அசாமில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் அபாய கட்டத்திற்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
நேற்று மேலும் 4 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.
நாலாப்புறமும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், தங்குவதற்கு வீடுகளின்றி மக்கள் பரிதவித்து வருவது காண்போரை கண் கலங்கச் செய்கிறது.
இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
273 முகாம்கள் அமைக்கப்பட்டு 27,452 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தஞ்சம் புகுந்தோருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கொரோனா தொற்றை தடுப்பதற்காக முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.
மழை சேதத்தால் 83,000 ஹெக்டர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.