ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி -2

1
350

சென்ற தொடரில் “நீங்கள் உங்கள் குடும்பத்தினர் சந்தோசத்திற்காக வாழ்பவரா?”
அல்லது “உங்கள் சந்தோசத்திற்காக உங்கள் குடும்பத்தை பயன்படுத்திக் கொள்பவரா?”
என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு..
அதன் கீழே இரண்டு பதில்கள் கொடுக்கப்பட்டு.
அதில் ஏதேனும் ஒரு பதிலை நேர்மையாக தேர்வு செய்யுமாறும்…
அந்த பதிலை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மதிப்பீடு செய்துவிடலாம்.
என்றும் கேட்டிருந்தோம்.

அதில் இரண்டாவது பதிலை நீங்கள் தேர்வு செய்திருந்தால்..
நீங்கள் உங்கள் குடும்பத்தினர் சந்தோசத்திற்காகவே வாழ்பவர் என்றும்..

முதலாவது பதிலை நீங்கள் தேர்வு செய்திருந்தீர்கள் என்றால்..
நீங்கள் உங்கள் சந்தோசத்திற்காக மட்டுமே உங்கள் குடும்பத்தினரை பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். என்றும்.
மதிப்பீடு செய்திருந்தோம்.

இதனை படித்த பிறகு உங்களுக்கு கோபம் கூட வந்திருக்கலாம்.
ஆனாலும் என்ன செய்வது?
நிஜம் அப்படிதானே இருக்கிறது.

நண்பர்களே..
எப்போதுமே ஒரு உண்மையை அதன் வடிவத்திலேயே ஏற்றுக்கொள்வதென்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் வேப்பங்காயாய் கசக்கதான் செய்யும்.
ஆனால் கசப்பான மருந்துகள்தான்
மனம் உவந்து ஏற்றுக்கொள்ளப்படும்போது நல்லதொரு பலனை தரக்கூடியது என்பது மருத்துவ நியதி.
அப்படி தான் இந்த பிரச்சனையையும் அனுகுதல் வேண்டும்.

எந்தவொரு பிரச்சனைக்கும் நமக்கு சாதகமான பதிலை தேடுவதைவிட..
தீர்வுக்கான பதிலை தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்டால் அந்த பிரச்சனையை அப்போதே சரிசெய்து கொள்ளலாம்.

அட போங்கய்யா நீங்களும் உங்க மதிப்பீடும்.
அதுக்காக என்னை பார்த்து நீங்கள் எப்படி என்னோட சந்தோசத்திற்காக என் குடும்பத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்?
என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

நான் என் குடும்பத்திற்காக நேரம், காலம் பார்க்காமல் உழைக்கிறேன்.
என் மனைவி, குழந்தைகள் மீது உயிரையே வச்சுருக்கேன்.
ஆடம்பரமான வீட்டுல சகலவசதியையும் செய்து கொடுத்து அவங்களை சந்தோசமா வைத்திருக்கிறேன்.
பொண்டாட்டி புள்ளைங்க எதையாவது ஆசைப்படுறாங்கன்னு தெரிஞ்சாலே போதும் அவங்க வாய்விட்டு கேட்குறதுக்கு முன்னாலேயே அதை வாங்கிகொடுத்திருறேன்.
லட்ச லட்சமா பீஸ் கட்டி இந்த ஊரிலேயே பெரிய ஸ்கூல்லதான் என் குழந்தைகளை படிக்க வச்சுக்கிட்டிருக்கேன்.
அடிக்கடி அவங்களை எங்கையாவது சுற்றுலா கூட்டிட்டு போறேன். சந்தோசப்படுத்துறேன்.
என் உலகமே அவங்கதான்னு வாழ்ந்துகிட்டிருக்கேன்.
என்னை போயி நீங்கள் எப்படி என்னோட சந்தோசத்திற்காக என் குடும்பத்தை பயன்படுத்திக்கிட்டிருக்கேன்னு வாய் கூசாமல் சொல்லலாம்?
என்று உண்மையாகவே நீங்கள் கோபப்படலாம்.

