கெட்டியாக வாழ்ந்தவர்கள்…

0
155

ஆடிமாத கோடையிலும்
ஆறு. குளம் தேடிப் போவோம்!
ஆற்றுநீரும் கோடையிலே
வற்றிப் போனால் நாங்க
செரட்டையால மணலைக் தோண்டி
ஊற்றுநீரெடுத்து துணி துவைப்போம்!

சட்டி பானை கொண்டு வந்து
வீடுவீடாக சோறு வாங்கி
குடும்பத்தோடு
தின்று வாழ்ந்தோம்!

ஊருபொதி சுமந்து எங்க வூட்டு
கழுதைங்களுக்கும் கழுத்தெலும்பு
தேய்ஞ்சிருக்கும்!
உள்ளூரு அழுக்கு துணி சுமந்து
எங்களுக்கு கூனு விழுந்திருச்சு!
அடிச்சு துணிதுவச்சு
இடுப்பெலும்பும் இறங்கிடுச்சு!

அழுக்கு போகனும்னு நாங்க
அடிச்சுத் துவைச்சோம்னா
கொடுத்த துணி கிழிஞ்சு போனா
யாரு பதில் சொல்லுவா?? எங்க
தோலை உரிச்சுப் போடுவாங்க!

உள்ளூரு மட்டுமல்ல
அசலூரு நடந்து போயி
வெளுக்க துணி வாங்கியாந்து
வெள்ளாவி வச்சிடுவோம்!
வீட்டுக்கு ஒரு குறி மையால
போட்டோம்னா ஆயுசுக்கும்
அழியாது! ஆயிரம் இருந்தாலும்
அவரவர் துணிமணிகள்
அடையாளம் மாறாது!

ஊருக்குள்ள ஏதோ ஒரு வீட்டில்
பெருசு மண்டைய போட்டுதுன்னா
வாசலிலே வெள்ளை துணி
பந்தல் போட்டு பச்சைத் தென்னையோலை கிடுகு
முடைய எங்களத்தான் தேடுவாங்க!

சுடுகாட்டில் மாத்து விரிச்சு
இழவு செலவு பணங் கொடுக்க
பழஞ்சேலை கொண்டுவரச் சொல்லுவாங்க! கூலியாக
அஞ்சு பத்து ரூபாய் அதிகம் கேட்டா
கஞ்சத்தனம் பண்ணுவாங்க!
அசிங்கமாகத் திட்டுவாங்க!

வெட்டியான் கூட நின்னு பழஞ்சேலையில மண்ணு வெட்டி
சாந்து குழைச்சு சுமக்க வேணும்!
மூட்டம் வைக்க வேணும்!
வறட்டி வாங்கி வரவேணும்!
கழுதையிலும் கீழாக
செரட்டை வைக்கோல்
சுமக்க வேணும்!

வெட்டியானும் ராமுழுசும்
நட்டநடுராத்திரியில் சுடுகாட்டில்
காவல் காக்க வேணும்!
எரியும் உடம்பு சிலநேரம்
விரைச்சு போயி எந்திரிச்சு
நின்னாக்க அடிச்சு படுக்க
வைக்கவேணும்!

தலைப்புள்ள செத்தாக்க
மாந்திரவாதி நெருங்காம
கண்முழிச்சு கிடக்க வேணும்!
தலைச்சன்புள்ள மண்டை ஓடு
மாந்த்ரீகம் செய்வதற்கு
ரொம்பவே நல்லதுன்னு
மந்திரவாதிகள் சொல்லுவாங்க!
மூட்டம் பிரிச்சுப் பார்த்து
மறுநாள் காலை வீட்டுக்கு
சாம்பலான சேதி சொல்ல
சோம்பலின்றி ஓட வேண்டும்!

எரிக்கும் வேலை நின்னுருச்சு!
எங்க பொழப்பு கொறைஞ்சிருச்சு!
மின்மயானம் வந்திருச்சு!
கட்டு காவல் மட்டுப்பட்டு
சடங்குகள் சம்பிரதாயங்கள்
சாம்பலாகிப் போயிருச்சு!

கிடைச்ச அரசாங்க வேலையை விட்டு
கருப்பன் மகன் கசமுத்து
கருப்பந்துறையே கதியாகக் கிடந்து
சிதை எரிச்ச காலமெல்லாம்
மலையேறிப் போய் நாளாச்சு!

இன்ஜினியர் வாத்தியார் வேலைக்கு
ஊருவிட்டுப் போன எங்க மக்கள்
இங்கிலீஸ் படிச்சுப்புட்டு இன்று
வேலையின்றித் தவிக்கும் நிலைமை
கருப்பனுக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லை!
வேலையின்றி சுத்துனாலும் புள்ளைய
வெட்டியா(ன்)கச் சுத்துறான்னுதான்
ஊருக்குள்ள சொல்லுறாங்க!
ஊரு மாறிப் போனாலும் ஊருக்குள்ள
பேரு மாறப்போறதில்லை!

வெட்டியானும் வண்ணானும்
எட்டி நின்று வாழ்ந்தாலும் வாழ்வில்
ஒட்டி வாழ்ந்து நின்றார்கள்! மனதில்
கெட்டியாக இன்றும் வாழ்கிறார்கள்!

– சுத்தமல்லி உமா ஹரிகரன் திருநெல்வேலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here