ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 21

0
180

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி – 21

நான் தினமும் அலுவலகம் சென்றுவரும் பாதையின் ஓரத்தில் தார்பாயில் கொஞ்சம் பொம்மைகளை போட்டுவைத்துகொண்டு, ஒரு சில பொம்மைகளை கைகளில் தூக்கி பிடித்துகாட்டியபடி நின்றுகொண்டு வியாபாரம் செய்து கொண்டிருப்பார் அந்த பெரியவர்.

நேற்று மாலை,
குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கலாம் என்று வண்டியை நிறுத்தி விட்டு, அவரிடம் ஒரு வெள்ளை நிற நாய் குட்டி பொம்மையை காட்டி விலை கேட்டேன்.
“நூறு ரூபாய்ங்க தம்பி” என்றார்.
அவர் கேட்ட விலையை அப்படியே கொடுத்துவிட முடியுமா என்ன?

ஏனென்றால் பெரிய பெரிய ஏசி மால்களில் உள்ள கடைகளிலெல்லாம் பேரம் பேசமுடியாமல் கேட்டதை அப்படியே ஜிஎஸ்டி யோடு சேர்த்து கொடுத்துவிட்டு வருவதில் அடையும்
தோல்விகளையெல்லாம்,
இப்படி ரோட்டோரம் வெய்யிலில் நின்று வியாபாரம் செய்யும் சாமனியர்களிடம் பத்து ரூபாய் பேரம் பேசி ஜெயிப்பதில் தானே சரி செய்து கொள்ளவேண்டியதாய் இருக்கிறது!

“ரெண்டு பீஸ் எடுத்துக்குறேன்
பத்து, பத்து ரூபாய் கம்மி பண்ணி கொடுங்க” என்றேன்.

“இல்லைங்க தம்பி எப்பவும் அதிகமா ஒரு விலையை சொல்லி கம்மி பண்ண மாட்டேன், நியாமான விலையத்தான் சொல்லுவேன்.” என்றார் அவர்.

“ரெண்டு நாளா பசங்க பொம்மை வேணும், பொம்மை வேணும்னு கேட்டுக்கிட்டேயிருக்காங்க.
சரி.. கடையில போயி வாங்குறதுக்கு,
பாவம் வெய்யிலுல நிக்கிறீங்க, உங்களுக்கு ஒரு வியாபாரம் கொடுக்கலாம்னா பார்த்தா,
பத்து ரூபா கூட கம்மி பண்ண மாட்டேன்னா எப்படி”? என்றேன்.

அவர் என் கண்களை உற்றுப்பார்தார்.
“இதை உங்க ரெண்டு பசங்களுக்காக வாங்குறீங்களா”? என்று கேட்டார்

நான் “ஆமாம்” என்றேன்.. அவர் கொஞ்சம் கம்மிய குரலில்
“சரி குடுங்க” என்றார்.

பணத்தை வாங்கிக் கொண்டு பொம்மைகளை கொடுத்த போது அவர் கண்கள் கலங்கியதை கவனித்தேன்.
அது என் மனதிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
“ஐயா என்னாச்சு?
ஏன் கண் கலங்குறீங்க, வேணும்னா நூறு ரூபாயே எடுத்துக்கோங்க” என்றேன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க தம்பி.
என்னமோ ஞாபகம்,
இந்த பொம்மைக்கு கூட ஒரு உயிர் இருக்குறதா நினைச்சுக்கிட்டு,
இதுக்கு ஒரு பேரயும் வச்சு,
சோற ஊட்டி விட்டு,
பாசம் காட்டி விளையாடுற அந்த குழந்தை மனசோடையே கடைசிவரைக்கும் பிள்ளைங்க வளர்ந்து நின்னுட்டாங்கன்னா,
எல்லா பெத்தவங்களும் கொடுத்து வச்சவங்க தான் தம்பி” என்றார் ஆதங்கமாய்.

” உங்களுக்கு புள்ளைங்கய்யா”? என்றேன்.

“ரெண்டும் பசங்க தான் தம்பி” என்றார்.

“ஓ அப்படியா!
நம்ம வீடு மாதிரிதானா,
ஆமா ரெண்டு பேரும் என்ன பண்றாங்க.”?

“ஆண்டவன் புண்ணியத்துல நல்லாயிருக்காங்க தம்பி.”

“அப்புறம் எதுக்கு இந்த வேகாத வெய்யிலுல நின்னு பொம்மை விற்கனம்னு”? என்று நான் முடிப்பதற்குள்..

