பூதலம் போற்றும் புனிதர் பாரதி...! 071

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பூதலம் போற்றும் புனிதர் பாரதி...! 071

பூதலம் போற்றும் புனிதர் பாரதி...

அன்னியர் ஆட்சியின் ஆதிக்கம் ஒழிக்கத்/
தென்தமிழ்  நாட்டில் பாரதி தோன்றினார்/
தன்னெழில் பூத்தத் தனித்தமிழ்ப் பாவலர்/
விண்ணதிர் இடியாய் வேட்கை கொண்டவர்/

அயலக நாட்டினர் ஆணவம் அழிந்திடப்/ 
புயலென எழுந்தார் பூமகன் பாரதி/
பயத்தில் பதராய் விளைந்த மாந்தரை/
புயத்தில் வலுவை விதைத்தார் வித்தகர்/

மாதர் இழிவின் மடமையை எரித்திட/
நாத இசையில் நற்றமிழ் பகன்றார்/
சேது சமுத்திரம் பாலம் அமைத்திட/
பேதம் இல்லா பண்பை உரைத்தார்/

ஆணும் பெண்ணும் சமமாய்க் கருதிட/
அதற்கும் கும்மிப் பாடலைச் சமைத்தார்/
கானம் பாடும் குயிலின் ஓசையைக்/
கவிதை வடிவில் வடித்துத் தந்தார்/

ஏழ்மை அடிமை வறுமை என்று/
எங்கும் இல்லா நிலைமை அமைய/
தோழமை கொண்டார் தேசியக் கவிஞர்/
தொழுதிடு பாரத தேசம் என்றார்/

கள்ளம் இல்லாக் குழந்தை உள்ளம்/
கனிவும் பணிவும் நிறைந்த நெஞ்சம்/
அல்லல் இன்றி வாழ்க்கை அமைய/
அறமாய் அன்பாய் வீரம் உரைத்தார்/

அடங்கி ஒடிங்கி முடக்கப் பட்டவர்/
ஆற்றல் கொண்டு உயர்ந்து வென்றிட/
வந்தே மாதரம் முழக்கம் செய்தார்/
சந்தத் தமிழாய்ச் சமத்துவம் படைத்தார்/

வள்ளுவர் மாண்பை வையகம் போற்றிட/
வற்றாத தமிழின் மானுட நெறியை/
உற்றார் உய்ய ஊற்றாய் இருந்தார்/
கற்பனைக் கெட்டாக் காவியம் படைத்தார்/

ஆங்கில அரசின் ஆட்சியை எதிர்த்து/
அடக்கிய பரங்கியர் பகையினை முறித்து/
புண்ணிய பாரதம் புனிதம் காக்க/
எண்ணிய சுதந்திரம் வேண்டி நின்றார்/

ஈதல் குணத்தால் இன்பம் கண்டவர்/
காதல் செய்தார் கன்னித் தமிழை/
பூதலம் போற்றும் புனிதர் பாரதி/
புகழாய் அமுதாய்ப் பொன்னுடல் நீத்தார்/

 -   பாவலர் சைதை பாலு,
சுண்டக்காமுத்தூர்
337/1 பி &டி காலனி A பிளாக்   விரிவு
89வது வட்டம்.
கோவை-10