மகள்கள் தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

0
76

மகள்கள் தின கொண்டாடுவதின் நோக்கமும்,வரலாறும் …!

மகள்கள் தினம் என்றால் என்ன?

இதன் பெயரிலேயே தெளிவாகப் பதில் இருக்கிறது. மகள்களைக் கொண்டாடும் அற்புதமான நாள். பல்வேறு நாடுகள் வெவ்வேறு நாட்களில் மகள்கள் தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 27ல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்?

குழந்தைகள் என்றுமே கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது யாராக இருந்தாலும் சரி. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இருப்பினும் குறிப்பிட்ட நாளில் மகள்களைக் கொண்டாடுவது, அவர்களை மேலும் பெருமைப்படுத்தும் தருணம் என்றே கூறலாம். முன்னதாக பெற்றோர்களைக் கொண்டாட தாய் தினம், தந்தையர் தினம் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மகள்கள் தினத்தின் வரலாறு:

குழந்தைகளைக் கொண்டாடுவதற்கு காரணம் எதுவும் வேண்டுமா என்ன? இருப்பினும் பல்வேறு நாடுகளில் பெண் குழந்தைகள் ஒரு சுமையாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆண் குழந்தைகளுக்கு சமமான மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன. இதனைத் தேசிய அளவிலான நிகழ்வாக அறிவித்து கொண்டாடுகின்றனர். அரசு மற்றும் சட்டத்தின் முன்னிலையில் அனைத்து குடிமக்களும் சமம். இந்த மனப்பான்மை பொதுமக்களிடையே ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மகள்கள் தினத்தின் சிறப்புகள்:

இந்த நிகழ்வின் வெற்றியானது, காலம் எவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. மகள்களைக் கொண்டுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒட்டுமொத்த குடும்பமும் தங்கள் மகள்களுக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் அளித்து பெருமைப்படுத்துகின்றனர். இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அனைவரும் விடுமுறை நாளில் இருப்பர். இதனால் கொண்டாட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்து விடுகின்றது.

மகள்கள் தினக் கொண்டாட்டம்:

குடும்பத்தினர் மகள்கள் தினத்தைக் கொண்டாட ஏராளமான வழிகள் இருக்கின்றன. வாழ்த்து அட்டைகள், அன்புக் கடிதங்கள், குறுந்தகவல்கள், ஆச்சரியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். இதன் பிறகான கொண்டாட்டம் என்பது குடும்பத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. சிலர் பிரம்மாண்ட விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். மகள்களுடன் வெளியில் சென்று, விருந்திற்கு ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றனர்.

ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை வாரிசு என்பார்கள், அதே ஒரு பெண் குழந்தைப் பிறந்தால் மகாலட்சுமி என்பார்கள். ஒரு வீட்டை அன்பானதாகவும் அழகானதாகவும் மாற்றுபவர்கள் பெண் குழந்தைகள்.
எப்போதும் ஒரு மகனை விட மகளையே வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்ப்பார்கள். அதிலும், வீட்டில் மற்றவர்களை விட மகளை அதிகம் நேசிப்பவர் தந்தையே. ஏனென்றால், ஒரு தந்தை தனது மகளின் வழியே தன் தாயைப் பார்ப்பதால்தான், அந்த அளவு பாசம்.

திருமணத்திற்குப் பின், தன் பிறந்த வீட்டை விட்டு, புதிதாக ஒரு வீட்டிற்குச் சென்று, அதை தன் வீடாக மாற்றும் ஒரு மனப்பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் இடையே தன் அன்பால் பாலத்தை ஏற்படுத்துபவர் பெண்கள்.
அத்தகைய மகள்களின் அன்பை போற்ற வார்த்தைகள் பத்தாது. இன்று அத்தகைய மகள்களின் தினத்தை கொண்டாடுவோம்.

பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்..
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது..
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்.. உலகெங்கும் வாழும் மகள்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி வானொலி குழுமத்தின் மகள்கள் தின நல்வாழ்த்துக்கள்..! 

#HappyDaughtersDay #WorldDaughtersDay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here