“தலையெழுத்தான்னு கேட்குறீங்க அதானே?
என்ன பண்ணுறது தம்பி,
இந்த வயிறும், என்னை நம்பி வந்த ஒரு ஜீவனும் இருக்குதே, எதையாவது செஞ்சு பொழச்சு கிடக்கனும்ல.”

“பசங்க பாத்துகிறதில்லையா.”?

“பார்த்துக்கிட்டாங்க தம்பி. ஆனா பாருங்க எங்களுக்கு தான் மனசுக்கு என்னமோ ஒப்பல.”

“ஏன்”?

“உழைக்கிற காலத்துல கிடைக்கிறத, அரக்கப் பறக்க அள்ளி வாயில போட்டுட்டு…
வேலை வேலைன்னுட்டு ஓடிருறோம்.
ஆனா ஒக்காருற காலத்துல ஒரு வாயி சோறா இருந்தாலும் நிம்மதியா சாப்பிடனும் தம்பி.”

“அது சரிதான்.
பெத்தவங்களை உட்கார வச்சு சோறு போடுறத விட, புண்ணியம் உலகத்துல எதுவுமேயில்லைன்னு எத்தனை பிள்ளைகளுக்கு தெரியுது.”?

“உண்மைங்க தம்பி.
அப்பன், ஆத்தா வீட்டுல புள்ளைங்க சாப்பிடுற சாப்பாடு சாமிக்கு படைக்கிறது மாதிரி,
மனமும், ருசியும் அதுகளுக்காகவே இருக்கும்.
ஆனா புள்ளைங்க வீட்டுல அப்பன், ஆத்தாவுக்கு போடுற சோறு விருந்தாளிக்கு போடுற மாதிரி,
கொஞ்ச நாள் மரியாதையா கிடைக்கும் அவ்வளவு தான். ”

“சரியா சொன்னிங்க போங்க.
ஆமா! என்னாதான் ஆச்சு பசங்க வீட்ல?
சொல்றது தப்பில்லைன்னு நினைச்சா சொல்லுங்க, ஏதாவது தேவைன்னா, எதோ என்னால முடிஞ்சத செய்யிறேன்.” என்றேன்.

“நீங்க சொன்னதே பெரிய சந்தோசம் தம்பி. யாருக்கு வரும் இந்த மனசெல்லாம்!
அதுவுமில்லாம நீங்களும்
தெரிஞ்சுக்கனும் பாருங்க,
அதனால உங்ககிட்ட சொல்றதுல ஒன்னும் தப்பில்ல” என்றபடி ஆரம்பித்தார்.

“தம்பி எம் பேரு குமாரசாமிங்க, எழுபத்தஞ்சு வயசுக்கு மேல ஆயிடுச்சு.
என் வீட்டுக்காரியோட பேரு பார்வதி. அவளுக்கும் ஒரு எழுபது வயசு இருக்கும்.
எங்களுக்கும் ரெண்டு பசங்க தான் தம்பி.
எனக்கு சொல்லிக்குற மாதிரி பெரிய வேலையெல்லாம் கிடையாதுங்க,
கூலி வேலை தான்.

ஆனா நம்ம கஷ்டம் நம்ம புள்ளைங்களுக்கு வந்துறவே கூடாதுன்னு ரெண்டு பேரும் ரெம்பவே வைராக்கியமா இருந்தோம்.
பல நாளு பட்டினி கூட கெடந்திருக்கோம் தம்பி, ஆனா புள்ளைகள ஒரு நாளும் பட்டினியா போட்டதே கெடையாது.
அதுக வயிறு நெறஞ்சிருச்சேன்னு நாங்க மனசு நிறஞ்சு தூங்குன நாளு தான் அதிகம்.

புள்ளைங்கள நல்ல படிக்க வச்சோம்,
நம்ம தலைமுறையோட அடையாளத்த கொஞ்சமாவது நம்ம காலத்திலேயே மாத்திடனும்,
அப்படி மாத்தி அதுகள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயி விட்டுறனும். இல்லைன்னா அந்த பாவம் நம்மல சும்மா விடாது தம்பி.

அப்பா விட்டுட்டு போன வீடு வரைக்கும் வித்து புள்ளைங்க ஆசைபட்ட படிப்பையெல்லாம் படிக்க வச்சோம். அதுகளும் நல்லபடியா படிச்சு முடிச்சு, நல்ல வேலையிலேயும் உட்கார்ந்துருச்சுங்க.

