நீ
என்னைப் பார்த்துக்
கேட்ட ஒரு கேள்வி
என்னைப்
பிடிக்கிறதா?
பின்
வந்ததெல்லாம்
எனக்கு இது பிடிக்கும்
என்பது மட்டுமே
எத்தனை காலம்
ஓடிவிட்டது
இப்படியே
ஏய்”” என்ற குரல்
எனக்கு வேதம் ஆனது
ஆங்”” என்ற சொல்
திருநாமம் என்றானது
உணவு, உடை, உறைவிடம்
எல்லாம் இருக்கிறது
என்றாலும்
எதுவோ
வெற்றிடம் காட்டுது
உனக்குப் பிடித்ததை
பேசென்று கேட்டதில்லை
செய்யென்று
சொன்னதில்லை
எப்போதேனும்
தோன்றும்
தண்ணீர் கேட்க
தைலம் தேய்த்து விட
தேனீர் வைக்கச் சொல்ல
இதோ
ஏய்” எனும் வேதம்
ஒலிக்கிறது
உள்ளுக்குள் குமுறியழும்
ஒரு
ஒற்றைக் குரலை
உதறித் தள்ளி விட்டு
ஆங்”” என்ற
தெய்வத் திருநாமத்தோடு
ஓடுகிறேன்.