தக்காளி ஊத்தப்பம்
சிறிது எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். அரைக்காமல் அப்படியே ஊத்தப்ப மாவில் கலந்து குட்டிக் குட்டி ஊத்தப்பங்களாக வார்க்கவும்.
பாலக் ஊத்தப்பம்
பாலக் கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து தேவையான உப்பு, மிளகு தூள், சீரகத் தூள் சேர்த்து மசிக்கவும். அதை மாவில் கலந்து ஊத்தப்பங்களாக வார்க்கவும்.
தேங்காய் ஊத்தப்பம்
சிறிது எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து, மாவில் கொட்டி, ஊத்தப்பங்களாக வார்க்கவும். மேலே சிறிது தேங்காய்த் துருவலும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியும் தூவவும்.
கேரட் ஊத்தப்பம்
எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து, கேரட் துருவலை ஒரே பிரட்டு பிரட்டி, உடனே அடுப்பை அணைத்து மாவில் கலந்து ஊத்தப்பங்களாக வார்க்கவும். மேலேயும் சிறிது கேரட் துருவல் தூவவும்.
பொடி ஊத்தப்பம்
ஊத்தப்பமாக ஊற்றியதும், ஒரு பகுதியில் மட்டும் இட்லிப் பொடியை நன்கு தூவி, அழுத்திவிட்டு, வெந்ததும் பரிமாறவும்.