மைகள் பெருகவும் - மகிழ்வித்திரு

மன்னிய பண்பால் மாண்புகழ் பெற்றிடவும் - மகிழ்வித்திரு

முனைவர் அ. லதா மகேஸ்வரி,கோயம்புத்தூர்.

021.மகிழ்வித்து மகிழுங்கள்...

இருப்பதைக்கொண்டு வாழும்போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்!

இருப்பதிலும் கொடுக்கும்போது பிறருக்கு மகிழ்ச்சி கிடைக்கும்!

கொடுக்க கொடுக்க குறைவதில்லை திருப்பி

கொடுத்தாலும் நட்டமில்லை அன்பு!

எந்த கோபம் இருந்தபோதிலும்

அன்பு செய்வதில் மறைந்துவிடும் வம்பு!

சிறுசிறு உதவிகள் செய்தாலே

பிறர் மகிழ்ச்சியை காண்பது எளிதாமே!

எதிர்பாரா நேரத்தில் செய்யும்

உதவியால் தெய்வமாகலாம் மனிதருமே!

சுற்றத்தோடு சுமுகமாய் வாழ

அடிப்படை அன்பும் விட்டுக்கொடுத்தலும் முக்கியமே!

சமுதாயத்தில் நன்மதிப்போடு

வாழ அன்பும் கருணையும் முக்கியமே!

சகஉயிர்களிடத்தில் அன்பு செய்து வாழும் வாழ்க்கை

மண்ணில் கிடைக்கும் சொர்க்கமே!

அன்பிருந்தால் சுமையும்

சுகமாகும்,இல்லாவிட்டால் சொந்தமும் சுமையாகும்!

உள்ளத்தில் அன்பிருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.

வீட்டில் மகிழ்ச்சியிருந்தால் சமுதாயத்தில் வளர்ச்சி இருக்கும்!

அனைவருக்கும் கொடுத்து உண்டு வாழ்கையில்

மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

சுற்றத்தோடு கூடி மகிழ்கையில்

மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்!

மற்றவர்களின் சூழ்நிலை புரிந்தும் பிறரோடு

உணர்வுகளை பகிர்ந்தும் வாழ்வதே வாழ்க்கை!

பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்கையில் நோயின்றி

ஆரோக்கியமாக அடையலாம் நம் இலக்கை!

-கவிஞர். பிரியா, இராமேஸ்வரம்

022.மகிழ்வித்து மகிழ்

காலம் நம்மைக் கலங்கடிக்கும்

கலக்கமுள்ள மனங்களைக் குளிர்விக்கும்

செயல்களைச் செய்வதே சிறப்பானது

ஏழையாய்ப் படைப்பானா இறைவன்?

அழகாய்த்தானே இந்த அகிலத்தைப் படைத்தான்

பணத்தைப் புகுத்திப் பாழக்கியவன் யார்?

மனிதனே சுயநல உருவாய் மாறி

அலங்கோலத்தை விதைத்து

அல்லலுக்குள் அகப்பட்டான்.

மகிழ்ச்சி தொலைந்தது மனது அலைந்தது

ஏக்கம் பெருகியது தூக்கம் அருகியது

இறைவனைப் பழி சொல்லித்

தப்பிக்க நினைக்கும் தறுதலைகளே!

அடுத்தவர் மகிழ ஆக்கச் செயல் செய்தால்

நீ மகிழ இறைவன் நினைக்காமல் போவானா?

மகிழ்வித்து மகிழ் நீயும் உலகும் நீடூழி வாழ.

... அ.பாலசுப்பிரமணியன், சென்னை.

023.மகிழ்வித்து மகிழுங்கள்

வார்த்தைகள் ஏதுமின்றி

அன்பை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி.

தெவிட்டாத தேனாய் சிரிப்பு

ஒரு அழகான மொழிதான் மகிழ்ச்சி

மனதில் சலனங்கள் பல இருப்பினும்

மகிழ்ச்சியில் நனையும் போது

சங்கடங்கள் கூட சந்தோஷமாகி விடுகிறது

மகிழ்ச்சியின் ஆனந்த வெள்ளத்தில்.

மாசில்லாத உலகம் படைப்போம்

மகிழ்ச்சியான வாழ்வு பெறுவோம் ..

- PUMS PERIYAPATTU G.Parameswari H.M 

024.மகிழ்வித்து மகிழுங்கள்

மனிதன் மனமகிழ மகேசன் துணைபோல்

மானிட ரிடையே மாற்றானை நேசிக்கும்

தனிச் சிறப்புமிகு தன்னலமற்ற குணம்

இனிவருங் காலத்திலாவது இதயங்களில் இருக்கட்டுமே!

இன்னா செய்தாருக்கே இனியவை செய்யும்படி

முன்பே முழங்கினார் முப்பாலில் வள்ளுவர்

துன்பம் பிறருக்கு துளியும் புரிந்திடா

தன்மை உடையவனுக்கே இன்பமிங்கு கானல்நீரே!

