தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் ஆகிய நான்…..

0
101

காவல் துறை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பதிவு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகள் கீழே உங்களுக்காக….

//மருத்துவமனைவரவேற்பு அறையில் காத்திருப்பின் போதும்.. வங்கிகளில் காத்திருக்கும்போதும்…சில பயிற்சி வகுப்புகளின் போதும் அம்பேத்கார் ..அம்பேத்கார் …என்று என் பெயரை கூப்பிடும்போது அந்த அறைகளில் அமர்ந்திருப்பவர்களின் கவனமெல்லாம் என்மேல் அவர்களின் ரியாக்‌ஷன் இருக்கே .. அப்போது…….எனக்கு ஏற்படும் சங்கடத்தை அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை………

இதில் சீருடையில் இருந்தால் கேட்கவே வேண்டாம் அம்பேத்கார் என்ற பெயரை பார்த்தவுடன் ….பார்ப்பவர்களில் எத்தனைப்பேர் மறுமுறை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்…………
எத்தனையோமுறை இப்பெயருக்கான அதிர்வுகளை சந்தித்துஇருக்கிறேன்..

காமராஜ். நேரு, காந்தி.அண்ணாதுரை, என்று பெயரை வைத்திருக்கும் யாரையும் நம் சமூகத்தில்அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று பார்ப்பத்திலை.

ஆனால் அம்பேத்கார் என்ற பெயரை ஒரு சாதியதலைவரின் பெயராகவும் அந்தவகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பெயராகவும் பார்ப்பதின் அர்த்தம் 36வருடங்களாக எனக்குப் புலப்படவில்லை.

என்ன காரணத்திற்காக எனது தந்தை இப்பெயரை எனக்கு வைத்தார் என்று தெரியவில்லை…..காரணம் கூற அவரும் தயாரில்லை. கேட்க எனக்கும் மனமில்லை…….//

தனக்கு தன் தந்தை ஆசை ஆசையாக வைத்த அம்பேத்கர் என்ற பெயர் தன்னை பொது சமூகத்தில் எப்படியெல்லாம் பார்க்க வைக்கப்படுகிறது என்ற வலி நிறைந்த எதார்த்தத்தை அந்த பதிவில் எழுதியிருந்தார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். உண்மையில் அது ஒரு மிகச்சிறந்த விவாதத்திற்குரிய அரசியல்பதிவு.

புகழ் பெற்ற வேறு எந்த தலைவர்களின் பெயரும் பொது சமூகத்தில் இவ்வளவு இழிவாக பார்க்கப்பட்டதில்லை.. அம்பேத்கர் என்ற ஒற்றைப் பெயரை தவிர.

உலக வரலாற்றில் வாழ்ந்த மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர், பல பட்டங்கள் பெற்றவர், இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் உரிமைக்காகவும் சட்டமியற்றியவர், மகாத்மாக்களும் எதிர்கொள்ள முடியாத அறிவும் வாதத்திறமையும் கொண்டவர்.. இன்று அதிகாரத்தை ருசிக்கும், என்.ஆர்.ஐ.க்களாக உலா வரும் பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர்.. இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம்.

ஆனால் அந்த நன்றிகள் எதுமின்றி அம்பேத்கரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இழிவு படுத்தியும் கூண்டில் அடைத்தும் வைத்திருக்கிறது இந்திய சாதி சூழ் சமூகம்.

இன்று கிராஃப் வெட்டிக் கொண்டும், ஜீன்ஸ் பேண்டும் லெக்கிங்கிஸும் போட்டுக்கொண்டு முத்தப்போராட்டம் நடத்தும் எத்தனை ஐ.ஐ.டி. சீமாட்டிகளுக்கு தெரியும், மதத்தின் பிடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த தங்களின் உரிமைக்காகவும் போராடியவர் அம்பேத்கர் என்பது..

அதுக்கூட பரவாயில்லை.. உலக வரலாற்றில் போற்றப்படும் அம்பேத்கருக்கு சரிசமமாக நம்மூரைச் சேர்ந்த ஒரு லோக்கல் சாதிச் சங்க ரவுடிகளை நிறுத்தி அழகுப்பார்க்கிறது இந்த நன்றி கெட்ட சமூகம்.

இதில் கொடூரமான நகைச்சுவை என்னவென்றால் தீண்டதகாததாகப் பார்க்கப்படும் அம்பேத்கர் என்பது அவரின் இயற்பெயரல்ல. சாதி தீண்டாமை தாண்டவமாடிய காலத்திலேயே சாதியை கடந்து சிந்தித்த, தன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பிராமண சமூகத்தைச் சேர்ந்த தன் ஆசிரியரான அம்பேத்கருக்கு நன்றி செலுத்தவே `பீமராவ் ராம்ஜி’ என்ற இயற்பெயர் கொண்ட சட்டமேதை அம்பேத்கரானார்.

