ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-12

0
221

ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்?
பகுதி-12

அனைவருக்கும் பொதுவான இந்த உலகம்,
தனிப்பட்ட முறையில் காணும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு போராட்டக் களமே ஆகும்!

இங்கே வாழ்தலுக்கு தேவையான ஒவ்வொன்றையுமே, அதை அடைவதற்கான போராட்டங்களின் வாயிலாகவே பெற வேண்டியதாக இருக்கிறது.
இந்த உலகத்தில் நாம் முன்னெடுக்கும் ஒரு இலக்கினில் ஜெயிப்பதற்கு மட்டுமல்ல,
வாழ்க்கை எனும் நெடிய பயணத்தில் உயிர் வாழ்வதற்கும், தொடர்ந்து பயணிப்பதற்குமே,
சில ஆயுதங்கள் உடனிருப்பது கட்டாயமாகிறது.
அதில் முதன்மையான ஆயுதம்,
முக்கியமானதொரு ஆயுதம் கல்வி என்பதாகும்.

இந்த உலகம் ஒரு போராட்ட களமே! நம்புங்கள்.
இந்தப் போராட்டக் காலத்திற்குள் உங்கள் குழந்தைகளிடம் கல்வி என்ற ஆயுதத்தை கொடுத்து அனுப்பி வையுங்கள்.
அது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு பிரம்மாஸ்திரம் ஆகும்! எந்த ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக அவர்களை இந்த போராட்ட களத்தினில் தனித்து விட்டுவிடாதீர்கள்.
அது உங்கள் குழந்தைகளுக்கு சரணடையும் மனோநிலையையும், நிலைமையையும் கொடுத்துவிடும்.

எந்த சூழ்நிலையிலும் தடையில்லா கல்வியை உங்கள் குழந்தைகளுக்கு உறுதிப்படுத்துங்கள்.
அது ஒன்றே அவர்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்.

உலகை ஆண்ட ஒவ்வொரு பேரரசர்களையும் வழிநடத்தியது, கல்வியறிவையும், சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த மதிநுட்பம் படைத்த மந்திரிகள் தான், என்பததினை மறந்து விட வேண்டாம்.

விவசாயமும், குல தொழிலுமே பிரதானமாக இருந்த காலகட்டங்களில், அதனையே தங்கள் குழந்தைகளுக்கும் வாழ்வியல் கல்வியாக சொல்லிக்கொடுத்தார்கள்.
ஆனால் அவரவர் தகுதிக்கு தகுந்த தொழிலையும், அவரவர் விரும்பும் தொழிலையும் தேர்ந்தெடுத்துகொள்ளலாம்,
எனும் சமத்துவ நிலை ஏற்பட்டபோது,
அதனை அடைவதற்கு கல்வியே பிரதானமான ஒரு ஆயுதமானது.

இதில் இன்சூரன்ஸ் என்பது யாதெனில், நீங்கள் எதை விரும்புகிறீர்களோ? நீங்கள் எதனை உங்கள் குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுக்க விரும்புகிறீர்களோ? அதனை உறுதிப் படுத்துதல் என்பதே பொருளாகும்.
வாங்கிக்கொடுத்துவிடுவேன் என்ற வார்த்தைக்கும்,
உறுதிபடுத்தி வைத்துவிட்டேன் என்கின்ற வார்த்தைக்கும் பொருள் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு பிள்ளைக்கு அவன்தன் தந்தை கொடுக்கும் நம்பிக்கை என்பது எப்படியிருக்கவேண்டும் எனில்..
நான் உன் வாழ்க்கையில், உன்னோடு இல்லாமல் போனாலும் கூட,
உன் வாழ்க்கையில் உனக்கு தேவையானதையெல்லாம் எந்த குறையுமில்லாமல் நீ பெறுவதற்கும்,
நீ ஆசைப்பட்ட வாழ்க்கையினை அடைவதற்கும், தேவையான எல்லாவற்றையும் நான் உறுதி செய்துவைத்துவிட்டேன் .
என்று கொடுக்கும் உத்திரவாதத்தை விட, அந்த குழந்தைக்கு வேறு எதுவும் நம்பிக்கையை கொடுத்து விடாது.

“நீ என்னவாகப் போகிறாய்?”
என்று முதன்முதலாக ஒரு குழந்தையிடம் கேட்கப்படும்போது அந்தக் கேள்விக்கு அந்த குழந்தையிடத்தில் பதில் இருக்காது,
அது ஒரு வயது.

“நீ என்னவாக போகிறாய்?”
என்ற கேள்வியை இன்னொரு காலகட்டத்தில் அந்த குழந்தையிடம் கேட்கப்படும்போது… டாக்டர், போலீஸ், டீச்சர், என்று தான் பார்த்து பிரமித்து வியந்தவர்களை போல ஆகவேண்டும், என்ற ஆர்வத்தில் பதில் சொல்லிவிடும்.!
அது ஒரு வயது.

