கர்ப்ப கால கட்டு கதையும், அதன் உண்மையும்…

0
66

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது இதை செய்யாதே அதை செய்யாதே , இப்படி உட்காராதே, படுக்காதே என்று பலவற்றை  பெரியோர்கள் கூறுவர். ஆனால் அவற்றில் எதையெல்லாம் நம்புவது, எதையெல்லாம் நம்பகூடாது என்பது பெண்களுக்கு எப்பொழுதும் குழப்பமான ஒன்று. 
கர்ப்ப காலத்தில் பல்வேறு விதமான கட்டுக்கதைகள் உலா வரும். அந்த கருத்துகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அந்த வகையில் முக்கியமான கட்டுகதைகளையும், அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம்.

 1. கர்ப்பிணியின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை இது உண்மையா?
  இதன் உண்மை தன்மை என்னவென்றால் பெண்ணின் தசை அளவு, வயிற்றின் அமைப்பு, வயிற்றில் உள்ள கருவின் நிலை, இவற்றை பொறுத்தே வயிறானது பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்குமோ தவிர, ஆண் அல்லது பெண் குழந்தையைப் பொறுத்து இல்லை.
 2. மோதிரத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளலாம்
  கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அந்தரத்தில் அது நகரும் திசையை வைத்து குழந்தை ஆணா இல்லை பெண்ணா என சொல்லுவார்கள். அந்த மோதிரமானது வட்ட வடிவாக சுழன்றால் அது பையன் என்றும், குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்தால் பெண் என்றும் கூறுவர். இதுவும் உண்மையல்ல, இது விளையாட்டுக்காக சொல்லப்பட்டது.
 3. அம்மாவிற்கு சுகபிரசவம் நடைந்திருந்தால் உங்களுக்கும் சுகபிரசவம் ஆகும். இதுவும் உண்மையல்ல, உங்களுக்கு சுகபிரசவம் நடப்பதற்க்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம் ஆகும்.
 4. மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். இது உண்மை. கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால், கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ரத்த அழுத்தமானது இறங்கும். அதனால் மயக்கம் வரும். எனவே இடது பக்கமாக படுப்பதே கர்ப்பிணி பெண்ணுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லதாகும்.
 5. கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். இதுவும் உண்மையல்ல, கார்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உடலுறவை தவிர்க்கலாம். அதே போல பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு உடலுறவை தவிர்க்கலாம். ஆனால் மற்ற நேரங்களில் உடலுறவை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
 6. முதல் குழந்தையானது எப்போதும் தாமதமாகவே பிறக்கும். இதுவும் உண்மையல்ல, குழந்தை பிறக்கும் தேதியை யாராலும் துல்லியமாக கணக்கிட இயலாது. குறிக்கப்பட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்போ அல்லது ஒரு வாரம் பின்போ கூட குழந்தை பிறக்கலாம்.
 7. கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் சூடாக குளிக்க கூடாது. இது உண்மை, பிரசவ காலத்தில் உங்களின் உடல் வெப்பநிலையானது  102 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது.
 8. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும். இது உண்மையல்ல, குழந்தையின் நிறத்திற்கும் குங்குமபூவிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குங்குமபூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்காது. குழந்தையின் நிறத்திற்கு காரணம் தாய் மற்றும் தந்தை மூலமாக வரும் மரபணுக்களே.
 9. ஆண் குழந்தை என்றால் சீக்கிரம் பிறந்துவிடும். இது உண்மையல்ல, பிரசவத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரு குழந்தைகளும் ஒரே மாதிரியான பிரசவ நாட்களையே கொண்டிருக்கும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.
 10. அதிக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும். இது உண்மையல்ல, வயிற்றில் வளரும் குழந்தைக்கும், முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்றவை முதல் மூன்று மாதங்களில் வழக்கமானதுதான். ஆனால் அதிக வாந்தி என்பது தாயின் உடல்நிலை, வயிற்றில் இரட்டைக் குழந்தை, முத்துபிள்ளை கர்ப்பம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.
 11. இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும். இதுவும் உண்மையல்ல, தாய் மற்றும் குழந்தையின் ரத்த விருத்திக்காக இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. அதற்கும் குழந்தை கருப்பாக பிறப்பதற்க்கும் எந்த தொடர்பும் இல்லை.
 12. கர்ப்ப காலத்தில் பாப்பாளி அன்னாசி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட கூடாது. இதுவும் உண்மையல்ல, மருத்துவர்கள் அனைத்து வகை பழங்களையும் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். ஆனால் எதையும்  அளவாக எடுத்துக்கொண்டால் நல்லது. 
 13. இரட்டைப்படை மாதங்களில் பயணம் செய்ய கூடாது. இது ஓரளவிற்கு உண்மை, இது எதற்காக சொன்னார்கள் என்றால் பிரசவத்திற்காக நீங்கள் வெகு தொலைவில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் 34 வாரங்கள் முடிவடைவதற்குள் சென்று விட வேண்டும். 34 வாரங்கள் முடிவடைந்ததும் ஒரு சில பிரச்சனைகள் சில பெண்களுக்கு ஏற்படுகின்றன. இதனால் தான் பயணம் செய்ய கூடாது என்கிறார்கள்.
 14. சுகபிரசவம் ஆகவேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும் . இது உண்மையல்ல, உடலுறவு கொண்டால்தான் சுகபிரசவம் ஆகும் என கூறுவது முற்றிலும் தவறு. இது அவரவர் மனம் சார்ந்தது. இதற்கும் சுகபிரசவதிற்க்கும் தொடர்பு இல்லை.
 15. பால் நிறைய சுரக்க பூண்டு அதிகம் சாப்பிட வேண்டும். இதுவும் உண்மையல்ல, பூண்டு பால் சுரக்க எவ்விதத்திலும் உதவுவதில்லை. பூண்டு சாப்பிடுவதால் தாய்பாலில் ஒருவித மணம் மற்றும் சுவை சேர்கிறது. இதன் காரணமாக குழந்தை அதிக பாலை குடிக்கிறது. குழந்தை பாலை அதிகம் குடிக்க குடிக்க தாயின் மார்பகத்தில் அதிகம் பால் சுரக்கும் என்பதே உண்மை.
 16. உணவில் நெய் அதிகம் சேர்க்க வேண்டும், அப்பொழுதுதான் பிரசவ காயம் விரைவில் ஆறும். இதுவும் உண்மையல்ல, நெய் அதிகம் சாப்பிட்டால் உடலின் எடை தான் அதிகரிக்கும்.
  மனதைக் குழப்பும் இது போன்ற கட்டுக்கதை விஷயங்களை நம்பி கொண்டிருக்காமல் எப்போதும் மனதை அமைதியாக வைத்து இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல இசை கேட்டல், நல்ல புத்தகங்களை படித்தல் போன்றவை உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
  உங்களிடம் இருந்து ஒரு புது உயிர் இந்த உலகத்தை காணப்போகிறது என்ற பரவசமே மேலோங்கி இருக்க வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு தான் என்பதை மனதில் பதிய  வைத்துக்கொண்டால் பிரசவ நேரத்தில் ஏற்படும் தேவையில்லாத பயத்தை விரட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here