கல்யாணம் முடிச்சு வச்சோம்.
வேற, வேற பக்கம் வேலைங்கறதுனால அததுக்கு அங்கங்க தனி, தனியா வீடு பார்த்தும் குடியும் வச்சோம்.

எங்களுக்கு பார்க்கனம்னு தோனுச்சுன்னா போயிறுவோம். அவங்களும் அப்பப்ப பேரன், பேத்திய கூட்டிடு வந்து கண்ணுல காட்டிட்டுதான் போவாங்க.

சின்ன வயசுலயிருந்து பாடுபட்ட உடம்பு தம்பி. ஓய்வு கொடுறா சாமின்னு கெஞ்சுது,
இப்பவரைக்கும் உழைச்சாத்தான் சாப்பாடுங்குற நிலமை.

புள்ளைங்களோட போயி இருந்துக்கலாம்னு அப்பப்போ தோனும், ஆனாலும் கேட்டதில்லை.
ஆனா இப்போ அதைவிட்டா வேற வழியும் ஏது?
மரம் தள்ளாடும் போது விழுதுகள் தாங்குறது தானே தர்மம்.

புள்ளைங்ககிட்டேயே வாய் விட்டு கேட்டுட்டோம்.
அதுகளும் வேண்டாம்னு சொல்லலைங்க தம்பி.
ஆனா காலத்துக்கும் ரெண்டு பேரையும் ஒன்னா வச்சு பார்த்துக்குறது சிரமம்.
அதனால அம்மா தம்பிகிட்டையும், நான் பெரியவங்கிட்டையும் இருந்துக்கிறதா முடிவாச்சு.
வேற வழியில்லாம ஆளுக்கொரு திசையில கிடக்குறதா ஆச்சு.

குறை சொல்லமுடியாது. பயலும், மறுமவளும் நால்லாதான் பார்த்துகிட்டாங்க.
ஆனாலும் பாருங்க தம்பி! நாற்பத்தியேழு வருஷ தாம்பத்தியமில்லையா? சேர்ந்தாப்புல ரெண்டு நாள் கூட பிரிஞ்சு இருந்ததேயில்ல.
பிரசவத்துக்கு கூட, அவ அம்மா வீடு போனதில்ல.
உயிர் போற வரைக்கும் உன்னை பிரிய மாடேன்னு பண்ணுன சத்தியத்த நம்பி வந்தவள,
வெறும் சோத்துக்காக பிரிஞ்சு இருக்குறது கொடுமையிலும் கொடுமைங்க தம்பி.

பல நாளு தாங்க முடியாம அழுதிருக்கேன்,
சோறு தண்ணி பிடிக்காம வேதனை பட்டு கிடந்திருக்கேன்.
கட்டுனவள பிரிஞ்சு சொர்கத்திலேயே இருந்தாலும் கூட, அது தண்டனை தான் தம்பி.

பெரியவன்கிட்ட ஒரு நாள், வாப்பா ஒரு எட்டு அம்மாவ போயி பார்த்துட்டு வந்துறலாம்னு கேட்டேன்.
அவனும் அதுக்கென்னப்பா பார்த்துட்டு ஒரு ரெண்டு நாளு தங்கிட்டு கூட வருவோம்னு குடும்பத்தோட கூட்டிட்டு கெளம்பிட்டான்.

ஒரு மாசத்துக்கு பிறகு அவள பார்த்தேங்க தம்பி. கண்ணுல தண்ணியா ஊத்திருச்சு.
இனிமே இந்த நிலமை கூடவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அதை அவகிட்டயும் சொன்னேன்.
அவ மட்டும் வேற என்ன சொல்லுவா பாவம்?

புள்ளைங்க வீட்ட விட்டு வெளியேறி ஒரு வருஷம் ஆகப்போகுது.
ஒரு மவராசன் குத்த வைக்கிறதுக்கு ஒரு கொட்டகையும்,
பொழப்புக்கு அவரு கடையில இருந்தே வியாபாரத்துக்கு கொஞ்சம் பொம்மையையும் கொடுத்து உதவுனாரு.
மனுஷங்க இருக்காங்க தம்பி.

தினமும் இங்க நின்னுகிட்டுதான் வியாபாரம் பண்ணுறேன்.
நூறுலயிருந்து, நூத்தம்பது வரைக்கும் கிடைக்குது.
இருக்குறத வச்சு சாப்பிட்டுட்டு நிம்மதியா இருக்கோம்.

