மகிழ்ச்சி என்றால் என்ன? அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன?

0
107

“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” — பெனோ செபீன்

“செல்வத்திலும் தோற்றத்திலும் உங்களை விடக் கீழே உள்ளவர்களைப் பாருங்கள் அதுவே இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையை எண்ணுவதற்கு ஏற்றதாகும் என்று அறிவுறுத்துகிறது நபி மொழி. இந்த நபி மொழி தெரிந்திராவிட்டால் கூட “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளைத் தெரியாதவர்களும் இருக்க மாட்டார்கள்.

பார்வைக் குறையுடைய மாணவி பெனோ செபீன் தனது குறையை ஒரு பொருட்டாகக் கருதி முடங்கிவிடாமல் முயன்று படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுகிறார். சிறிதும் தயங்காமல் தனது வெற்றிக்குக் காரணத்தை “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” என்ற அறிவுரையாக வேறு நமக்குத் தருகிறார்.

எந்தக் குறையுமின்றிப் பிறந்து எந்தக் கவலையும் தெரியாமல் பெற்றோர்கள் வளர்த்தாலும், ஒருதலையாகக் காதலித்துவிட்டு, பெண் தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டால் உடனே பெண் குலத்தையே தூற்ற வேண்டியது, காதல் தோல்வி என்று தாடி வைத்துக் கொண்டு டாஸ்மாக்கில் அடைக்கலம் தேட வேண்டியது, இல்லை உயிரை விட வேண்டியது என்ற முடிவுக்கு வரும் பிறருடன் பெனோ செபீனை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் என்ன ஒரு மடத்தனமான முடிவுகளை இவர்கள் எடுக்கிறார்கள் என்பதை.

மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அரச வாழ்வு வாழ்ந்த புத்தருக்கும் அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. அனைத்தையும் துறந்து விட்டுதான் வாழ்க்கையின் காரணம் அறிய விரும்பி ஞானத்தைத் தேடி அலைந்து, உடலை வருத்தித் தவம் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயன்றார்.

“When wealth is lost, nothing is lost; when health is lost, something is lost; when character is lost, all is lost” என்ற அறிவுரை சொல்வது பணம் தொலைந்தால் கூடப் பாதிப்பில்லை, உடல் நலம் கெட்டால் இழப்பு தோன்றும், அதைவிடக் குணம் கெட்டால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த நிலை என்று சொல்கிறது. இதனை மருத்துவ மனையில் நிரந்தர நோயாளியாக இருக்கும் பணம் படைத்த செல்வந்தரிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும், ஆமாம் உண்மைதான் என்று தயங்காது ஒப்புக் கொள்வார். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நாமும் பலகாலம் சொல்லி வருகிறோம். மாற்றுத் திறனாளியான பிள்ளைகள் பெற்றெடுத்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியுமா என்று அந்தப் பிள்ளையின் தாயிடம் கேட்டால் சொல்லுவார்.

ஆனால் உடல் குறைகளே இல்லாமல் பிறந்து, பெற்றோர் அன்பும் அரவணைப்பும் தந்து, வேளா வேளைக்கு அவர்கள் நமக்குப் பசியாற உணவும் தந்து நமது நல்வாழ்வே தங்கள் குறிக்கோள் என்று வாழும் பெற்றோர்களைக் கொண்டு வளர்க்கப்பட்டவர்கள் பலர் இவற்றால் வாழ்க்கையில் நிறைவான மனதுடனும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்று தேடினால் இல்லை என்றுதான் பதில் வரும். யாருடனாவது தன்னைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மனம் குமைந்து கொண்டிருப்பது நமது வழக்கம். காலம் காலமாக மகிழ்ச்சியைத் தேடித் தேடி அலைந்து ஏங்கிக் கொண்டிருப்போம். நிறைவான வாழ்க்கையை அடைவது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்போம், கோயிலுக்குப் போவோம், தெய்வத்திடம் முறையிடுவோம். எனக்கு மட்டும் ஏனிப்படி என்று மனம் சலித்துக் கொள்வோம். தன்னம்பிக்கையை இழப்போம். நிலையில்லா வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்கள் பேசுவோம், விதிவிட்ட வழி என்று இறுதியில் வெறுத்துப் போய் முடங்கியும் விடுவோம்.