ஆனால் நீ என்னவாக போகிறாய்?
என்னும் தன் மனதினில் கிடக்கும் நீண்டகால கேள்விக்கு ஒருநாள் அந்த குழந்தை சுயமாய் பதில் கண்டுபிடித்துவிடும். அதுவே போராட்டக் களத்திதினில் குழந்தை முதல் அடியை எடுத்து வைக்கும் வயது.

நீங்கள்தான் உங்கள் முழந்தையின் மனதினில் முதன் முதலாக “நீ என்னவாகப்போகிறாய்?” என்ற கேள்வியை எழுப்பியவர்!

நீங்கள் தான் முதன் முதலாக உங்கள் குழந்தையின் மனதிற்குள் அந்த விதையினை போட்டு வளர்தெடுத்தவர்.!

நீங்கள் தான் முதன் முதலாக உங்கள் குழந்தையை கனவு காண தூண்டிவிட்டவர்.

இப்போது அதை பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக்கொண்டு உங்கள் குழந்தை தயார் நிலையில் நிற்க்கிறது,
அதனை வாங்கிகொடுக்க நீங்கள் தயார் நிலையில் இருக்கிறீர்களா?
அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவைத்திருக்கிறீர்களா? என்பதை வைத்தே உங்கள் குழந்தையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இங்கே ஒரு குழந்தை தன் கனவினை அடையாளம் கண்டு, அதனை நனவாக்க முயற்சிக்கும் பருவமும், காலமும் வரும்போது…
அதற்கு தகுதியான மற்றும்
ஆசைப்பட்ட கல்வியினை பயிலும் குழந்தைகளைவிட,
திணிக்கப்பட்ட கல்வியினை பயிலும் குழந்தைகள் தான் அதிகம்.

அதனால் பிடித்த வேலையை செய்பவர்களைவிட,
கிடைத்த வேலையை செய்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

அதனால் தனது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பும், ஒரு மேடையும் கிடைக்காமல் அதை தனக்குள்ளேயே தேக்கிவைத்திருந்து அதை தன் குழந்தைகள் மூலமாக வெளிப்படுத்த ஆசைப்படுவோரும், ஏமாற்றமடைவோரும், அதிகமாக இருக்கிறார்கள்.

இங்கே இன்னொருவர் வாழ்க்கையை வாழ்வதற்கும், இன்னொருத்தருக்காக வாழ்வதற்கும் தான் அதிகமாக கற்பிக்கப்படுகிறது.
தன்னைபோல வாழ்வதற்கு பெரியதோர் முயற்சி தேவைப்படாது.
ஆனால் இன்னொருவர் போல வாழ்வதற்குதான் பெரியதொரு முயற்சி தேவைப்படுகிறது.

உங்கள் குழந்தை பிறந்த அன்றே, குழந்தையை மட்டுமல்ல, குழந்தையோடு சேர்த்து, அதன் கல்வி, திருமணம் போன்ற அனைத்து பொறுப்புகளும் சேர்த்துதான் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. எப்போது செய்தாலும் அதை நீங்கள் தான் செய்தாக வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதிலிருந்து தப்பிப்பதற்கும் வழியில்லை.

ஆனால் உடனே திட்டமிடுவதால்,
உங்களுக்கு தேவையான அவகாசம் இருக்கிறது.
அதனால் தெளிவாகவும், திடமாகவும் திட்டமிடலாம்.
அதே சமயம் திட்டத்திற்கான தொகையும் சிறிய அளவில்தான் இருக்கும்.
அதுவும் குழந்தை பிறந்த நாள் முதலே அதற்கான திட்டங்களை வகுப்பதும் உறுதிப்படுத்தும் நீங்கள் உங்கள் குழந்தைக்காக கொடுக்கும் முதல் பரிசாகும்.

நிறைபேருக்கு இந்த விசயத்தில் மாற்றுக்கருத்து இருக்கும்.
“அட இப்பதாம்பா பிறந்திருக்கு, உடனே இதைபத்தியெல்லாம் யோசிக்கனுமா?
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் குழந்தை வளரடும் பார்கலாம்” என்பார்கள்.

சரி அந்த கொஞ்ச நாட்களுக்கென்று ஏதாவது கால நிர்ணயம் செய்து வைத்திருக்கிறீர்களா?
கிடையாது.
இது தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் ஒரு மனோபாவம்.
மற்றும் இன்னும் காலமிருக்கிறதே அதற்குள் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் எனும் அதீத நம்பிக்கை.

நண்பர்களே காலம் அந்த வாய்பினை உங்களுக்கு வழங்கினால், நீங்களும் உங்களை நம்பியிருப்பவர்களும் பாக்கியசாலிகளே,

இல்லையென்றால் உங்களை நம்பியிருப்பவர்கள் ஒரு துரதிஷ்டசாளிகளாவார்கள்.

ஏனென்றால் தள்ளிப்போடப்படும் ஒரு காரியத்திற்கு முடிவு என்பது கிடையாது.
ஆனால் தள்ளிப்போடப்படும் விசயங்களால் சில விபரீதங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு.
எச்சரிக்கை தேவை!

பார்க்கலாம் அடுத்த வாரத்தில்… தொடரும்….

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here