பூனா ஒப்பந்தம் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24.

0
272

பூனா ஒப்பந்தம்.. துரோகத்தின் பக்கம்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் தலித் மக்களின் வரலாற்றின் மறக்க முடியாத நாள். இது பூனா ஒப்பந்த நாள் என்று அழைக்கப்படுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரின் விடாப்பிடியான போரினால் இரண்டாம் வட்ட மேசை மாநாடு இந்திய பூர்வ குடி மக்களான தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் அதிகாரம் மற்றும் அங்கீகாரத்தை உறுதி செய்யப்பட்டது. இதனால் தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டன. சாதி இந்துக்களின் சார்பின்றி தலித் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் இந்த முறை இந்து சமூகத்தில் பிளவை உண்டாக்கும் என்றும், எனவே அந்த அரசியல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் செப்டம்பர் 20ஆம் நாள் பூனேவில் உள்ள எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் காந்தி.

‘தீண்டத்தகாத மக்கள் பசுவைப் போன்றவர்கள், அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்னும் ஆசையை காட்டுவது பாவம்’ என்று காந்தி அப்போது விளக்கம் அளித்தார். உப்பு கலந்த வெந்நீரை அருந்தியபடி தமது உண்ணாவிரத்தை காந்தி தொடர்ந்தார். அவர் களைப்படையக்கூடாது என்று சிறைக்குள் ராம பஜனை பாடல்களை வெளியில் இருந்து வந்த தொண்டர்கள் பாடியபடி இருந்தனர். தாகூர் வந்து கவிதை படித்தார். தலைவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

வெளியில் தீண்டாதகாத மக்களின் மீது கடுமையாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கின. தலித் மக்களின் மரண ஓலங்கள் சாதி இந்துக்களின் மனத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை. காந்தியின் உயிரைக் காக்க அவர்கள் தமது அரசியல் உரிமையினை விட்டுத்தர வேண்டும் என கடுமையாக நிர்பந்திக்கப்பட்டனர்

இந்த சுமை எல்லாம் அம்பேத்கரின் மீது விழுந்தது. ‘காந்தியின் உயிரைவிட எனது மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியம்’ என பாபாசாகேப் அம்பேத்கர் அறிவித்தார். பதட்டம் அதிகமானது. உண்ணாவிரதம் தொடங்கி இரண்டு நாள்களுக்குள் எங்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. காந்தியின் உயிரைக் காக்க இந்துக்கள் நடத்திய தாக்குதல்களை சாதி இந்துக்களின் ஊடகங்கள் அப்பட்டமாக மறைத்தன. பாபாசாகேப் அம்பேத்கரை பணிய வைக்க அவர்களுக்குத் தெரிந்த வழி அது ஒன்றுதான்.

எரவாடா சிறையில் காந்தியை சந்தித்த பாபாசாகேப் அம்பேத்கர் மகாத்மா உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் இல்லையா என்று தமது பேச்சைத் தொடங்கினார். எனது உயிர் அல்லது ஒப்பந்தம் எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என தமது பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டார் காந்தி.

உலகத்தில் யாருக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று மனக்குமுறலோடு பாபாசாகேப் அம்பேத்கர் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று நாள்களுக்குள் பாபாசாகேப் அம்பேத்கர் அடுத்த நிலைபாட்டிற்கு மாற வேண்டிய நிர்பந்தம்.. காந்தியின் உயிரா அல்லது தீண்டத்தகாத மக்களின் உயிரா என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான் பூனா ஒப்பந்தம்.

ஆனால் வெட்கமே இல்லாமல் காந்தியின் உயிரைக்காக்க பூனா ஒப்பந்தத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் கையொப்பம் இட்டார் என்று வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்கள். உண்மையில் தலித் மக்களின் உயிரைக் காக்கவே அவர் கையொப்பம் இட்டார் என்று எழுதினால் இந்துக்கள் நடத்திய கொலை வெறியாட்டங்களை அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். காந்தியின் நான்கு நாள் உண்ணவிரதப் போராட்டம் நாடகம் 1932 செப்டம்பர் 20ல் தொடங்கி 24ல் முடிந்தது. வெறும் நான்கு நாள் முடிவில் உருவானதுதான் பூனா ஒப்பந்தம். இன்று பூனா ஒப்பந்தத்தின் 88வது நினைவு ஆண்டு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here