எவ்வளவு முயன்றாலும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பது மட்டும் மனிதர்களுக்கு விளங்குவதில்லை. மகிழ்ச்சியைத் தேடி அலைபவர்களுக்குத் தத்துவ மேதைகள், மதப் போதகர்கள் என ஒவ்வொருவரும் மகிழ்ச்சிக்கு இதுவே வழி என்று தனது வழியில் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது எப்படி, இந்த நிரந்தர மகிழ்ச்சி நிலையை அடைவது பற்றி அறிவியல் உலகம் பதில் ஏதாவது சொல்கிறதா என்பதை இங்கு ஒரு மீள் பார்வை செய்வோம்.

முதலில் மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நான் இப்பொழுது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், மிக மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டே இருப்பது அல்ல. உதாரணமாக, ஒருவரிடம் “எப்பொழுது வாழ்க்கை வாழத் தகுந்ததாக இருக்கிறது?” என்று கேட்டால், பெரும்பாலும் வரும் பதில் “நான் நல்ல மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது” என்பதாக இருக்காது. மாறாக, ஓர்அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் முறையைப் பற்றி, தங்களது பணி, தங்களது உறவுகள் என்பன போன்றவற்றைப் பற்றித்தான் குறிப்பிடுவார்கள்.

எல்லாமும் எப்பொழுதும் தடையின்றிக் கிடைத்தாலும் அதனால் மகிழ்ச்சி கிடைத்துவிட்டதாக மனம் நினைக்காது. புத்தரைத் தவிர வேறு யாரையுமே இதற்குச் சான்று காட்டத் தேவையில்லை, அவர் ஓர் இளவரசன், அரச வாழ்க்கை, அருமையான குடும்பம், உலக வாழ்க்கைக்குத் தேவையான யாவுமே அவருடைய கைக்கெட்டும் தூரத்தில், தனது விரல் அசைவிலேயே தேவைகள் யாவும் நிறைவேறும் வாழ்க்கையை வாழ்ந்த அவருக்கும் மகிழ்ச்சி இல்லாமல்தான் இருந்திருக்கிறது. வறுமை இல்லாமல் இருக்கப் பணம் தேவையே. ஆனால், ஒரு வேளை உணவு, உடுக்க ஆடை, இருக்க ஓர் உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகள் யாவும் நிறைவேறிய பின்னர்; அதாவது வறுமை கோட்டிற்கும் மேல் வாழத் தேவையாக இருக்கும் செல்வத்திற்கு மேல் வேறெந்த அளவு பணமும் மகிழ்ச்சியை நிலையாகக் கொடுத்து விடுவதில்லை. அதிகப் பணம் என்றால் அதிக மகிழ்ச்சி என்ற சமன்பாடு வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒத்து வராத கணக்கு.

