நான் ரசித்தகவிஞர்கள் ஆண்ட்ரோ மார்வல்.

0
30
by Unknown artist,painting,circa 1655-1660

நான் ரசித்தகவிஞர்கள் ( ஆண்ட்ரோ மார்வல் 1621-1678
ஆங்கிலக் கவிஞர் ) புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் மெட்டாபிசிக்கல் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகிற பௌதீகம் கடந்த பாடுபொருள்களைப் பாடும் கவிஞர்களின் வரிசையில் ஜான் டன் என்ற கவிஞருக்கு முதன்மையானவர் .இன்று நினைத்தாலும் இவர் எடுத்தாண்ட படிமங்கள் உருவகங்கள் முற்றிலும் புதிய இணைப்புச் சொற்கள் சொற்றொடர்கள் கற்பனைகள் யாவும் படிக்கும் வாசகர்க்கு பிரமாண்டத்தை அளிப்பவை. இவர் ஆரம்பத்தில் காதல் இயற்கை என்று ஆரம்பித்து அருமையான பக்திக்கவிதைகளை எழுதியவர். எத்தனை
நூற்றாண்டுகள் ஆனாலும் வாசிக்கும் வாசக நெஞ்சங்களை புத்தம் புது உணர்வால் நிறைத்து புத்துணர்ச்சியூட்டக்கூடிய வரிகளுக்கு சொந்தக்காரர். மெட்டா பிசிகல் கவிஞர்கள் என்று பின்னால் அறியப்படுகிற பல கவிஞர்களின் முன்னோடி இவர்.
இவர் எழுதிய TO HIS COY MISTRESS ( நாணம் கொண்ட என் காதலி ) என்ற கவிதை ஆங்கில இலக்கியத்தில் மிகப் புகழ் பெற்றது ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக என் நெஞ்சில் அவ்வப்போது இந்த வரிகள் உருண்டோடிக்கொண்டேயிருந்திருக்கின்றன, முழுமையாக மொழி பெயர்த்து விட முடியுமா என்று தெரியவில்லை இருந்தாலும் முயற்சித்திருக்கிறேன்

TO HIS COY MISTRESS ( நாணம் கொண்ட என் காதலி )

எல்லையற்ற உலகமும் முடிவற்ற காலமும்
ஒரு வேளை நமக்கு வாய்த்திருந்தால்
உன் நீளமான மௌனம் ஒன்றும் குற்றமேயில்லை
நாம் ஒன்றாக அமர்ந்து
எவ்வழி நடந்து செல்வது என்று
தீர ஆலோசிக்கலாம் பின்பு
இந்த இனிய பொழுதை
நேசத்தால் நகர்த்திச் செல்லலாம்
நீ கங்கை நதிக்கரையில் காலாற நடந்து
மாணிக்கங்களை தேடிக்கொண்டிருப்பாய்
நான் ஹம்பர் நதியின் அலையில் நனைந்தபடி
உன்னை செல்லமாய் கடிந்து கொண்டிருப்பேன்
ஆதிவெள்ளம் தோன்றுவதற்கும்
ஒரு மாமாங்கத்திற்கும் முன்பிருந்தே
உன்னை காதலிக்கத் தொடங்கியிருந்திருப்பேன்
நீயும் உன் விருப்பப்படி கடைசி யூதன்
மதம் மாறும் வரையிலும்

என்னை மறுத்துக்கொண்டிருந்திருப்பாய்
என்னுடைய பசுந்தளிர் காதல்
மெதுவாக மிகமெதுவாக வளர்ந்து
இந்த பூமியெங்கும் படர்ந்து
இவ்வுலகின் பெரும்சாம்ராஜ்யங்களை விட
பரந்து விரிந்திருக்கும்
விழிகளிலிருந்து முதலில் தொடங்குவேன்
ஒரு நூற்றாண்டுகள் உன் கண்களை வியந்து துதிப்பேன்
பின்பு நெற்றியில் ஒரு சிறிய நிறுத்தம் உற்று நோக்க
இருநூறாண்டுகள் இரண்டு மார்புகளை வர்ணிக்க
மொத்தமாக முடித்து வைப்பதற்கு
முப்பதாயிரம் ஆண்டுகள் வேண்டும்
ஒவ்வொரு அங்கத்திற்கும் குறைந்தது
ஒரு நூறாண்டு போதுமா ?
ஆனால் முடிவில் முற்றுப்பெறுவது
உன் இதயத்தில் தான் தெரியுமா?
என் அன்பே நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வர்ணிக்க தகுதியானதுதான் உன் தனித்துவ அழகு
என் காதலோ காலங்கள் தாண்டியும்
வளர்ந்து கொண்டிருக்க தகுதியானது
முடிவற்ற விளிம்பில்

ஆனால் என் அன்பே
என் முதுகின் பின்புறம் எப்பொழுதும் நான்
சிறகுகள்முளைத்த காலத்தேர் உருண்டோடிவரும்
சப்தத்தை கேட்டவண்ணமேயிருக்கிறேன்
அதற்கும் மேலே
வசந்தத்தையும் பாலையாக்கும் மரணவெளி
விரிந்துகொண்டே செல்கிறது
ஒரு நாளில் உன் பேரழகு காணாமல் போய்விடக்கூடும்
உன்னுடைய பளிங்கு பதித்த மாடத்தில்
என் பாடல் எதிரொலிக்காமல் போய்விடக்கூடும்
காலம் காலமாக காப்பாற்றி வரும்

உன் பரிசுத்தமான பெண்மையை
ஒரு நாள் கரையான் அரித்துவிடவும்கூடும்
தன்னிகரற்ற பெண்மையின் மேன்மை
அப்போது மண்ணுக்குள் புதையுண்டு போகும்
அந்நாளில் தான் என்னுடைய ஆசையெல்லாம்
வெறும் சாம்பலாகிவிடும்
கல்லறை என்பது அழகான தனிமையான இடம்தான்
ஆனால் காதலர்கள் யாரும் அங்கே தழுவிக்கொள்வதில்லையே?

காலைப்பனித்துளியின் சாயலில் இளமை
உன் உடலில் அமர்ந்திருக்கும் போதே
தாகம் கொண்ட உன் ஆன்மா தகிக்கும் நெருப்பாக
உன் அங்கங்கள் எங்கும் கசியும் போதே
இரை உண்ணும் இச்சை கொண்ட இரு பறவைகள் போல
நாம் இணைந்திடுவோம்
மிக மெதுவாக அல்ல விரைந்து வருகிறது காலம்
அதன் ஆற்றலெல்லாம் திரட்டி
அதன் இரும்புக்கரம் கொண்டு
நம் இன்பங்களை கிழித்து விடும் முன்பு
நம் வாழ்க்கையின் கதவுகளை மூடிவிடும் முன்பு
நாம் வலிமையெல்லாம் ஒருங்கிணைத்து
இனிமையான ஒரு பந்து போல உயருவோம்
நாம் இந்த சூரியனை நிறுத்திவிட முடியவில்லை என்றாலும்
இயங்க வைக்கலாம் தானே

 – தங்கேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here