அடக்கமே என் ஆபரணம்
சங்கீதமே என் சம்பத்து
மாத்ரு பாஷா தெலுங்கானாலும்
தமிழே என்னைத் தரணி அறியச் செய்தது!
தமிழர்களே நேகு சால இஷ்டம்
இயற்கை என்னும் இளைய கன்னியின்
வனப்பைப் பாடி,
ஆயிரம் நிலவை அழைத்தேன்!
பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்
நான் பாடிய பாடல்களை தமிழகம்
கொண்டாடியது
மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்!
நாடெங்கும் பறந்தேன்; பாடிப் பறந்தேன்!
பாடும் போது நான் தென்றல் காற்றானேன்
சங்கீத ஜாதி முல்லையைத் தொடுத்தேன்
இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ என்றார்கள்
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்றேன்
பாடு நிலாவே என்றார்கள்
சங்கீதம் ஒரு சாகரம்!
நீந்த அஞ்சினேன்
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கண்ணுறங்கும் மாய கண்ணன்
சீர சாகர சயனன் என்னை
அமுதளித்து அருந்தச் செய்தனன்!
‘ப்ரோ சே வா ரெவருரா’ மைசூர் வாசுதேவர் என் வாயில் நிறைந்தார்!
‘தொரகுணா இட்டுவண்டி சேவா’
தியாகய்யர் என் நாவில் அமர்ந்தார்
‘சுவ்விச் சுவ்வி சுவாலம்மா’
மேடையில் நான் பாடும்போது பார்ப்பவர் கண்கள் நிறைந்திருக்கும்!
எப்படிப்பட்ட ஆசீர்வாதம்!
என் இசைஞானம் தெய்வங்கள்
எனக்கிட்ட பிச்சை!
‘மாணிக்ய வீணாம் உபலாயலந்தீம்’
காளியை கலைவாணியை
காளிதாசன் தந்த சொல்லைப் பாடினேன்!
அவள் அருளே நான்!
பாடிப் பாடி மகிழ்ந்தேன்
கேட்டுக் கேட்டு மகிழ்ந்தீர்கள்
பெரும் பாக்கியம் அல்லவா இது!
எனக்காக நீங்கள் ஒவ்வொருவரும்
செய்யும் பிரார்த்தனையால்
நான் நெகிழ்ந்தேன்
பிறவிப் பயனடைந்தேன்
மீண்டும் உங்களிடம் வருவான்
இந்த பாலு!
அன்புள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
-மா.பாரதிமுத்துநாயகம்