கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30.1957

0
151

நாடு விடுதலையையும் முன்பு கலைவாணரும் பாகவதரும் புகழேணியின் உச்சியில் இருந்த நேரம். இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிகை இருவரைப் பற்றியும் தவறான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் அந்தப் பத்திரிகையை வெளியிட்டுவந்த லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார்._
_என்.எஸ்.கே.மீதும் எம்.கே.டி.மீதும் கொலைப் பழி விழுந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைத்தண்டனை உறுதியான நிலையில் இலண்டனில் உள்ள ‘ப்ரி வியூ கவுன்சிலின்’ இறுதித் தீர்ப்புக்காக காத்திருந்தனர் ( அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றம் கிடையாது).

கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் அப்போது திருச்சியில் வசித்து வந்தார். அவருடைய தம்பியும் கவிஞர் வாலியும் நண்பர்கள். கலைவாணரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த டி.ஏ.மதுரம் அவர்கள், வாலிபரிடம் தன்னுடைய கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்.

வாலியும் சக்கரத்தாழ்வாரை முழுமனதுடன் நாற்பத்தெட்டு நாட்கள் பிரதட்சணம் செய்தால் உறுதியாக விடுதலையடைவார் என்று சொல்ல, மதுரமும் அவ்வாறே பயபக்தியுடன் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்.

பிரார்த்தனை பலித்து கலைவாணரும் சிறையிலிருந்து வெளி வருகிறார்.

இதெல்லாம் நடந்து முடிந்த பின்னர் சக்கரவர்த்தித் திருமகன் படப்பிடிப்பில் இருந்த கலைவாணரை நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் உதவியுடன் சந்திக்கிறார் வாலி.

இனி கவிஞர் வாலி:

‘கலைவாணரிடம்,என்னை
ஸ்ரீரங்கத்துக்காரன் என்றும், அவரது மைத்துனரின் நண்பன் என்று சொன்னதும் அடையாளம் தெரிந்துகொண்டு நலம் விசாரித்தார்.

திடீரென்று கோபி கலைவாணரிடம்,

“அண்ணே! வாலிக்கு ஒரு சந்தேகம்; இவ்வளவு இரக்கச் சித்தம் உள்ள நீங்க எப்படி ஒரு கொலையைச் செய்திருக்க முடியும்னு என்கிட்ட கேக்கறாரு”

என்றவுடன் கலைவாணர் சிரித்தார்.

“அந்தக் கொலையை நான் செய்யல! கொலை செய்யும் அளவுக்கு நான் கிராதகனா என்ன? பின்ன ஏன் சிறைவாசத்தை அனுபவிச்சேன்னு நீங்க கேக்கலாம்! ‘இந்த ஆளு இல்லாததையும் பொல்லாததையும் நம்மைப் பத்திப் பத்திரிகையில எழுதுறானே; இதை இப்படியே விடக்கூடாது!’ அப்படீன்னு வெறுமனே, எல்லாருக்கும் வருகிற மாதிரியான யதார்த்தமான கோபத்துல நெனச்சேன்! ஆனா, நான் நெனச்சதோட சரி; வேறு ஏதும் பண்ணல்லே!

நெனச்சேன் பாத்தியா? அந்த எண்ணத்துக்குத்தான், சில காலம் சிறைவாசம்!

தீயதைச் செய்யாட்டியும், அதை எண்ணினாலும் ஓரளவு தண்டனை உண்டு! அதுக்காகத்தான் பெரியவங்க ‘நல்லதையே நினைடா பாவி’ ங்கறாங்க!”

இப்படி ஒரு நீண்ட விரிவுரை நிகழ்த்தினார் கலைவாணர்!”

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய

‘நினைவு நாடாக்கள்’

நூலிலிருந்து.

மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here