ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-13

0
235

“பீமா ஸ்கூல்”
இதனை பற்றி பெற்றோர்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
“பீமா ஸ்கூல்” என்பது குழந்தைகளின் தடையற்ற கல்வியினை உறுதிபடுத்திகொடுத்து, அவர்களின் வாழ்க்கையினை பாதுகாத்திடும் ஒரு உன்னதமான பெரும் முயற்சியாகும்.

மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட பள்ளிகளும், எல்ஐசியும், இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான் “பீமா ஸ்கூல்” என்பதாகும்.
இந்த திட்டத்தில்,
சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும், தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கும்போது, அந்த குழந்தைகளின் உயர் கல்விக்கான தொகையையும், மற்றும் அவர்கள் திருமணத்திற்கு தேவையான தொகையையும், பாலிசி எடுக்கும் அன்றைய நாளிலேயே உறுதிப்படுத்திக் கொடுப்பதாகவும்,

குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் இணையும்போது, அவர்களின் வருமானத்தை பாதுகாத்திடும் விதத்திலும்,
அதாவது சம்பாதிக்கும் பெற்றோருக்கு உடல் திறன் இழப்பு ஏற்ப்பட்டாலோ,
அல்லது மரணம் சம்பவித்தாலோ, அவரின் வருமானத்தை தொடர்ந்து வீட்டிற்கு அளித்திடும் வகையிலும்,
இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டிருக்கும்.

அதாவது எப்படிப் பார்த்தாலும் இந்த திட்டத்தின் ஒரே நோக்கம் என்னவென்றால், குழந்தைகளின் கல்வி எந்தவிதத்திலும் தடைபட்டு விடக்கூடாது என்பதே ஆகும்.

2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் இரண்டு பள்ளிகளில் இந்த திட்டத்தினை நாங்கள் செயல்படுத்திய போது, சந்தித்த மக்கள், கிடைத்த அனுபவங்கள், எல்லாம் ஒட்டுமொத்தமாக எங்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றைத்தான்.
அது என்னவென்றால் இன்சூரன்ஸ் என்பது வியாபார நோக்கத்தோடு செய்யக்கூடிய ஒரு தொழிலே அல்ல.
கொஞ்சமாவது தன் நலன் மறந்து அடுத்தவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்யவேண்டுமென்ற மனப்பான்மையும், பொறுமை குணமும், இருந்தால் மட்டும்தான் இந்த தொழிலை ஒருவர் திறம்பட செய்திடமுடியும் என்பதினை பட்டவர்த்தனமாக நாங்கள் உணர்ந்து கொண்ட தருணங்கள் அது.

இந்தத் திட்டத்தினை நாங்கள் பள்ளியில் செயல்படுத்தும்போது, நேரடியாக பள்ளியின் மூலமாக குழந்தைகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும், சுலபமாக பாலிசியை எழுதி கொடுத்துவிடவில்லை. மாறாக குழந்தைகளிடம் ஒரு படிவத்தை கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை விருப்பமிருக்கும் பெற்றோர்களிடம் பூர்த்திசெய்து வாங்கி, அதன் அடிப்படையில் அவர்கள் குறிப்பிட்டிருந்த நாளில், நேரத்தில், அவர்கள் வீட்டிற்கு போய், அவர்கள் வீட்டின் நிலமையை பார்த்து, உணர்ந்து, அதற்கு தகுந்தார்போல அவர்களுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் வேலைகளை செய்தோம்.

அந்தப் படிவத்தில் தந்தை பெயர்,
அவர் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்? தாயார் பெயர்,
அவர் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்? மற்றும் குழந்தைகள் என்ன படித்து கொண்டிருக்கிறார்கள்? என்பன மாதிரியான விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து எங்களுக்கு ஆயிரம் படிவங்கள் பெற்றோர்களால் பூர்த்திசெய்து கொடுக்கப்பட்டது.

அப்படி பெறப்பட்ட படிவங்களில் 14 படிவங்களில் அப்பாவின் பெயர் எழுதப்பட்டு,
அதன்கீழ் அவர் என்ன பணி செய்கிறார்? என்று கேட்கப்பட்டிருந்த கட்டத்தில் “அப்பா இல்லை” என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் கீழே அம்மா என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்கப்பட்டிருந்த கட்டத்தில் கூலி, டைலர், ஹெல்பர், என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தைகள் விவரம் கேட்க பட்டிருந்த கட்டத்தில் இரண்டு வீடுகளில் மட்டும்தான், ஒவ்வொரு குழந்தை என குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற வீடுகளில் இரண்டு குழந்தைகள் என்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த படிவத்தை எடுத்துகொண்டு அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று நாங்கள் சந்தித்து பேசியபோது, இறந்துபோன அந்தப் பதினான்கு குடும்பத்தின் தலைவர்களில், ஒருவர் கூட தனது பெயரில் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருக்கவில்லை என்பதுதான், மிகப்பெரிய கொடுமை. நிறைய வீடுகளில் கணவன் இறந்த பிறகுதான் அந்த வீட்டின் பெண்கள் வேலைக்குப் போகவே ஆரம்பித்திருக்கிறார்கள், என்பது இன்னமும் கொடுமை.