நியாயம் தான். இத்தனை மகிழ்சியாக குடும்பத்தை வைத்திருக்க போராடும் உங்களை பார்த்து இப்படியொரு வார்த்தையை சொன்னால் கோபம் வரத்தான் செய்யும்.
ஆனாலும் என்னசெய்வது..
நிஜம் அவ்வாறாகதானே இருக்கிறது நண்பரே.!

சரி இந்த விசயத்தை
கொஞ்சம் வேறொரு விசயத்தோடு சம்பந்தப்படுத்தி பார்க்கலாம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நண்பர்களோடு உங்கள் தலைமையில் மாதத்திலோ..
அல்லது வருடத்திலோ ஓரிரு நாட்கள் சுற்றுலா செல்கிறீர்கள். அவர்களோடு மகிழ்ச்சியாக சுற்றுலாவை கொண்டாடுகிறீர்கள்..
நீங்களும் மகிழ்சியாக இருக்கிறீர்கள்.
உங்கள் நண்பர்களையும்
மகிழ்சியாக வைத்துகொள்கிறீர்கள்.
நீங்கள் அங்கே உங்கள் நண்பர்களுக்காக செய்துவைத்திருந்த ஏற்பாடுகலெல்லாம் அவர்களுக்கு அளவில்லா சந்தோசத்தையும், உங்கள் மேல் மிகப்பெரிய மரியாதையையும் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.
அடுத்து இப்படியொரு மகிழ்சியான தருணம் எப்போது கிடைக்குமோ என நண்பர்கள் ஏங்கும் அளவிற்கு அது ஒரு இன்ப சுற்றுலாவாக மாறிவிடுகிறது.

சரி!
அதற்கும் உங்கள் குடும்பத்தினரோடு மகிழ்சியை பகிர்ந்துகொண்டு அவர்களையும் மகிழ்சியாக வைத்துகொள்வதற்கும்
என்ன வித்தியாசம் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

நாள் கணக்கு தான்!
உங்களுக்கு பிடித்த நண்பர்களோடு ஓரிரு நாட்கள்.
உங்கள் குடும்பத்தினரோடு வருட கணக்கில்.
அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒருவேளை உங்கள் நண்பர்களோடு இப்படியான மகிழ்சிகளை பகிர்ந்துகொள்ள நீங்கள் அவர்களோடு இல்லாது போனாலும்… அங்கே உங்கள் இடத்தை நிரப்புவதற்கு வேறு யாராவது புதியவர் ஒருவர் வந்துவிடலாம்.
அங்கே நீங்கள் இல்லை என்கின்ற ஒரு குறையை தவிர..
மற்றபடி அங்கே நடக்கும் கேளிக்கைகளிலோ…
வேடிக்கை விளையாட்டு போன்ற பிற சந்தோசங்களிலோ எந்தவொரு பாதிப்பும் நிகழ்ந்துவிடாது.

ஆனால் உங்கள் குடும்பத்தில்?
உங்களையே நம்பியிருக்கும் உங்களின் அன்புக்குறியவர்களுக்கு நீங்கள் இல்லாமை என்பது மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்துமா?
அல்லது உங்கள் இடத்தை வேறு ஏதனாலும் நிரப்பிவிட முடியுமா சொல்லுங்கள்?

ஆறிலிருந்து அறுபது வரை என்ற ஒரு திரைபடம்.
அதை ஒரு படமாக பார்பதைவிட ஒரு பாடமாகவே பார்க்கலாம் என்றே சொல்லுவேன்.
ரஜினிகாந்த் வளர்ந்துவந்த காலகட்டங்களில் நடித்தது.
ஒரு மனிதனுக்கு அவன் சொந்த வாழ்க்கையில் நிகழும் போராட்டங்களும், அதனால் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்களும், அவனை ஒரு ஞானியாகவே மாற்றக்கூடிய வல்லமை கொண்டவை என்பதை ஒரு பாடம் போலவே சொல்லகூடிய அழகிய தமிழ் சினிமா அது.!