நல்ல நிரந்தரமான வேலை, அந்த வேலையில் தேவையான வருமானப் படி உயர்வு, தேர்வில் வெற்றி பெறுதல், புது வீடு வாங்குதல் , புதிய வாகனம் வாங்குதல் , புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி உடுத்துதல் ஆகியவற்றை முயன்று அடைந்தாலும் கொஞ்ச நாட்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சி நிலைக்கும். பிறகு முன்னிருந்த அதே மனநிலைக்கு மனம் சென்றுவிடும். கிடைத்தவை மகிழ்ச்சி அளித்துக் கொண்டே இருக்காது. மனம் அதற்குப் பழகிவிடும். உறவுகளுடனும் நண்பர்களுடனும் செலவழித்த இளமைக்கால நினைவுகளை மனம் அசைபோட்டு மகிழ்வடைவது போல அதே வகையில் புதிய ஆடை அணிகலன்களை வாங்கிய சில நாட்களுக்குப் பின்னர் மனம் அவற்றை நினைத்து நினைத்து மகிழாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனமகிழ்ச்சி என்பதற்கு இறுதி இலக்கு இல்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும் அடையமுடியாத ஓர் இலக்கு. இதோ அடைந்துவிட்டோம் என்று நினைத்த சிறிது நாட்களில் அது நிறைவு தராத நிலையை நமக்குக் கொடுத்துவிட, மேலும் மகிழ்ச்சியைத் தேடி நம் பயணம் தொடர ஆரம்பிக்கும். கானல் நீர் போன்ற மகிழ்சியைத் தேடித் தேடி மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நமது முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அப்படியானால் இந்த மகிழ்ச்சியை அடைவதுதான் எப்படி? இதைப் பற்றி அறிவியல் ஆராய்ச்சி கூறுவது என்ன? தினசரி வாழ்க்கையில் நாம் நல்ல மனநிலையில் இருப்பதும், அத்துடன் எந்த அளவு மன நிறைவுடன் இருக்கிறோம் என்ற இவ்விரு நிலைகளின் ஒரு கலவையே மகிழ்ச்சி என்கிறது அறிவியல் ஆய்வுகள். “ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகக் கொண்டிருக்கும் நிறைவான மனநிலையும், அமைதியான மனமும் பெரும்பாலும் மாறாத வகையில் நிலைத்த மகிழ்ச்சியைத் தர வல்லது” என்கிறார்,பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தற்பொழுது ஹிரம் கல்லூரியில் உளவியல் பேராசிரியராகப் பணிபுரியும் ‘அக்கேசியா பார்க்ஸ்’ (Acacia Parks). இவரது ஆய்வு மனவியல் முறையில் நேர்மறை எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் கற்பித்தலும், அறிவியல் அடிப்படையில் மகிழ்ச்சி பெறுவதைப் பற்றி விளக்கும் ஆய்வாகும். மகிழ்ச்சி நிலைக்க நிறைவான மனம், எந்த வித மாறுதலாலும் பாதிப்படையாத மனம் என இந்த இருவகையான எண்ணங்களும் இணைந்தே இருக்க வேண்டும். வாழ்க்கை நிலை மாறலாம், உணர்வுகளும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையும், எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும்.

தொடர் பயிற்சியால், விடா முயற்சியால், நாம் மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள இயலும். இது சிலருக்கு மரபணு வழியாகவும் கிடைப்பதாகும். தேவையான பயிற்சியாலும் மாறாத மகிழ்ச்சி நிலையை நாம் அடையாளம். இதனை நம் உடல் எடையைப் பராமரிப்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதாக விளங்கும். தேவையான அளவிற்கு உணவு உண்டு, தேவையான அளவிற்கு உடற்பயிற்சி செய்து உடலின் எடையைச் சரியாகப் பராமரிப்பது போலவேதான் இந்த மனப்பயிற்சி முறையும். உணவைக் குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கினால் உடல் எடை அதற்கேற்றாற்போல மாறுதல் அடையும். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் நமக்குத் தேவையான அளவில் உடல் எடையை மாறாமல் பராமரிக்கலாம். இதை விட்டு பழைய வாழ்க்கை முறைக்கு, முந்தைய உணவின் அளவு, உடற்பயிற்சியின் அளவு ஆகியவற்றிற்குத் திரும்பினால் உடல் எடையும் பழைய நிலைக்கே சென்றுவிடும். நாம் அடைய விரும்பும் மகிழ்ச்சி கொண்ட மனதை பராமரிப்பதும் அவ்வாறே.

சுருங்கச் சொன்னால் மனதை நிலைநிறுத்தும் தக்க பயிற்சியின் மூலமாக, இதுவரை நாம் பெற இயலாது என்று எண்ணிவரும் மகிழ்ச்சியையும் நிறைந்த மனதையும் பெற இயலும் என்கிறார் அக்கேசியா பார்க்ஸ். எனவே, தினசரி வாழ்க்கையில் சரியான தொடர் பயிற்சி மூலமும், விடாமுயற்சியுடன் அவற்றை வாழ்க்கையில் ஒரு பகுதியாகப் பழக்கமாக்கிக் கொள்வதும் மகிழ்ச்சி நிறைந்த மனதை அடைய வழியாக உள்ளது என்பது தெரிகிறது.

அதாவது மனத்தைக் கட்டுபடுத்தும் திறன் நம் கையில், சரியான பயிற்சி மூலம் நிறைவான வாழ்வையும் நிலையான மகிழ்ச்சியையும் நாம் அடையலாம் என்பது அறிவியல் கூறும் முடிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here