இருளகற்றி பகலவன் இப்பாரினைமகிழ் விப்பதொப்ப

பொருளின்றி துயருற்று பொறுமை இழந்தவனை

தெருள்கொண்டு அவனுக்குத் தெம்பூட்டி கைநீட்டி

அருள் கூர்ந்து அகங்குளிரச் செய்வோமே!

அன்னமின்றி அவனியிலே அவதியுற்றால் உணவிட்டு

வன்மத்தால் வாடுகிறவனுக்கு வலிக்கு மருந்திட்டு

புன்னகை நல்கி புத்துயிர் ஊட்டி

நன்றேஅதை யுமின்றே நாம் புரிவோமே!

உடுத்த உடையிலா உயர்ந்த பிறவிக்கு

அடுத்தவனென நினையாது அவனுக்கும் ஆடை

கொடுத்துதவி இடுக்கண் கொடுமை களைவது

எடுத்தப்பிறவி உயர்வடையும் என்றும் மகிழ் வித்து மகிழ்வோமே!

கொ.சோலைக்கண்ணன் D.T.Ed.,M.Sc.,B.Ed.,

ஆசிரியர் & கவிஞர்,

அரசு(ஆதிந) தொடக்கப்பள்ளி,கோட்டையூர்,விருதுநகர் மாவட்டம்.

025.மகிழ்வித்து மகிழுங்கள்...

மனதைக் கழுவுங்கள்...

சிரிப்பில் கொஞ்சி...சீரென விளங்கி...

சந்தோஷங்கள் பரவட்டும்.. சங்கீதங்கள் மலரட்டும்...

துன்பங்கள் மறையட்டும்...இன்பங்கள் பெருகட்டும்...

வன்மங்கள் தோற்கட்டும்-நல் எண்ணங்கள் ஜெயிக்கட்டும்...

புன்னகைகள் பூக்கட்டும்...நல் நட்புக்கள் வளரட்டும்...

அன்பை கொடுத்து...பண்பை வளர்த்து...

மகிழ்வித்து மகிழ்ந்திடு..மணி விழாவாய் வாழ்ந்திடு..

திருமதி.தா. சிலம்பரசி,இடைநிலை ஆசிரியர், வேலூர் மாவட்டம்.

026. மகிழ்வித்து மகிழுங்கள் ...

பாதைகள் வேறென்றாலும்

பயணங்கள் இனிமையானாலும்

பல்வேறு சிரமங்களாலும் பதக்கம் வென்றது போல

தன்னையே மகிழ்வித்து மயங்கும்,மனிதனே !

இன்னல்கள் வந்தாலும் இன்முகத்தோடு இன்பம் தரும்

மாணவர்களை உருவாக்கும் ஆசிரியரைப் போல!

முகம் சுளிக்காமல் மெய் சரி செய்யும்

மதிப்பிற்குரிய மருத்துவரை போல !

மரணம் வரும் வரை

சுவாசிக்க காற்றைத் தரும் மரங்களைப் போல !

மண்ணுலகமும் விண்ணுலகமும்

மலைக்கும் வண்ணம் வாழ்க்கையை

மற்றவர்களுக்கு நன்மையை கொடுத்து

மாமனிதனாய் மகிழ்வித்து மகிழ்ந்து விடு ...

அதிதி ஆதர்ஷ்,களம்பூர், திருவண்ணாமலை மாவட்டம்.

027.மகிழ்வித்து மகிழ்வோம்..!

இல்லாரைக் கண்டு எள்ளாமை செய்யாது

தம்மில் உள்ளதைக் கொண்டு நல்லது செய்து

நாளும்நம் அன்பினை காட்டி ஆறுதல் செய்து

பண்பில் சிறந்து பயனுறச் செய்வோம்...!

உயிரில் ஏதும் பேதம் இல்லை

உயர்ந்தவர் , தாழ்ந்தவர் பேதம் மறப்போம்...

அயலவரையும் அன்புடன் மதிப்போம் உலகத்தவர்

யாவரும்நம் உறவெனக் கொள்வோம்..!

மதியினை நாளும் மாண்புறச் செய்வோம் ...!

விதியெனஎண்ணி வீழுதல் தவிர்ப்போம்.. .

கதியென இருக்கு வாழும் வழிதனைக்கட்ட சதிகள்

செய்யாது நற்சாதனைகள் படைப்போம்...!

மகிழ்ச்சி தானே மனக்கவலை தீர்க்கும் மாமருந்து

"மகிழ்வித்து மகிழ்வோம்" நாம்நல்ல மனிதர்கள் என்று..!

-கதிர்பாரதி, கிருஷ்ணகிரி.

028.மகிழ்வித்து மகிழ்

குழந்தையின் புன்னகையில் உள்ள இன்பம்!

