மூங்கில் பூக்கள்..!

0
87

பூமியில் மிக வேகமாக வளரக் கூடிய தாவரம் மூங்கில். புல் வகையைச் சேர்ந்த தாவரங்களில் மிகப் பெரியது. ஒரு நாளைக்கு 10 செ.மீ. உயரம் வளரும். சில வகை மூங்கில்கள் ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் வரைகூட வளர்கின்றன. அதாவது 2 நிமிடங்களுக்கு 1 மி.மீ. வளர்கின்றன. மற்ற தாவரங்களைப் போல இல்லாமல், மூங்கில் வளர்வதைக் கண் முன்னே பார்க்க முடியும்.

பெரும்பாலான மூங்கில் வகைகள் 5 முதல் 8 ஆண்டுகளிலேயே முதிர்ச்சியடைந்து விடுகின்றன. மற்ற மரங்கள் வாரத்துக்கு ஓர் அங்குலமே வளர்கின்றன. ஓக் மரம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு தான் முதிர்ச்சியே அடைகிறது. ஆனால் மூங்கிலின் இந்த அசுர வளர்ச்சி, பூக்க ஆரம்பித்தவுடன் குறைந்து விடுகிறது. பூமியில் மெதுவாக வளரக் கூடிய தாவரங்களில் ஒன்றாக மாறி விடுகிறது!

மூங்கில்கள் உலகம் முழுவதும் ஒரே காலகட்டத்தில் பூக்கின்றன. பூமியின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எந்தப் பருவநிலை நிலவினாலும் இவை ஒரே காலத்தில் பூக்கின்றன. முன்னொரு காலத்தில் ஒரே தாவரத்திலிருந்து இவை உருவானதால், ஒரே குணாம்சத்தைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வட அமெரிக்காவில் ஒரு மூங்கில் பூக்கும் போது ஆசியாவிலும் மூங்கில் பூக்கிறது. இந்தத் தன்மை அவற்றின் மரபணுக்களில் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பூக்கும் காலங்களில் மரங்களுக்குள் இருக்கும் உயிர்க் கடிகாரம் ஒரே நேரத்தில் பூக்க வைக்கின்றன. 60 ஆண்டுகளிலிருந்து 130 ஆண்டுகளுக்குள் மூங்கில்கள் பூக்கின்றன.

மூங்கில்கள் அதிக அளவில் பூக்கும் போது அவற்றின் சந்ததிகள் பெருக்கப் படுகின்றன. விதைகள் காற்று, வெள்ளம், விலங்குகள், பறவைகள் மூலம் பல இடங்களுக்கும் பரவி விடுகின்றன. மூங்கில் பூக்கள் பூக்கும் போது அவற்றைச் சார்ந்திருக்கும் விலங்குகளின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. மூங்கில் அரிசியைச் சாப்பிடும் போது எலிகளைப் போன்ற கொறிக்கும் விலங்குளின் இனப்பெருக்கம் தூண்டப்படுவதால் ஏராளமான குட்டிகளை ஈனுகின்றன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்ப தோடு ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.

ஆயுள் முடியும் காலகட்டத்தில் தான் மூங்கில்கள் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்து விட்டு அவை இறந்து விடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும் போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்து விடுகிறது என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இன்னொரு கூற்றின் படி, தாய் மூங்கிலின் வேர்ப் பகுதியில் இருந்து புதிய நாற்றுகள் உருவாகின்றன. இவை அதிக அளவில் தண்ணீரையும் சத்துகளையும் உறிஞ்சிக் கொள்கின்றன. தாய் மரத்துக்குப் போதிய தண்ணீரோ, சத்தோ கிடைக்காமல் போய் விடுவதால் அது இறந்து விடுகிறது என்கிறார்கள்.

மிசோரம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, எப்போழுதெல்லாம் மூங்கில்கள் பூக்கின்றனவோ, அப்போழுதெல்லாம் தவறாமல் பஞ்சம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மூங்கில் அரிசியை மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதுவதால், மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது.

மூங்கிலில் சுமார் 1,200 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 156 மூங்கில் இனங்கள் பயிர் செய்யப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்றவை மூங்கில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இந்திய மூங்கில்களில் 40% மரக்கூழ் செய்வதற்கும் காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன் படுத்தப்படுகின்றன. இசைக் கருவி முதல் வீட்டுக்கு கூரை போடுவது வரை 1,500 விதங்களில் மனிதர்களுக்குப் மூங்கில்கள் பயன்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here