அதில் ரஜினியின் தந்தையான வீட்டின் தலைவர் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருப்பார்.
எல்லாவித வசதிகளும் நிறைந்த ஆடம்பரமான வீட்டில் வாழ்க்கை.
பிள்ளைகள் நான்கு பேரையும் கான்வெண்டில் தான் படிக்கவைத்துகொண்டிருப்பார்.
குடும்பத்திற்கு சகல வசதிகளையும் செய்துகொடுத்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பார்.
வீட்டில் சந்தோசத்திற்கு ஒரு குறையுமிருக்காது.

அதே சமயம் வெளியில் நண்பர்களோடும் பார், கிளப் என்று உற்சாகமாக நேரத்தை செலவிடுவார்.
நண்பர்கள் மத்தியிலும் மதிப்பு வாய்ந்த மனிதராக போற்றப்படுவார்.
வாழ்க்கை சந்தோசமாகவும், உற்சாகமாகவும் போய்கொண்டிருக்கும்.

ஒரு விபத்தில் அவர் இறக்க நேரிடும்.
அதன்பிறகு அவரை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கை தலைகீழாக மாறும்.
ஆடம்பர வீட்டை துறந்து ஒரு குடிசையில் வாழவேண்டிய நிலைக்கு தூக்கி எரியப்படுவார்கள்.
பிள்ளைகளின் கான்வெண்ட் கல்வி ஒரு கனவு போல முற்றுப்பெறும்.
குடும்பத்தின் மூத்தபிள்ளையான ரஜினியும், அவர் அம்மாவும் கூலி வேலைக்கு போனால்தான்
மற்ற மூன்று பிள்ளைகளையும் அரசாங்க பள்ளியிலாவது படிக்கவைத்து வாழ்க்கையை நகர்த்தமுடியும் எனும் நிலைக்கு தள்ளப்படும் அந்த குடும்பம்.

இப்போது சொல்லுங்கள்.
அந்த வீட்டின் தலைவர் அவரை நம்பியிருந்த குடும்பத்தினர் சந்தோசத்திற்காக வாழ்ந்தாரா?
அல்லது தனது சந்தோசத்திற்காக தன்னை நம்பியிருந்த குடும்பத்தை பயன்படுத்தி கொண்டிருந்தாரா?

வெளியில் நண்பர்களோடு அவர் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதற்கும்,
தன்னை நம்பியிருந்த தன் குடும்பத்தினரோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்?

நாள் கணக்கு தான்.
நண்பர்களோடு ஓரிரு நாட்கள்.
குடும்பத்தினரோடு வருடக்கணக்கில்.
அவ்வளவுதான் வித்தியாசம்.

அட அது சினிமாயா!
வெறும் ரெண்டு மணிநேர கதை. அவ்வளவுதான்.
நீ என்னமோ
அதைபோயி இத்தனை சீரியசா விளக்கி சொல்லிக்கிட்டிருக்க?
என்று நீங்கள் கேட்கலாம்.

நண்பரே…
லட்சோப லட்சம் குடும்பங்களின் போராட்டங்களிலிருந்து
ஒரு சில குடும்பத்தின் போராட்டத்தை சொல்வதாகத்தான் பல சினிமாக்கள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சினிமாவை விட்டு இரண்டு மணி நேரத்தில் வெளியேறிவிடலாம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அது முடியாது.
யாரோ ஒருவரின் வாழ்க்கையைதான் சினிமாவாக காட்டுகிறார்கள்.
ரெண்டு மணி நேரம் அழவைத்து முடித்து விடுகிறார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கதைகள் முடிவே தெரியாமல் நம்மை சுற்றி இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி எனக்கு தெரிந்து என்னை மிகவும் பாதித்த ஒரு குடும்பத்தின் கதை சொல்கிறேன்.

வரும் செவ்வாய் வரை காத்திருங்கள்…. தொடரும் ….

கூ, சுரேஷ்வரன்

 “இன்சூரன்ஸ் ஆலோசகர்”
   செல் – 9787323994

1 COMMENT

  1. மிக அருமை..சுரேஷ். வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் வெற்றியுடன் தொடரட்டும். *மகிழ்ச்சி*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here