என்றும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான கவிதை!

0
112

மைவிழியார் மாட்டு மையல் கொண்ட
மைந்தர்கள் மங்கையரின் அசைவு ஒவ்வொன்றையும் காண ஏங்குவர்; கண்ட பின்பு உவகையடைவர்.
மறைந்தால் மடிந்து போவர்;
தோன்றினால் உயிர் மீள்வர்!
இஃது என்றுமுள ஓர் இயல்பாம்!

இங்கு ஒரு காட்சியைக் காண்போம்:

மழை வழங்கிய கொடையால் நிலப்பரப்பில் எங்கெங்கு காணினும் பசுமை!

மண்மகள் சிலிர்த்தெழுந்து தன் மகிழ்ச்சியை மரங்களிலும், செடி கொடிகளிலும் நீர்த்தடாகங்களிலும் வண்ண வண்ண மலர்களால் வெளிப்படுத்துகிறாள்.

பூக்களில் கழுநீர் என்றொரு வகை. அவற்றுள் சிவந்த நிறமுடையவை ‘செங்கழுநீர்’ எனப்படும். (Water Lilly ஒரு காலத்தில் இந்த மலர்கள் சுற்றிலும் நிறைந்து காணப்பட்டதால் ‘செங்கழுநீர்ப்பட்டு’ என்றழைக்கப்பட்ட ஊர் இன்று செங்கல்பட்டு என்று திரிந்து விட்டது!)

இன்னும் முதிர்ச்சியடையாத இளங்காளை ஒருவன் மலர்கள் நிறைந்திருக்கும் ஒரு சோலைக்குள் வருகிறான்.
மலர்ந்து விரிந்த செங்கழுநீர்ப்பூ ஒன்று அவன் கண்களில் படுகிறது.
அதன் அழகில் மயக்குண்ட அவனை தென்றல் தழுவுகிறது.
அதே தென்றல் மலரையும் தாலாட்டுகிறது.
அசைந்தாடும் அந்த மலர் அவனை
‘வா வா’ என்றழைப்பது போலிருக்கிறது!

அவன் அதை ரசித்துப் பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு அகல்கின்றான்.

சற்று தொலைவு சென்றவன் கொலுசுச் சத்தம் கேட்டுத் திரும்பி நோக்குகிறான்.

இவன் மனதில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் ஓர் இளநங்கை அந்தச் சோலைக்குள் பருவம் தனக்களித்த எழிலேந்தி மலர்ப்பாதங்கள் மண்ணில் பதித்து ஒய்யாரமாக நடந்து வருகின்றாள்.

வந்தவள், சற்று முன் இவன் நின்று ரசித்தானே,
அதே செங்கழுநீர்ப் பூவைத் தன் தளிர் விரல்களால் அதன் மெல்லிய தண்டைத் திருகித் தன் கொண்டையில் சொருகிக் கொள்கிறாள்!

அவள் பூவைத் திருகியதும் சொருகியதும் மலரை மட்டுமல்ல; தன் ஆருயிரையும்தான் என்று மலைத்து நிற்கிறான் இந்த முதிரா இளைஞன்!

‘முதிரா இளைஞர்- இன்னும் தீதும் நன்றும் அறியாத இளங்குமரன்!

‘முருகில் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்

திருகிச் சொருகும் குழல் மடவீர்!
செம்பொற் கபாடம் திறமினோ!’

முருகில்= தேன் நிறைந்த

முதிரா இளைஞர்= இன்னும் உலகம் தெரியாத வாலிபன்

குழல்= கூந்தல்
மடவீர்= பெண்களே

செம்பொற் கபாடம்= தூய தங்கத்தால் செய்யப்பட்ட கதவு

திறமினோ= திறவுங்கள்!

போர்க்காட்சிகளையே பெரிதும் கூறும் பரணி வகை சிற்றிலக்கியமான ‘கலிங்கத்துப்பரணி’ நூலில்தான் இந்தக் கவிதை! இயற்றியவர் ஜெயங்கொண்டார்.

இளைஞருடைய உயிர் ஆருயிர்.
திருகிச் சொருகியது அந்த இளைஞனின் ஆருயிரை!

என்றும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான கவிதை!
முப்பதாண்டுகளுக்கும் மேலாக மனதில் நிலைபெற்றக் கவிதை!

‘திருகிச் சொருகும்!’

தமிழன்புடன்,

மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here