இதுவரைக்கும் எங்களுக்குன்னு சேத்து வச்சதில்ல,
ஆனா இப்ப சேத்து வைக்கிறேன் தம்பி.
தெனமும் வேலை முடிஞ்சு போயி, மொத வேலையா ஒரு இருபது ரூவாய எடுத்து பொட்டிக்குள்ள போட்டு வச்சுச்சுட்டு தான் மறு வேலை பார்பேன்.
எதுக்கு இதை ஒதுக்கி வைக்கிறீங்கன்னு ஒரு நாள் அவ கேட்டுட்டா.
நாம செத்தாலும் அடக்கம் பண்ணுற செலவ கூட புள்ளைகளுக்கு வச்சுற கூடாதுன்னு சொன்னேன் பாருங்க,
பாவம் கதறி அழுதுட்டா.

எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஒரு ஆசை மட்டும்தான் தம்பி,
ரெண்டு பேரும் ஒரே நேரத்துல செத்து போயிறனும்.
ஒருத்தர் போயி ஒருத்தர் இருந்துற கூடாது.” என்றார்.

“நீங்க இங்க இருக்குறது ஒங்க பசங்களுக்கு தெரியாதா?
தேடி வரலயா”? என்றேன்.

“தேடாமையா இருப்பாங்க.
தெரிஞ்சு தேடி வரும்போது பார்போம்.
ஆனா ஒன்னு தம்பி.
தனக்குன்னு சேர்த்து வைக்காம,
தான் ருசிக்குன்னு சமைக்காம,
புள்ளைங்க, புள்ளைங்கன்னே வாழ்ந்துருறோம்.
ஆனா புள்ளைங்கள தாண்டி நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குங்குறததான் மறந்தே போயிறுறோம்.

ஆனா அதுகள சொல்லியும் தப்பில்ல தம்பி.
அதுக பெத்த புள்ளைகள வளர்த்து கரையேத்த வேண்டிய பொறுப்ப வச்சுக்கிட்டு, இதுல நம்மளையும் தூக்கி சொமக்குறதுன்னா ஆவுற காரியமா சொல்லுங்க?

நாம சொல்லி கொடுத்த பாடம் தான் இது.
அதுக கத்துக்கிட்டு இப்போ அதுக பிள்ளைகளுக்கும் அதையே சொல்லி கொடுக்குதுக.

அதுக புள்ளைகளும் கத்துக்கிட்டு,
நாளைக்கு இதையே திருப்பி செய்யும் போது, அப்போ அப்பன் ஆத்தாவோட வேதனை புரியலாம்.
இது கால சக்கரம் தம்பி.

ஆனா ஒரு விசயம் மட்டும் சொல்லுறேன் கேட்டுக்கோங்க.
உழைக்கிற காலத்துல வாய கட்டி, வயித்த கட்டி நமக்குன்னு ரெண்டு காசு ஒதுக்கி வச்சுறனும்.
இல்லைன்னா கடைசி காலம் கவுரவமா இருக்காது தம்பி” என்று முடித்தார் அந்த மனிதர்.

அவர் பேச்சிலிருந்துதான் எத்தனை வலி?
எத்தனை வேதனை?

பறவைகள் கூட சிறகுகள் முளைத்தவுடன் வாழ்ந்த கூட்டை கலைத்துவிடுகிறது.

வளர்ந்த நாடுகளிளெல்லாம் பிள்ளைகளை படிக்க வைப்பது மட்டும் தான் அதிகபட்ச கடமையாக இருக்கிறது.
ஓய்வு காலத்திற்கு தெளிவாக திட்டமிடுவது ஒன்று தான் அங்கே அவர்களின் முதல் செலவாக இருக்கிறது.

ஆனால் இங்கே!
வீட்டை விற்று, காட்டை விற்று, பிள்ளைகளை படிக்கவைத்து, வளர்தெடுத்து ஆளாக்கிவிட்டு,
நாளை நம்மை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது, பெரும்பாலும் ஏமாற்றங்கள்தான் மிஞ்சுகிறது.

குமாரசாமியையும், அவர் மனைவியையும், பிள்ளைகள் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லவில்லையே,?
பிறகு ஏன் அவர்களால் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க முடியவில்லை?
பிள்ளைகளிடத்தில் அவர்களின் தேவை, மற்றும் எதிர்பார்ப்பு என்னவாகயிருந்தது?
பார்க்கலாம் அடுத்தவாரம்

கூ, சுரேஷ்வரன்,
இன்சூரன்ஸ் ஆலோசகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here