சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் மகள் திருமணம்?

0
69

 

சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் மகள் திருமணம்? உறவினர்கள் தகவல் உற்சாகத்தில் அமமுகவினர்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.

இரண்டு குடும்பத்தாரின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி புதுச்சேரியில் மிக எளிய முறையில் நடைபெற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து சசிகலா வந்த பிறகு இந்த திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். சசிகலா விடுதலை ஆக முன்பின் தாமதமானாலும் அவரது தலைமையிலேயே இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்ற பெண் வீட்டாரின் கோரிக்கையை, மணமகன் வீட்டார் ஏற்றுக் கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசியலில் மீண்டும் சசிகலா திரும்புவதற்கு இந்த திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும், இந்த திருமணத்தில் தற்போதுள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கட்சியினருடன் ஆலோசனை, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என இயங்கி வந்த டிடிவி தினகரன், கரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியே வராமல் இருந்த நிலையில் தற்போது அவரது குடும்ப நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் உற்சாகத்தில் உள்ளனர் அமமுகவினர்.

மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் கடந்த 1991–96ல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். துளசி அய்யா வாண்டையார் மகன் து. கிருஷ்ணசாமி வாண்டையார் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ராமநாதன் துளசி அய்யா வாண்டையார் என்ற மகனும், பத்ம பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here