ஆடிப்பெருக்கு

0
112

(2/8/2020)இன்று ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப்பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப்போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப்போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆடிப் பெருக்கு

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக்காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப்பெண்ணாக – தாயாகப் பாவித்து வணங்கிப்போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, “ஆடி பதினெட்டாம் விழா’ கொண்டாடப்படுகிறது.

முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத்தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன. காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

ஆடிபதினெட்டு கொண்டாட்டம்

ஆடி பதினெட்டிற்கு பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச்சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக்கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப்பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

காவிரிக்குச் சூல்

காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

சிறுமிகளும், கன்னியரும், சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி – தலை வாழையிலையில் – காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி – மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது – பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்

ஆடிப்பதினெட்டு அன்று – ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் – நம்பெருமாள் எழுந்தருளி – யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.
இனிய ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here