அந்திச் சூரியனின் சிகப்பு
வெட்கத்தின் வண்ணமாக
நினைவுகள்
காத்தாட வந்து போகும்
தனிமையில்
சிரித்துத் தொலைக்கிறேன்
வீட்டுத் திண்ணையில் பறவையொன்று
தன் இணையின்
உதிர் இறகோடு
பேசும் காதல் மொழி
காற்றில் தவழ்ந்து
கலக்கிறது என்னோடு
நானெந்தென்
புறங்கையின்
பச்சை நரம்புகளில்
பதிந்து கிடக்கும்
உந்தன் பெருவிரல் ரேகைகளுக்கு
பெயர் வைத்து பறக்கிறேன்.
-கனகா பாலன்.
ஆடிஓடி பாடுபட்டு கோடிகோடியாகச்
சேர்த்த பிறகும் பதவிக்காலம்
வசூல் நேரம் முடிந்த பிறகும்
ஐந்தாண்டுகள் முடிந்த பிறகும்
ஓய்வு எடுக்க மனமில்லை!
அரசியல் ஆசை விடவில்லை!
அறுபது ஆண்டுகளான பிறகும்
அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு
கணக்கு முடிக்கப் பணமில்லை!
அரசாங்க கஜானாவில்!
கணக்கு முடிக்கப் பணமில்லை!
நாள் முழுவதும்...
நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி
தும்பை பூ வேட்டி சட்டை சகிதம்
வளைந்து குனிந்து குறுகி
வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர்
புளகாங்கிதத்தில் அவரின்
சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன
வாழ்க கோஷத்தோடு
மகிழ்ச்சியாக விடைபெறுகிறது
அவர் வாகனம்
அது விட்டுச்சென்ற சக்கரத்தின் தடங்கள் மட்டும்
நீங்காத வடுவாக...