போன்றது பிறரை மகிழ்வித்து மகிழ்வதும்!

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம்!

இல்லாமல் சக மனிதனை மதிக்க வேண்டும்!

அனைவரையும் சமமாய்ப் பார்க்க வேண்டும்!

வஞ்சனை இல்லா மனம் வேண்டும்!

வன்முறை இல்லா வாழ்க்கை வேண்டும்!

அன்பு நிறைந்த வார்த்தை வேண்டும்!

கருணையோடு அனைவரிடமும் நடக்க வேண்டும்!

உந்தன் நலனை நாடுவது மட்டும்!

வாழ்வாகாது பிறரின் நலனை நாடுவதும்!

பண்புள்ள வார்த்தைகளால் அவரிடம் பேசுவதும்!

இனிமை பயக்கும் ஒற்றுமை வலுப்படும்!

சுயநலம் இல்லாமல் அன்பு காட்டும்!

மனிதனின் வாழ்வு சொர்க்கமாக மாறும்!

பிறரை மகிழ்வியுங்கள் உங்கள் முகம்!

மலரும் கோடி இன்பம் பெருகும்!

மன நிம்மதியுடன் மானிடர் வாழவும்!

உங்கள் புகழ் உலகமெல்லாம் பெருகவும்!

மகிழ்வித்து மகிழ்ந்து பாருங்கள் தோழர்களே!!!

வாழ்வு உங்கள் வசமாகும் என்றும்!

இர.உஷாநந்தினி சதீஷ்குமார் ,கோவை.

029.மகிழ்வித்து மகிழ்வோம்

முகில் போல நினைவுகளைத் தேய்த்து,

மழை போல மகிழ்ச்சியைப் பொழிந்து,

உலகத்தை அன்பால் நிரப்புவோம்,

மகிழ்வித்து மகிழ்வோம்!

சிரிப்பில் புதைந்து சிந்தனை மலர,

சின்னஞ்சிறு உற்சாகம் பெரிதாக வளர,

உயிர்கள் கோலாகலமாக விளையாட,

மகிழ்வித்து மகிழ்வோம்!

ஒரு சொல் கூட அன்பாய்ச் சொன்னால்,

ஒரு பார்வை கூட நேசமாய் இருந்தால்,

இரு இதயங்கள் ஒலிக்கும் ராகம்,

மகிழ்வித்து மகிழ்வோம்!

நாளையினை நினைத்து கவலை கொள்ளாமல்,

இன்றைய மகிழ்ச்சியை நம் வாழ்வில் வைக்க,

எல்லோரும் சந்தோஷமாய் வாழ,

மகிழ்வித்து மகிழ்வோம்!

என்றும் புன்னகையுடன் Lion.சைலஜா கணேசன்,கோவில்பட்டி.

030.மகிழ்வித்து மகிழுங்கள்

அன்பால் பிணைக்கப்பட்ட வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியும்!

மகிழ்ச்சியோடு வாழ்தல் பினையின்றி வாழ வழிவகுக்கும்!

மகிழ்வோடு வாய்தலும் பிறரை மகிழ்வித்து வாழ்தலும் 

வாழ்க்கையில் உயர் சிறப்பு பெறுவதற்கு சான்று!

மகிழ்ச்சி என்பது அகத்தில் தோன்றுவதே என்பதை அறிந்து கொண்டால்!

மனதோடு மனம் விட்டு மனதார உயிர்களை நேசிப்பாய் நீ!

புரிந்து கொள் தோழா புன்னகையோடு பூத்திருப்பதே மகிழ்ச்சி!

சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவி என்றும் சோகம் கொண்டதில்லை!

இருக்கும் சூழ்நிலையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் கையிலே!

மகிழ்ச்சி எப்போதும் என்றும் மலர்ந்து கொண்டே இருக்கும்!

மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சி பெருகும்!

பெருகும் மகிழ்ச்சி பெருங்கடலாக அடுத்தவர் முகம் நோக்கி அது பாயும்!

பிறர் தேவை அறிந்து உதவினாலே மகிழ்ச்சி என்பது மலர்ச்சி பெறும்! 

பிறர் குணம் அறிந்து பழகினாலே மகிழ்ச்சி என்பது வளர்ச்சி பெறும்!

மகிழ்ச்சியோடு வாழ்ந்து பார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்!

வாழ்தலின் நெறிகள் தெரியும்!

அறிந்து கொள் தோழா அன்பும் பண்பும் மகிழ்ச்சியின் தூண்டுகோல்கள்!

பிறரை மகிழ்வித்து வாழ்ந்து பார் வாழ்க்கை இனிமையானது என்பதை நீ உணர்வாய்!!!!!!

- இர. அன்புச்செல்வி,தொடக்கப்பள்ளி ஆசிரியர்,அரசு புதிய தொடக்கப்பள்ளி.

திருப்பட்டினம்,காரைக்கால்.