இந்த கொடூரமான சாதிவெறி பிடித்த சமூகம் பீம்ராவ் வைத்துக் கொண்ட பெயர் என்பதாலயே அந்த பிராமண ஆசிரியரின் பெயரை தான் இன்று தீண்டதகாததாக மாற்றிவிட்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல சாதிய இழிவு நீங்க இந்து மதத்தை காறி துப்பிவிட்டு வெளியேப்போன அம்பேத்கர் புத்தம் தழுவியதால் அந்த மதமும் இன்று தீண்ட தகாதவர்களின் மதமாகிப்போனது.

அண்ணாதுரை, காமராஜர், பாரதி, நேரு, காந்தி, இந்திரா காந்தி பெயர்கள் எல்லாம் சேரிக்குள் உலா வந்தாலும் அம்பேத்கர் என்ற பெயர் மட்டும் சேரியை கடந்து ஊருக்குள் வரவே இல்லையே ஏன்..?

அம்பேத்கர் என்ற பெயரை வைத்திருப்பவர்கள், அம்பேத்கர் குறித்து பேசுபவர்கள் எழுதுபவர்கள் எல்லாம் தலித்துகள் என்று நினைக்கும் பொது சமூக உளவியலை உடைக்கும் வகையில் பரவலாக எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கர் பெயரை சூட்டிக் கொள்ளும் சகஜமான செயலை நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டிய கடமை சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டிய பெரியருக்கும் அவர் பின் திரண்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் ஸ்டாலின், மார்க்ஸ் என்றெல்லாம் ஆரம்பித்து உலக தலைவர்கள் பெயரை வைத்துக் கொள்ள முடிந்த திராவிடப் போராளிகளுக்கு அம்பேத்கர் பெயர் மட்டும் தீண்டதகாததாக மாறிப்போனது ஏன்.

அப்படி உண்மையான சாதி ஒழிப்பு அரசியலை இந்த திராவிடப் போராளிகள் பேசியிருந்தால் எந்த தொகுதியில் எந்த சாதிக்காரன் அதிகம் என்று பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் அவலம் வந்திருக்காது.

இந்த இடத்தில் தான் நான் இன்ஸ்பெக்டர் அம்பேத்கரின் தந்தை கதிர்வேலு அவர்களை மிகவும் பெருமையுடனும், அவரை மிகச் சிறந்த சாதி ஒழிப்பு போராளியாகவும் பார்க்கிறேன். தான் கொண்ட கொள்கையை உண்மையாக ஏற்றுக் கொண்ட கதிர்வேலு அவர்கள் தன் பெயருக்குப் பின் இருந்த சாதிப் பெயரை முதல்வேலையாக ஹெசட்டில் மாற்றிக் கொண்டார். அடுத்ததாக ஏற்கனவே `ப்ரணிதரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுவிட்ட தன் மகனை ஒரு நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து செல்கிறார்.

பெயர் என்ன என்று கேட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் “அம்பேத்கர்’னு சொல்லுடா..” என்று கம்பீரமாக சொல்லச் சொல்லி சேர்க்கப்பட்டவர்தான் இந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்.

கதிர்வேலு அவர்கள் பிறப்பால் தலித் இல்லை என்றாலும் அம்பேத்கர் என்ற பெயரை வைத்திருப்பவர்கள் எல்லாம் தலித்துகள் என்ற பொது சாதி உளவியலை தன் மகனுக்கு அம்பேத்கர் என்ற பெயரை வைத்ததன் மூலம் உடைத்தெறிந்திருக்கிறார்.

இதுதான் உண்மையில் சாதி ஒழிப்பு பேசக்கூடிய ஒருவர் செய்திருக்க வேண்டிய முக்கியமான அரசியல் பணி. அதை கதிர்வேலு அவர்கள் செய்தார். ஆனால் அன்று பெரியார் தொண்டர்கள் பலர் தந்திரமாக செய்ய மறந்துவிட்டார்கள்.

இன்றும் அம்பேத்கர் என பெயர் வைத்துக் கொண்ட தலித் அல்லாத இன்ஸ்பெக்டர் அம்பேத்கரை போல் வேறு சமூகத்த்தைச் சேர்ந்த அம்பேத்கர் யாரேனும் இருப்பார்களா என்பது சந்தேகமே.

சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கு தேவையானவர்கள் கதிர்வேலு போன்றவர்கள் தானே தவிர, பெரியார் கைப் பிடித்து வளர்ந்தோம்.. ஓடினோம் என்று உலா வரும் சவுண்டு சந்தானங்கள் அல்ல.

வர்ணாஸ்ரம சமூகத்திற்கு மற்ற எந்த தலைவர்களின் பெயரை காட்டிலும் அம்பேத்கர் என்ற பெயர் மீது மட்டும் ஏன் இத்தனை வன்மம்.. எரிச்சல் வருகிறது..?

ஏனெனில் அம்பேத்கர் என்பது வெறும் பெயரல்ல..

அது சனாதனத்தை எரித்த (யாரும் தொடமுடியாத-UnTouch) சனநாயக நெருப்பு…!

அது விடுதலையின் குறியீடு..!

பகிரபட்ட பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here