இந்தியாவில் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள்

0
76

டாப் 10 விளையாட்டு வீராங்கனைகள்!

இன்றைய உலகில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. விளையாட்டை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முன்னிலை வகிக்கும் டாப் 10 வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு இது!

சானியா மிர்சா (26)

மகளிர் டென்னிஸில் இந்தியராலும் சாதிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துக் காட்டியவர். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. ஒற்றையர் பிரிவில் அவ்வளவாக எடுபடாவிட்டாலும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அலட்சியப்படுத்த முடியாத வீராங்கனை!

மேரி கோம் (30)

மணிப்பூர் மங்கை. குத்துச்சண்டையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றார். நல்ல ஃபார்மில் இருந்தபோது, ஒலிம்பிக்கில் பாக்சிங் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார். அடுத்த ஒலிம்பிக்கிலும் களமிறங்கி சாதிக்கும் உறுதியுடன் பயிற்சி செய்து வருகிறார்.

சாய்னா நெஹ்வால் (22)

பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தவர். உலக அளவில் 2வது ரேங்க் வரை முன்னேறியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இந்த வீராங்கனை நம்பர் 1 ஆகும் நாள் தூரமில்லை. சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, இந்தியாவில் கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் அதிகம் சம்பாதிப்பவர் என்ற பெருமைக்குரியவர்.

ஜுவாலா கட்டா (29)

மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில், ‘வலியவீட்டில் திஜு’வுடன் இணைந்து களமிறங்கி ஏராளமான வெற்றிகளைக் குவித்துள்ளார். டெல்லி காமன்வெல்த் போட்டியில் (2010) மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.   

மித்தாலி ராஜ் (30)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன். சிறந்த ஆல்ரவுண்டர். 2005 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற வைத்தவர். அந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆட்டமிழக்காமல் 91 ரன் விளாசி அசத்தியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தீபிகா குமாரி (18)

வில்வித்தையில் அசத்தி வரும் ராஞ்சி வீராங்கனை. டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்தவர். மிக இளம் வயதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து வரும் போட்டிகளில் அமர்க்களப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கிருஷ்ண பூனியா (35)

வட்டு எறிதலில் தேசிய சாம்பியன். டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தோஹா (2006), குவாங்ஸூ (2010) ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தவறினாலும் 7வது இடம் பிடித்ததே பெரிய சாதனை!

ரித்து ராணி (21)

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன். சாம்பியன்ஸ் சேலஞ்ச் கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர். ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் 2011ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரின் 2வது சுற்றில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி 3வது சுற்றுக்கு முன்னேற வைத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

கீதா போகத் (24)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையும் இவர்தான். அரியானாவைச் சேர்ந்த இவர் ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2003, 2004, 2005) தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த மாணவி.

தீபிகா பாலிகல் (21)

ஸ்குவாஷ் நட்சத்திரம். முன்னணி மாடல். உலக அளவில் ‘விஸ்பா’ தரவரிசை டாப் 10ல் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை. ஜூனியர் பிரிவில் ஜெர்மன் ஓபன், டட்ச் ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸி. ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் என்று சாம்பியன் பட்டங்களை அள்ளியவர். 2011ல் மட்டும் 3 விஸ்பா தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு மீடோவுட் பார்மசி ஓபன் தொடரில் சாம்பியன்.  

தமிழகம் டாப் 10

திருஷ்காமினி    கிரிக்கெட்

ஜோஷ்னா சின்னப்பா    ஸ்குவாஷ்

இளவழகி    கேரம்

எஸ்.கவிதா    கபடி

காயத்ரி    தடகளம்

ஜான்சி ராணி    தடகளம்

நிரஞ்சனா    கிரிக்கெட்

மிஷல் கேத்ரினா    செஸ்

அம்ரின் முபாரக்    பேட்மிண்டன்

வாசவி கணேசன்    டென்னிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here