தமிழ்த் தென்றல் திரு. வி.கல்யாணசுந்தரனார் பிறந்த தினம் ஆகஸ்ட் 26. ( 26.8.1883- 17.9.1953)
” யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறும் திருக்குறள் படிப்புத் தீக்குணங்களை அறவே களையவில்லை. கமலாம்பிகையின் சேர்க்கை அக்குணங்களைப் படிப்படியாக ஒடுக்கியது.
அவள் திருக்குறள் படித்தவளல்லள். எனக்கு அவளே திருக்குறளாக விளங்கினாள். மனைவாழ்க்கையில் ஈடுபடப்படத் திருக்குறள் நுட்பம் விளங்குவதாகிறது. திருவள்ளுவர் உள்ளத்தை உணர்தற்கு மனைவாழ்க்கை இன்றியமையாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாயிற்று. யான் பின்னாளில் எழுதிய திருக்குறள் விரிவுரைக்கு இல் வாழ்க்கையின் அனுபவம் பெருந்துணையாய் நின்றது.
கமலாம்பிகைக்குச் சகிப்புத்தன்மை அதிகம். அதை யான் பன்முறை காணும் வாய்ப்புகளை வாழ்க்கையில் பெற்றேன். சகிப்புக்கு மூலம் பொறுமை. பொறுமை என் மனைவியிடம் எப்படி இளமையிலேயே அமைந்தது என்று யான் நினைப்பதுண்டு. பிறவிக்கூறு என்ற முடிவுக்கு வந்தேன்.
சின்ன வயதில் எனக்குப் பொறுமை பெரிதும் கிடையாது. திருமணத்திற்குப் பின்னர் யான் ‘பொறுமையாளன்’ என்று பலரால் போற்றப்பட்டேன். என்பால் பொறுமை பொலிவது உண்மையானால், அஃது கமலாம்பிகையினின்றும் என்பால் இறங்கிக் கால்கொண்டதென்று யான் சொல்வேன்…..”
-திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்
இன்று தமிழ்த் தென்றலின் பிறந்த நாள்.
(அடியேனும் இன்றைய நாளில்தான் பிறந்தேன்.
26.8.1958)
மா.பாரதிமுத்துநாயகம்