‘அங்கே அவர் பெண்குழந்தை சகுந்தலை இருந்தார். அக்குழந்தை பாரதியார் மேலிருப்பதாகக் கூறிவிட்டு,
“அப்பா! யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்”
என்று கூவினார்.
“யாராயிருந்தாலும் வரலாமென்று சொல்!”
என்று ஒரு பிரதியுத்ரம் மேலிருந்து வந்தது.
அந்தக் குரலிலே ஒருவித விவரிக்கவொண்ணாத மேன்மையான ஒளியிருந்தது. சக்கிரவர்த்தி ஒருவன் எவ்வளவு சுவாதீனத்துடன் எவ்விதம் ஏதாவது கட்டளையிடுவானோ, அவ்வித சுவாதந்தர்யம் அதிலே தோன்றிற்று.
ஒவ்வொரு பதமும் பூரணமாக, விழுங்கப் படாமல் கம்பீரத்துடன் உச்சரிக்கப்பட்டது. வெங்கலத் தொனி போன்ற சுத்த நாதம். அதிலே ஈசன் கருணை– அன்பு ஊற்று கலந்திருந்தது…”
ஆர். வாசுதேவசர்மா
1918 ஏப்ரல்
11.12.2020 அந்த மகாகவியின் அவதாரத் திருநாள்
தன்னுடைய ஆசான் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்து அவருடைய சீடர் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் பாடிய நெடிய கவிதைகளில் இருந்து சில வரிகளை மட்டுமே இங்கே தந்திருக்கிறேன்.
இதுவரை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் பாவேந்தரின் இந்த கவிதை வரிகள் அந்த மகாகவியைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். வேளை வாய்க்கும் போது நிதானமாக வாசித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்– குறிப்பாக இளந்தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும்!
நன்றி.
‘மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்…’
பாவேந்தர் பாரதிதாசன்
( புதுநெறி காட்டிய புலவன்1946)
‘தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த
தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!
ஞானரதம் போலொரு நூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை, கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலிசபதம் போலே
தேனினிப்பில் தருபவர் யார்!…
(மகாகவி)
‘தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடைக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் , அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்!….’
(புதுநெறி காட்டிய புலவன்)
வணங்கி நிற்போம்
மகாகவியின் அவதாரத் திருநாளன்று.
-மா.பாரதிமுத்துநாயகம்