அவர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல எங்களிடம் கவலை தோய்ந்த முகத்தோடும், உடைந்து போன குரலோடும் கூறியது ஒன்றே ஒன்றை மட்டும்தான்.
“அடுத்த வருடம் எங்களால் இந்த பள்ளியில் கட்டணம் கட்டி என் குழந்தையை படிக்க வைக்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான்,” என்பதாகத்தான் அவர்களின் ஒட்டுமொத்த குரலும் இருந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளை ஒவ்வொரு வருடமும் சந்திப்பதை மனதில் கொண்டுதான்,
பள்ளி நிர்வாகம் “பீமா ஸ்கூல்” எனும் இந்த திட்டத்தை அவர்கள் பள்ளியில் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு அனுமதி அளித்திருந்தார்கள்.

பள்ளி நிர்வாகத்தினர் எங்களிடம் ஆதங்கத்தோடு சொன்னது என்னவென்றால்… “ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரியான காரணத்தினால் சில குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்படும் குழந்தைகளின் வீட்டு சூழ்நிலையை புரிந்துகொண்டு கல்விக் கட்டணத்தில் பெரியதொரு சலுகைகள் அளித்தாலும் கூட, மீதமிருக்கும் கட்டணத்தை முடிந்தபோது தவணை முறையில் கொடுங்கள் வாங்கிகொள்கிறோம், என்று சலுகைகள் அளித்தாலும்கூட, அந்த சிறிய கட்டணத்தை கூட அவர்களால் கட்டமுடியாமல் தங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி விடுகிறார்கள். அதனால் இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வியை பாதுகாக்கும் விதமாக திட்டங்கள் இருந்தால், அதை தாராளமாக செயல்படுத்துங்கள். அதற்கு பள்ளி நிர்வாகம் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்,
என்று மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கரையோடு கொண்ட பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டார்கள். அனுமதியும் அளித்தார்கள்.

நண்பர்களே!
மிக, மிக முக்கியமானதொரு விசயத்தை சொல்கிறேன் கேளுங்கள்,
புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்,
தீர்வு கான முற்படுங்கள்.
அது என்னவென்றால்…
ஒரே வகுப்பறையில்,
ஒரே சீருடையில்,
எந்தவொரு வித்தியாசமும் இன்றி பார்த்த குழந்தைகளை,
தனித்தனியாக அவர்களின் வீட்டு சூழ்நிலைகளில் போய் சந்தித்தபோது,
மாறுபட்ட ஒவ்வொரு குழந்தையின் வீட்டு சூழ்நிலைகளும் எங்களிடம் உரக்கச்சொன்னது
ஒன்றே ஒன்றை மட்டும் தான்.
அது என்னவென்றால்…
“இன்று ஒரே வகுப்பறையில் ஒரே கல்வியை சமமாக கற்றுக்கொண்டிருக்கும் இந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை ஒரே சமனாக இருக்கப்போவதில்லை”
என்பதைதான்.
காரணம் பெற்றோர்கள்!

பல பேர் வேலைசெய்யும் ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருப்பவரின் குழந்தை பயிலும் அதே பள்ளியில்,
அதே வகுப்பில் தான் அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியின் குழந்தையும் பயின்றுகொண்டிருக்கிறது.
இப்போது ஒரே வகுப்பறையில்,
ஒரே கல்வியை பெற்றுக்கொண்டிருக்கும் இரு குழந்தைகளிடத்திலும், கல்வி முறையிலேயும்,
பள்ளி சூழலிலும் எந்தவித வேறுபாடும் இல்லை.
ஆனால் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்மானிக்கப்போகும் உயர் கல்வியை வாங்கிக்கொடுக்கப்போகும் பெற்றோர்களிடத்தில் மலைக்கும், மடுவுக்கும் உண்டான வித்தியாசம் இருக்கிறது.

உயர் கல்விதான் ஒரு குழந்தையின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்,
அதை முறையான திட்டமிடல் மூலமாகத்தான்,
ஒரு தொழிலாளி தன் குழந்தைக்கு பெற்று தந்திடமுடியும் என்பது யாராலும் மறுத்துவிட இயலாத உண்மை.
அதை உறுதிசெய்து கொடுப்பதுதான் “பீமா ஸ்கூல்”

பீமா ஸ்கூல் அனுபவங்கள் பெற்றோர்களுக்கு சொல்ல சொன்ன பாடங்கள் ஏராளம்.
வரும் வாரங்களில் படிக்கலாம்.! தொடரும்…

-கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here